மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 6

பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் - பகுதி 6

பேராசிரியர் டி.நரசிம்ம ரெட்டி

(பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஓராண்டு நிறைவை ஒட்டி வெளியாகும் மினி தொடர்)

உண்மை விலையை மாற்றி குறிப்பிடுதல் இரண்டு விதமாக மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுமதியின்போது விலையைக் குறைத்து இன்வாய்சிங் செய்வதால் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மறைக்கிறார்கள். மறைக்கப்பட்ட பணம் கறுப்புப் பணமாக வைத்துக்கொள்வர். மேலும், இவ்வாறு விலையை குறைத்து காண்பிப்பதால் லாபத்தையும் குறைத்து காட்ட முடியும். உள் நாட்டிலும் அதற்கு செலுத்த வேண்டிய வருமான வரி தவிர்க்கப்படுகிறது. அதைப்போலவே, இறக்குமதிகளில் அதிக இன்வாய்சிங் செய்யப்பட்டு உள்நாட்டு உற்பத்தி செலவு அதிகரித்தது போல் காட்டுவதோடு, பாலன்ஸ் ஷீட்டில் குறைந்த லாபத்தையும் காட்டுவர். இதனால் அந்த அளவு உள்ளூர் வரிகளையும் தவிர்க்க முடியும். மேலும், இறக்குமதிகளில் காட்டப்படும் கூடுதல் தொகை வெளிநாட்டு கணக்குகளில் தக்கவைத்துக் கொள்ளப்படும். 2014இல் வெளிவந்த அறிக்கையின்படி, உலகளாவிய ‘தவறான விலைவிதிப்பது’ குறித்த சர்ச்சைகளில் பாதி இந்தியாவில்தான் உள்ளது.

குளோபல் ஃபினான்சியல் இன்டகிரிட்டி (ஜி.எஃப்.ஐ) நடத்திய மதிப்பீட்டில் 2003 மற்றும் 2012க்கு இடையேயான பத்தாண்டுகளில் வளரும் நாடுகள் 6.6 லட்சம் கோடி டாலர் பணத்தை மேற்கூறிய சட்டவிரோதமாக வெளியேறும் முறை மூலமாக இழந்தன. இந்தக் காலகட்டத்தில் சட்ட விரோத பணம் அனுப்பும் முறையில் சீனா, ரஷ்யா, மெக்சிகோ, இந்தியா, மலேசியா நாடுகள் முதல் ஐந்து இடத்தில் இருந்தன. 2009இல் இந்தியாவில் இந்த நடவடிக்கை அதிகரித்ததன் விளைவாக இந்தியா ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்குச் சென்றது. இந்தக் காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பணம், மொத்தம் 440 பில்லியன் டாலர் அல்லது 30 லட்சம் கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டது. இது சராசரியாக ஆண்டிற்கு 44 பில்லியன் அல்லது 3 லட்சம் கோடி ரூபாய். இவை எல்லாமே கறுப்புப் பணம் தான். இவ்வளவு பணமும் இந்தியக் கணக்கிலேயே இல்லை.

தவறாக விலை குறித்தல் என்றால் என்ன?

