மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

ஒலி வடிவில் பூரம் திருவிழா!

ஒலி வடிவில் பூரம் திருவிழா!

உலக புகழ்பெற்ற பூரம் திருவிழாவை ஆவணப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

பால்ம்ஸ்டோன் மல்ட்டி மீடியா நிறுவனம் சார்பில் ராஜீவ் பனகல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், “பூரம் திருவிழாவை நான் நேரில் பார்த்ததில்லை. ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால், ரசூல் அதைப்பற்றி விளக்கிச் சொன்ன போதுதான் அந்த பிரமாண்டம், அதன் பெருமை புரிந்தது. 10 லட்சம் மக்கள் கலந்துகொள்ள, 300 கலைஞர்கள் மூன்று மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள் என்றார். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஓர் இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன்” என்றார்.

மேலும் அவர், “அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அனுபவம். ஆனால், அதை என்னால் லைவாக பதிவுசெய்ய முடியவில்லை; பூரம் விழாவை உரிய அனுமதியுடன் லைவாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல். வரலாற்றில் இது ஒரு முக்கியமான ஆவணப்பதிவாகும். ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியைப் பதிவு பண்ணாமல் வெளியே சென்று நல்ல ஒலியைப் பதிவுசெய்து மக்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்க கடுமையாக உழைக்கிறார் ரசூல் பூக்குட்டி” என்று கூறினார்.

வைரமுத்து பேசியபோது, “ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்றுவிடாமல், தன் தாய் மண்ணின் கலாசாரம், பண்பாட்டைப் பற்றிய ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தியாவுக்குத் தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒருவனுக்கு அவனுடைய கிராமம்தான் தலைநகர். அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார். ஒலி தான் மொழி. சத்தம் எல்லாமே சங்கீதம். ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுத்துபவர். ரசூல் ஒரு சவுண்ட் இன்ஜினீயர் அல்ல. அவர் ஒரு சவுண்டு டிசைனர். இந்தப் படத்தில் மலையாளத்தின் கலாசாரத்தைச் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள். இந்தியாவே இந்தப் படத்தை கொண்டாடும்” என்று தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பூரம் திருவிழா படமாக்கப்பட்டது குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகர், “ஹாலிவுட், பாலிவுட்டை சேர்ந்த 80க்கும், மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்துக்காக பூரம் திருவிழா ஒலிகளைப் பதிவு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கேமராக்களைக்கொண்டு அந்த விழாவில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் - ட்ரெய்லரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

நாயகன் ரசூல் பூக்குட்டி பேசும்போது, “பிப்ரவரி 22ஆம் தேதி இரவு என்னுடைய வாழ்கையில் மிகவும் முக்கியமான இரவு. அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு பிரசாத் கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த 'ஒரு கதை சொல்லட்டுமா'. பூரம் திருவிழாவை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தக் கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளோம். அதற்காக படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம்” என்று கூறினார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017