மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

சிறப்புக் கட்டுரை: வீண் பெருமைகளைக் கொண்டாடும் மோடி அரசு!

சிறப்புக் கட்டுரை: வீண் பெருமைகளைக் கொண்டாடும் மோடி அரசு!

மோகன் குருசுவாமி

சமீபமாகவே மோடி அரசு தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் செயலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையே காரணம். எளிதாகத் தொழில் செய்தல் குறியீடு குறித்து உலகளவில் 190 நாடுகளில் உலக வங்கி ஆய்வை மேற்கொண்டது. அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட உலக வங்கியின் ஆய்வு முடிவுகளில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

தொழில் செய்தல் எளிதாக்கப்பட்டுள்ளது என்பது எதைக் காட்டுகிறது? தொழில் செய்தலுக்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், உரிமம் பெறுதல் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பதே இதன் அர்த்தமாகும். இதனால், சந்தை, உற்பத்தி, உள்கட்டமைப்பின் தரம், பணவீக்கம் போன்ற நேரடித் தொழில் சார்ந்த விவகாரங்களில் எதுவும் தாக்கம் ஏற்படுகிறதா?

ஒரு தொழிலை தொடங்குவதற்கான தேவைகள் எந்த அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உலக வங்கியின் அளவீடு ஆகும். தொழிலைத் தொடங்குவது, நிலம் வாங்குவது, மின் இணைப்பு பெறுவது, சொத்துகள் வாங்கியதைப் பதிவு செய்வது, கடனுக்கான ஒப்புதல் பெறுவது, முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு, வரி முறை, அந்நிய நாடுகளுக்கான வணிகம், ஒப்பந்தங்கள் போன்றவற்றைப் பெறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே இந்தக் குறியீடுகள் கணக்கிடப்படுகின்றன. உண்மையைச் சொன்னால் இதுபோன்ற தேவைகள் எளிதாகவே கிடைக்க வேண்டும். ஆனால் அவை அப்படிக் கிடைப்பதில்லை.

இன்றைய தொழிற்சூழலில் இதுபோன்ற தேவைகளை லஞ்சம் போல சில சமரச நடவடிக்கைகளாலேயே பெற்றுக்கொள்ள முடிகிறது. நம் நாட்டில் உரிமங்களையும் ஒப்புதல்களையும் பெறுவதற்கான நடைமுறை சரியாக இல்லை என்பது அர்த்தமல்ல. ஆனால், பணப் பரிவர்த்தனைகளும், பரிசுப் பொருள்களும், பணம் பறிப்பதும் மிகச் சாதாரணமாகவே வழக்கமாகிவிட்டது. பணம் பெற விரும்புவோருக்குப் பணத்தை வழங்கிவிட்டால் தொழில் செய்தல் மிகவும் எளிதாகிவிடுகிறது.

இந்தியாவின் உண்மை நிலவரம் என்னவென்றால், ஒரு கட்டடத்துக்கான ஒப்புதல் பெறுவதற்கு 123 நாள்கள் ஆகிறது. சிவில் விவகாரங்களில் நீதிமன்றத் தீர்வைப் பெறுவதற்கு 1,445 நாள்கள் ஆகிறது. ஆனால், நிறுவனப் பதிவு, பங்குதாரர்களைப் பாதுகாப்பதற்கான செபி ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாக விளம்பரப் பேச்சுகளும், தற்பெருமை பீற்றுதல்களும் சில நாள்களாக அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மையான தொழிற்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதே நிதர்சனம்.

