மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

சிறப்புச் செய்தி: கொங்கு மீது கவனம் குவிக்கும் ராமதாஸ்

சிறப்புச் செய்தி: கொங்கு மீது கவனம் குவிக்கும் ராமதாஸ்

ஆரா

ஒரு காலத்தில் வடக்கே வன்னியர், தெற்கே தேவேந்திரர் என்ற முழக்கத்தை முன்வைத்து தென் மாவட்டங்களில் காலூன்ற முயன்றார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அது தேர்தல் வெற்றியைக் கொடுத்ததோ, இல்லையோ... தென் மாவட்டங்களில் பாமக என்ற கட்சியைப் பரவலாக எடுத்துச்செல்ல உதவியது. இப்போது பாமகவின் கவனம் தமிழகத்தின் மேற்கு திசையான கொங்கு நாட்டின் மீது குவிந்திருக்கிறது.

இப்போது பாமகவின் இளைஞரணித் தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி, வன்னிய வண்ணம் என்ற கட்சியின் முத்திரையை மாற்ற பல்வேறு செயல்திட்டங்களில் இறங்கியிருக்கிறார்.

சாதி முத்திரை ஏன்?

சில மாதங்களுக்குமுன் அன்புமணி சென்னை தி.நகர் திலக் சாலையில் இருக்கும் தனது இல்லத்தில் மூத்த பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என சுமார் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து சந்தித்து மனம்விட்டுப் பேசினார்.

அப்போது ஒரு பத்திரிகையாளர், ‘நீங்கள் தமிழகத்தின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் தொலைநோக்குப் பார்வையோடு வைக்கிறீர்கள். உங்கள் தந்தை ராமதாஸின் அறிக்கைகள் தகவல் செறிவாகவும், ஆக்கபூர்வமாகவும் இருக்கின்றன. ஆனால். உங்கள் இருவரையும் தாண்டி பாமகவில் வேறு யாருக்கும் இதுபோன்ற பார்வை இருப்பது மாதிரித் தெரியவில்லையே... மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட சாதி முத்திரை குத்தப்பட்டவர்களாகத்தானே அசலாகவே காட்சி அளிக்கிறார்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அன்புமணி, ‘பாமக உண்மையிலேயே சாதிக் கட்சி அல்ல. ஆனால் மூத்த பத்திரிகையாளர்களைக்கூட இவ்வாறு ஒரு கருத்துருவை கருத வைத்தது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டுச் சதி. இப்போது பாமகவில் பெருத்த நிர்வாக மாற்றத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். விரைவில் பாமகவின் வித்தியாசமான விஸ்வரூபத்தை நீங்கள் பார்ப்பீர்கள்’ என்று சொன்னார்.

அதன்படியே சமீப மாதங்களாக பாமகவில் வன்னியர்கள் மட்டுமல்லாமல் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் கொங்கு நாட்டின் மீது தனது கவனத்தைக்கொண்டிருக்கிறது பாமக.

சந்திப்பும் அறிக்கையும்!

அதிமுக இப்போது மிகவும் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கையில்... ராமதாஸ் அண்மையில் கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். இதன் மூலம் திமுக அணியில் பாமக இடம்பெறலாம் என்ற யூகங்கள் நிலவிய நிலையில்... சசிகலா சொத்துகளை நாட்டு உடைமையாக்க வேண்டும் என்று நவம்பர் 12ஆம் தேதி அறிக்கை விட்ட ராமதாஸ் அதில் திமுகவையும் கடுமையாக சாடியிருந்தார்.

‘தமிழகத்தின் வளங்களையும், வருவாயையும் கரையான்களாக மாறி அரித்த பாவத்திலிருந்து திமுகவும் தப்பி விட முடியாது. இன்னும் கேட்டால் 45 ஆண்டுகளுக்கு முன், திமுக வகுத்துக்கொடுத்த பாதையில் பயணித்து தான் சசிகலா உள்ளிட்ட அதிமுகவினர் ஊழல் செய்கின்றனர். சர்க்காரியா ஆணையம் அளித்த அறிக்கையை வாசித்தாலே, இன்றைய ஊழல்களுக்கெல்லாம் வழிகாட்டி திமுக தான் என்பது புரியும்’ என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

கொங்கு மீது குவியும் கவனம்!

இந்த நிலையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே நின்று அன்புமணியை முதல்வர் வேட்பாளராக்க முடிவு செய்திருக்கும் ராமதாஸ்... அதற்காக பாமகவை வட மாவட்டங்கள் தாண்டியும் பரவலாகக் கொண்டுசெல்ல செயல் திட்டம் தீட்டியிருக்கிறார்.

