மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

சிறப்புக் கட்டுரை: பைரஸியும் சினிமாவும் - 3

சிறப்புக் கட்டுரை: பைரஸியும் சினிமாவும் - 3

கேபிள் சங்கர்

டிஜிட்டலானதால் இருக்கும் பாதுகாப்பின்மை ஒரு பெரிய ரிஸ்க் என்றாலும், பெரும்பாலானவர்கள் அடிப்படை நேர்மையினால் பைரஸிக்குத் துணைப் போவதில்லை. எனினும், ஒரு சில படங்களின் வீடியோக்கள், ஏன் சில படங்களே வெளிவந்ததற்கு அங்கிருந்த மனசாட்சி இல்லாத ஒரு சில அரைவேக்காட்டு நபர்கள்தான் காரணம்.

முன்பெல்லாம் வெளிநாட்டு வீடியோக்கள் மூலம் பைரஸி வந்தது. டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சியால் இன்றைக்கு மொபைலிலேயே அட்டகாசமாகப் படமெடுக்கும் வசதி வந்துவிட்டதால் திருடுவது சுலபமாகப் போய்விட்டது. தியேட்டர் ஆபரேட்டர்களின் உதவியுடன் கேமரா பிரிண்டுகள் வெளிவர ஆரம்பித்தன. பல தியேட்டர்களை அவற்றின் சொந்தக்காரர்கள் நடத்தாமல் லீசுக்கு விட்டுவிட்டு மாதாமாதம் காசு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான பி, சி சென்டர் தியேட்டர்களில் தியேட்டர் மேனேஜரும், ஆப்பரேட்டரும்தான் எல்லாமே. இவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் மிகவும் சொற்பம். இவர்களின் தேவையோ அதிகரித்து வருகிறது. சுளையாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கக்கூடிய வாய்ப்பை யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்?

இப்படியாக தியேட்டர் பிரின்ட்டுகள் வர ஆரம்பித்தன. க்யூப், யூஎப்ஓ போன்ற நிறுவனங்கள் எந்த தியேட்டரிலிருந்து படமெடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க, சாப்ட்வேரெல்லாம் வைத்திருந்தாலும் அதைக் கண்டுபிடிக்கக் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் இதைக் கண்டுபிடிப்பதற்குக் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாவது ஆகிவிடுகிறது. சூப்பர் ஹிட் படமே மூணு வாரத்துக்கு மேல் ஓடுவதில்லை என்பதால் இனிமே யார் பைரஸி எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன என்கிற மனநிலையில் தயாரிப்பாளர்கள் போய்விடுகிறார்கள்.

இதுதான் பைரஸிக்காரர்களுக்கு சாதகமாய் ஆகிப்போனது. 24 படத்தின் பைரஸி வெளியானபோது அதன் தயாரிப்பாளர் இந்த முறையில் எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்று கண்டுபிடித்தார். பிவிஆர் பெங்களூரு என்று தெரியவந்தும், அந்த நிறுவனத்தின் மேல் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நிறுவனமோ ஏதோ போனால் போகட்டும் என்று வருத்தக் கடிதம் மட்டுமே கொடுத்தது. இவர்கள் மீது பாயாத சட்டம் எப்படிச் சின்ன தியேட்டர்காரர்கள் மீது பாயும்? நாளை அதே தியேட்டரில் இவர்களின் படத்தை வெளியிட மீண்டும் நின்றுதானே ஆக வேண்டும்? இந்தக் காரணத்தினாலும், பெரும்பாலான படங்கள் ஓடுவதில்லை என்பதாலும் இந்தப் பிரச்னையை யாரும் விடாப்படியாகக் கையாள்வதில்லை. உள்ளூர் காவல் நிலையத்தில் ஆபரேட்டர் கம்ப்ளெயின்ட் கொடுப்பதோடு இது முடிந்துவிடுகிறது.