ஏஜெண்டுகள், ஆலோசகர்களின் உதவி இல்லாமல் எந்தவொரு தொழிலையும் இந்தியாவில் தொடங்கமுடியாது என்ற நிலை ஆகிவிட்டது. இதன் காரணமாகவே தெற்கு டெல்லியில் செல்வம் பெருகியுள்ளது. மற்ற மாநில, மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கூட இதே நிலைதான். தொழில் ஆலோசனை நிறுவனங்களால் பல செயல்முறைகள் மூடி மறைக்கப்படுகின்றன. இதில் கார்ப்பரேட் சட்ட ஆலோசகர்கள், பட்டயக் கணக்கர்களின் பங்கு அதிகம். நாட்டில் மிகக் குறைவான மாற்றமே ஏற்பட்டுள்ளது என்பது உண்மை நிலவரத்தைக் கண்டால் புரியும்.

எளிதாகத் தொழில் செய்தலுக்கான தேவையை விட நாட்டுக்கு முக்கியமான சில குறியீடுகளும் உள்ளன. அக்டோபர் மாதத்தில் உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் ‘உலகளாவிய பட்டினி குறியீடு’ அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவின் நிலை எந்தவிதத்திலும் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இந்த அறிக்கையில், “119 நாடுகளில் இந்தியாவுக்கு 100ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் உலகளாவிய பட்டினி குறியீடு 31.4 புள்ளிகளாக உள்ளது. இந்தியாவில் பசி பட்டினியின் நிலைமை மிக மோசமான நிலையாக உள்ளதாகவும், இந்தியாவின் குறியீட்டால் தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த மதிப்பீடும் குறைவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதவளக் குறியீட்டிலும் இந்தியா மோசமாகவே உள்ளது. மனிதவளக் குறியீடு குறித்து 168 நாடுகள் அடங்கியப் பட்டியலில் இந்தியா 131ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேசப் பரிமாண வறுமைக் குறியீடு நடத்திய ஆய்வில், அடிப்படை ஊட்டச்சத்துகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படாமல் போனதே நாட்டில் வறுமைக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 64.5 கோடிப் பேர் (இந்திய மக்கள்தொகையில் 55 சதவிகிதம்) ஏழையாக உள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வளமான மாநிலங்கள் என்று கூறப்படும் ஹரியானா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கூட 40 சதவிகித மக்கள் ஏழையாகவே உள்ளனர். கேரளாவில் மட்டுமே 20 சதவிகிதத்துக்கும் குறைவான மக்கள் ஏழையாக உள்ளனர்.

இதுபோன்ற அரசின் செயல்பாடுகளை அளவிடும் குறியீடுகளைக் கணக்கில் கொண்டால் அதில் ஓர் அர்த்தமுள்ளது. உலகப் பொருளாதார மன்றம், இந்தியத் தொழில் கூட்டமைப்பு போன்ற வணிகச் சங்கங்கள், எஃப்.ஐ.சி.சி.ஐ., அசோசெம் போன்ற அமைப்புகளின் முக்கிய அளவீடுகளும் நாட்டின் நிலையை மதிப்பிட முக்கியமாக உள்ளது. அதில் மிக முக்கியமான குறியீடுதான் பொருளாதார சுதந்திரக் குறியீடு. இக்குறியீடு எளிதாகத் தொழில் செய்தல் குறியீட்டுக்கு நிகரான ஒன்றாகும்.

நாடுகளின் பொருளாதார சுதந்திரத்துக்கு ஏற்ப அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் உலகப் பொருளாதார சுதந்திர அமைப்பின் ஆண்டறிக்கையில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கு 111ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 11ஆவது இடமும், குவைத்துக்கு 19ஆவது இடமும், ஓமனுக்கு 20ஆவது இடமும், ஜோர்டனுக்கு 23ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே சவுதி அரேபியா பொருளாதார ரீதியாக மிகச் சுதந்தரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இல்லையென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள உண்மையான பிரச்னைகளை விட்டுவிட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மீது கவனம் கொள்ளாமல், மிகச் சாதாரணமான விஷயங்களைப் பெரிதாக விளம்பரப்படுத்தி, தற்பெருமை பேசிக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

நன்றி: ஸ்க்ரால்

தமிழில்: அ.விக்னேஷ்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017