வர்த்தகத்தில் ‘தவறாக விலை குறித்தல்’ குறித்துப் புரிந்துகொள்ளப் பின்வரும் எடுத்துக்காட்டு உதவலாம். வர்த்தகத்தில், அபரிமிதமான லாபம் பெறவும் வரி விலையிலிருந்து தப்பிக்கவும் இறக்குமதிப் பொருள்களுக்கு அதிக விலை குறிப்பிடப்படும். பணம் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கூடுதல் தொகை வெளிநாட்டு கணக்குகளில் பதுக்கப்படும். இந்த எடுத்துக்காட்டு மகாராஷ்டிராவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு மின்சார பகிர்வு நெட்வொர்க்குகளுக்கு இடையேயான ஒப்பந்தம் தொடர்பானது. வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) 97 பக்க விசாரணை அறிக்கையில் அதிக விலை குறிப்பிடுவது என்ற ஓவர் இன்வாயிசிங் மூலமாக லாபத்தை அள்ளி, வரி ஏய்ப்பு செய்து, அந்த தொகை கறுப்புப் பணமாக உருவெடுத்தது விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை எளிமையாக இவ்வாறு விவரிக்கலாம்: 2010இல், அதானி நிறுவனம், மகாராஷ்டிராவின் வடகிழக்குப் பகுதிகளில் இரண்டு மின்சார பகிர்வு நெட்வொர்க்குகளை மேம்படுத்தும் ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த நிறுவனம், இந்த நெட்வொர்கை உருவாக்கத் தேவையான மூல உபகரணங்களை வாங்க வேறொரு அதானி துணை நிறுவனத்தைப் (பி.எம்.சி. திட்டங்கள்) பயன்படுத்தியது. இந்த பி.எம்.சி. துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு (இ.எல்.எஃப் - EIF) இதை துணை ஒப்பந்தமாக வழங்கியது. இ.எல்.எஃப். இந்தப் பொருள்களை கொரியா மற்றும் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்து இந்தியாவில் உள்ள பி.எம்.சிக்கு விற்றது. ஹுண்டாய் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் துபாய் நிறுவனமான இ.எல்.எஃப். 26 ஆர்டர்களை வழங்கி, 65 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து உபகரணங்களைக் கொள்முதல் செய்து, அதையே இந்தியாவில் உள்ள பி.எம்.சிக்கு 260 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 400%க்கும் அதிகமான லாபத்தில் விற்றது. இ.எல்.எஃப். நிறுவனமும் மூன்று சீன நிறுவனங்களிடமிருந்து உபகரணங்களை வாங்கி, பி.எம்.சிக்கு 860% லாபத்தில் விற்றது. துபாய் நிறுவனம், இ.எல்.எஃப்., இந்திய நிறுவனம் பி.எம்.சிக்கு விற்றதில் அதிகப்படியான விலை குறிப்பிடப்பட்ட இன்வாய்ஸ்கள் மூலம் கிடைத்த வருமானம் 1500 கோடி ரூபாய். இந்தத் தொகையும்கூட இந்திய வங்கிகளிடமிருந்து கடன் பெற்று வழங்கப்பட்டது. இந்திய வங்கிகளின் வாராக் கடன்களுக்கு (Stressed Accounts) இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இது, பெயரளவுக்கே வரி விதிக்கப்படும் துபாயில் இருக்கும் நிறுவனத்துக்கு மிகப் பெரிய லாபத்தை வழங்கியிருக்கிறது. அதே நேரத்தில், மகாராஷ்டிராவின் டிரான்மிஷன் திட்டச் செலவு, அதிகரித்து, இறுதியில் மக்கள் மின்சாரத்துக்காக அதிகப் பணம் செலுத்துவதில் போய் முடிந்தது.

சட்டவிரோத நிதி வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், தாங்கள் ஈட்டும் கறுப்புப் பணத்துக்கு மிகக் குறைவான வரி செலுத்த வேண்டியிருப்பதால் வரும் லாபத்தால் மட்டுமே திருப்தி அடைந்துவிடுவதில்லை என்பதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். அவ்வாறு ஈட்டிய லாபத்தை உள்ளூரிலும் சுற்றி வளைத்து திசை திருப்பிவிட்டு நிதி சந்தைகளில் அல்லது பங்கு பரிவர்த்தனைகளிலும் அதைக் கணக்கில் காட்டப்படும் பணமாகவும் மாற்றிக்கொள்கின்றனர்.

1983இல் இந்திய அரசு மொரீஷியஸ் அரசுடன் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் DTAA (டி.டி.ஏ.ஏ) செய்துகொண்டது. இதன்படி மொரீஷியஸில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம், இந்திய முதலீடுகளிலிருந்து பெறும் லாபம் அல்லது மூலதன ஆதாயங்கள் மீதான லாபத்துக்கான வரியை அந்நாட்டில் செலுத்திவிட்டால், இந்தியாவிலும் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 1980களின் தொடக்கத்தில் DTAA கையொப்பமிடப்பட்டபோது, இந்திய நிதிச் சந்தை அல்லது பங்குச் சந்தைகள் வெளிநாட்டு முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவில்லை. எனவே, இந்தப் பரிவர்த்தனைகள் மூலம் ஈட்டப்பட்ட லாபங்கள் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தன.