கொங்கு பகுதியின் விவசாயப் பிரச்னைகளுக்காகவும், அவினாசி அத்திக்கடவுத் திட்டத்துக்காகவும் பல போராட்டங்களை நடத்தியிருக்கும் அன்புமணி இப்போது தனது டீமில் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கவுண்டர் இன புள்ளிகளை கவர்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில்தான் விவசாயிகளின் காவலர் என்று இன்றும் அழைக்கப்படும் நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் தனது சிறு வயதிலேயே இணைந்து, பின் கோவை செழியனின் தமிழ் தேசியக் கட்சியில் பயணித்த பொங்கலூர் மணிகண்டன் போன்றவர்களை பாமகவுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் அன்புமணியும், ராமதாஸும்.

அதாவது திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி போன்ற ப்ராப்பர் கொங்கு பகுதிகளில் பாமக இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருந்தாலும்... சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய கொங்கு மாவட்டங்களை இப்போது உடனடியாகக் குறி வைத்திருக்கிறது பாமக. மேற்கண்ட மாவட்டங்களில் வன்னியர்களும், கவுண்டர்களும் இணைந்தால் வெற்றி கண்டுவிட முடியும் என்பதுதான் பாமகவின் கணக்கு.

இதற்காகத்தான் கொங்கு ஆளுமைகளை பாமகவுக்குள் கொண்டுவரும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் ராமதாஸ். இந்த வகையில் விரைவில் பாமகவில் இணைகிறார் பொங்கலூர் மணிகண்டன்.

கொங்கு அதிமுகவின் கோட்டையா?

இதுபற்றி மணிகண்டனிடமே பேசினோம். “கொங்கு என்பது அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சூழலில் நீங்கள் அதிமுகவில் சேராமல் பாமகவில் சேர்வது ஏன்?” என்றோம்.

“கொங்கு அதிமுகவின் கோட்டை என்பதைவிட ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்தது என்று சொல்லலாம். காரணம் அது எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்ததை ஒட்டி ஜெயலலிதாவின் கோட்டையாக ஆனது. இதன் காரணத்தை ஆராய்ந்தால்... 1970இல் கொங்கு நாட்டில் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த போராட்டத்தில் பெருமளவு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டனர். விவசாயிகளின் பம்ப் செட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை ஏற்றியதால் அவர்கள் போராடினர்.

அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவர்தான் தமிழகத்தில் முதன்முதலில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விவசாயிகளைக் கொன்ற முதல்வர். அந்த வடு கொங்கு மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டதால்தான் கொங்கு விவசாயப் பெருமக்கள் கருணாநிதியை ஜென்ம விரோதியாகப் பார்க்கத் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அது நீடிக்கிறது.

ஆனால், அதே காரணத்துக்காக எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதிமுக கடந்த இரண்டு முறை ஆட்சி அமைத்தபோதும் அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்காக துளி முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அன்று நாராயணசாமி நாயுடு, இன்று ராமதாஸ்!

இந்த நிலையில்... அன்று எப்படி நாராயணசாமி நாயுடு தலைமையில் கொங்கு விவசாயிகள் ஒன்று திரண்டார்களோ, இனி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. தமிழகத்தின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றிய புரிதல், அதற்கான தீர்வுகளைத் தரும் தெளிவான திட்டங்கள் என்று அன்புமணி இன்று கட்சி கடந்து தமிழகத்துக்குத் தேவையான ஆளுமையாகத் தெரிகிறார்.

எனவே, நாராயணசாமி நாயுடுவால் களத்துக்குக் கொண்டுவரப்பட்டு, கோவை செழியனால் வார்க்கப்பட்ட நான், இனி ராமதாஸ் அவர்களோடு இணைந்து கொங்கு முன்னேற்றத்துக்கும் தமிழக முன்னேற்றத்துக்கும் பாடுபடுவேன்” என்றார் பொங்கலூர் மணிகண்டன்.

இந்த மணிகண்டன் ஏற்கெனவே ராமதாஸ் கட்டிய அனைத்து சமுதாயப் பேரவையில் கவுண்டர் சமுதாயம் சார்பாகப் பங்கேற்றவர். இந்த நிலையில், பாமகவின் கொங்கு பாலிடிக்ஸ் பலன் அளிக்குமா என்பதை வரும் தேர்தல்தான் சொல்ல வேண்டும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017