மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

குடிநீரைப் பாதுகாக்காத எடப்பாடி ஆட்சி!

குடிநீரைப் பாதுகாக்காத எடப்பாடி ஆட்சி!

‘சென்னை மாநகர மக்களுக்கு, குடிநீர் கொண்டு செல்லும் ஏரிகளைப் பாதுகாக்கவில்லை எடப்பாடி பழனிசாமி’ ஆட்சி என்று மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

1868ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சோழவரம் ஏரி, தொடர் மழையால் கரை பலமிழந்திருப்பதை அறிந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சி நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் சோழவரம் ஏரியைப் பார்வையிட்டார்.

ஏரியில் என்ன பிரச்னை என்பது குறித்து நம்மிடம் பேசிய மல்லை சத்யா, “சென்னை மாநகர மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் என்பது, சோழவரம் ஏரி, கும்மிடிபூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, புழல் போன்ற ஏரிகள்தான். பாசனத்துக்கு ஏரிகளைப் பயன்படுத்திவந்த நிலையில், 1964ஆம் ஆண்டு சோழவரம் ஏரியிலிருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் எடுத்துச் சென்றார் மக்கள் முதல்வர் காமராஜர். அதன்பிறகுதான் படிப்படியாக, பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் ஏரிகளிலிருந்து தண்ணீர் எடுத்து, மக்கள் குடிநீர் மற்றும் மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

மன்னர் காலத்திலிருந்து இன்றுவரையில் போர்க்காலத்தில் முதலில் குடிநீரில்தான் கைவைப்பார்கள். மக்களின் குடிநீர் வாழ்வாதாரமான ஏரிகளை உடைப்பார்கள் அல்லது விஷத்தைக் கலப்பார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஏரிகளை ராணுவத்தைக்கொண்டு பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் உள்ளூர் போலீஸ்களை வைத்தாவது பாதுகாக்க வேண்டும்” என்றவர்.

மேலும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், “சோழவரம் ஏரியில் 18.85 அடி உயர்மட்டம் வரையில் நீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய நிலையில் தூர்வாராமல், முறையாகப் பராமரிக்காததால் 13½ அடியாகக் குறைந்துவிட்டது. ஏரியின் அணையும் பலமிழந்து வருவதைப் பாதுகாக்க, அணையைப் பலப்படுத்த கோடிக்கணக்கில் டெண்டர் விடப்பட்டது. ஆனால், வெளியிலிருந்து மண் எடுத்துவந்து அணையைப் பலப்படுத்தாமல், ஏரியிலிருந்த மண்ணையெடுத்து அணையில் கொட்டியதால், சமீபத்தில் பெய்த மழையில் அது கரைந்துபோய் விட்டது.

2015ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அணையின் மீது ஐந்து அடி உயரம், ஒரு அடி அகலத்தில் சுவர்கள் எழுப்ப டெண்டர்விடப்பட்டு இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால் சுவர் இன்னும் எழுப்பப்படவில்லை.

சென்னையில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை, எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என்று நிலையில்லாத அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017