புதிய ஓட்டைகள்

தியேட்டர் பிரின்ட்டெல்லாம் மீறி, உடனடி பிரின்ட்டுகள் வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படும் இடத்திலிருந்தே வர ஆரம்பித்தன. ஏற்கெனவே சொன்னபடி வீடியோ கேசட் காலத்திலேயே இந்தப் பிரச்னை இருந்தது. அது இன்றைக்கும் தொடர்ந்துவருகிறது. பெரும்பாலான சிறு முதலீட்டுப் படங்கள் எஃப்.எம்.எஸ் விற்பனையாகும்போதே வெளிநாட்டு தியேட்டர், வீடியோ, சாட்டிலைட், இன்டர்நெட் என அத்தனை உரிமைகளையும் அடியில் கண்ட சொத்துகள் அத்தனையும் என்கிற ரீதியில் எழுதி வாங்கிக்கொண்டு போய்விடுவதால் படம் வெளியான அன்றைக்கே அவர்கள் டிவிடி போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் அங்கிருந்து பிரின்ட் போட்டு சென்னைக்கு அனுப்புவார்கள் ஆனால் டெக்னாலஜியும் அதற்கான செலவுகளும் அதிகம் என்பதால், ரைட்ஸ் வாங்கிய அன்றே, ஹார்ட் டிஸ்க்கை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே, இங்கேயே மாஸ்டர் காப்பி எடுத்து விற்பனைக்குக் கொடுத்துவிட்டுத்தான் ஃப்ளைட் ஏறுகிறார்கள். அங்கே விற்பது தனி.

பல சின்னப்படங்கள் சொன்ன தேதியில் வெளியாகாமல் தள்ளிப் போய்விடும் சமயங்களில் இம்மாதிரியான முறையில் படங்கள் வெளியான கதை அதிகம். படம் வெளியே தெரியாத காரணத்தால், பைரஸியும் வந்தது தெரியாமல் போய்விடும்.

இணையத்தால் வந்த மாற்றம்

இணையத்தின் அபார வளர்ச்சி, சிடி, டிவிடி வியாபாரத்தை மொத்தமாக அழித்தது. இன்றைக்கும் டிவிடியில் படம் பார்க்கிறார்கள் என்றும், திருட்டுத்தனமாகப் பிரதி எடுத்தவர்களை கைது செய்ததாகவும் தகவல்கள் வருகின்றன. என்றாலும், பைரஸி மட்டும் குறையவேயில்லை. இணையம் இவர்களை இன்னமும் ரகசியமாக்கி வியாபாரத்தைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமும் வெளிநாட்டு உரிமைதான் என்று சொல்லலாம். பெரும்பாலான பெரிய முதலீட்டுப் படங்கள் இங்கே வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இரவே வெளிநாடுகளில் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் படங்களின் தியேட்டர் பிரின்ட் உடனடியாய் டிஜிட்டல் கேமராக்களால் எடுக்கப்பட்டு டோரண்டுகளில் அப்லோட் செய்யப்படுகிறது.

சின்னப்படமாக இருந்தால் இரண்டொரு நாளில் ஹைடெபனிஷன் பிரின்ட்டும் (ஹெச்டி) பிரின்ட்டும், பெரிய படமாக இருந்தால் ஒரு வாரத்தில் தரமான ஹெச்டி ப்ரின்ட்டும் வந்துவிடுகின்றன. வெளிநாட்டு உரிமையை விற்பதால்தானே இப்படி வருகிறது என்று கேட்பீர்கள். யோசித்துப் பாருங்கள்; 50 அல்லது 60 கோடி ரூபாய் போட்டுப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்குச் சுமார் 10 - 15 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு உரிமையில் கிடைக்கும் எனும்போது இந்த பைரஸியெல்லாம் அவர்கள் கண்ணுக்கே தெரியாது. பைரஸி இல்லையென்றால் இன்னமும் அதிகம் சம்பாதிக்கலாமே என்று சொல்லலாம். ஒருவேளை படம் ஓடாமல் போய்விட்டால் முன்பு வாங்க இருந்த விலையில் பத்து சதவிகிதம்கூட வியாபாரம் ஆகாது என்பதால் அந்த ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை.

அப்படியென்றால் வெளிநாட்டு உரிமைதான் பைரஸி விவகாரத்தில் பெரிய பிரச்னையா? அங்கே யார் இதைத் தொழிலாகச் செய்கிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்..

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 14 நவ 2017