ஆனால், இந்தியாவில் தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பின் இந்தியா, தாராளவாத அடிப்படையில் நிதிச் சந்தைகளை (ஸ்டாக் எக்ஸ்சேஞ்கள்) நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான பொருளாதாரத்தை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்குத் (FII - எஃ.ஐ.ஐக்கள்) திறந்துவிட்டது. பங்குச் சந்தையில் எஃ.ஐ.ஐக்களை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக, மொரீஷியஸ் வகை, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தங்கள் (DTAA - டி.டி.ஏ.ஏ) சிங்கப்பூர் மற்றும் சைப்ரசுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டன. ஹவாலா, தவறான விலை குறிப்பிடுதல் அல்லது மற்ற வழிமுறைகளிலான பண மோசடிகள் வழிமுறையில் தவறாக ஈட்டப்பட்ட நிதி வருமானங்கள் சுற்றி வளைத்து இந்திய நிதிச் சந்தையில் ‘வெள்ளைப் பண’மாக மாற்றப்பட்டது.

1990களில் பங்கேற்பு குறிப்பு (Participatory Note) என்ற புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பங்கேற்பு குறிப்புகள் இந்திய உள்ளூர் முதலீட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்காக பதிவு செய்யப்படுவதில்லை. பங்கேற்பு குறிப்பு, யாருடையது என்பதையோ யார் அதில் முதலீடு செய்துள்ளார்கள் என்பதையை அறிவிக்க வேண்டிய தேவையில்லை என்பதால், பங்கேற்பு குறிப்பு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் குறித்து யாருக்கும் தெரியாது. இதனால் பெரும்பாலான பணம் பங்கேற்பு குறிப்புகள் வழியாகத் துணை அக்கவுன்ட்டுகள் மூலம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை (FIIs) சென்றடைந்துவிடும். வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், பங்கேற்பு குறிப்புகள் வழியாக இந்தியப் பங்கு வர்த்தகத்துக்குள் நுழைந்துவிடும். இப்படி இவை அனைத்திலும் கரன்சி நோட்டுகள் இடம்பெறுவதில்லை. இதற்கு பணமதிப்பழிப்பு எப்படி தீர்வாக அமையும்?

மெய்யறு கடந்த அரசியல் (Post-Truth Politics)

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போலவே பிரதமருக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் ஊழல் மற்றும் கறுப்புப் பணம் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது என்பது தெரியாது என்பதையும், பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் அது ஏற்படுத்தப்போகும் மோசமான விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வு அவருக்கு இல்லை என்பதையும் நம்புவது கடினம். பிரதமருக்கு இந்த தீமைகள் குறித்த ஆலோசனை கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட அறிவுரையை அவர் பெற்றார் என்பதற்குச் சான்றுகளும் உள்ளன. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட, வங்கிக்கு வராத ரூபாய் நோட்டுகள் குறித்த கணிப்பு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம் மோசமான விளைவுகள் குறித்து குறைத்தும் மதிப்பிட்டிருக்கலாம். கணிசமான அளவுக்கு இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்பது குறித்துப் போதுமான தகவல்கள் பிரதமருக்குக் கிடைத்திருக்கும் என்பது நிச்சயம். ஆனால், இதனால், இவரது இமேஜின் பிரகாசம் மங்கிவிட்டது என்று சிலர் நினைக்கிறார்கள் என்றால், இவர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏன் எடுத்தார்? இந்த மெய்யறு (Post-Truth) சகாப்தத்தில் அரசியலின் தன்மைக்கு வழக்கமான பொருளாதார விளக்கங்களுக்கும் அப்பால் போக வேண்டி இருக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி “அந்த ஆண்டின் சர்வதேச வார்த்தை” ஒன்றை வெளியிடும். 2016ஆம் ஆண்டு அந்த அகராதி தேர்ந்தெடுத்த வார்த்தைதான் ‘Post-Truth’. மெய்யறு என்பது, “மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதில் உண்மைத் தகவல்களைவிட உணர்ச்சியும் தனிப்பட்ட நம்பிக்கையும் அதிகச் செல்வாக்கு வகிக்கும் சூழலுக்குத் தொடர்பான அல்லது அந்தச் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்திலான” என்று இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், உண்மை – உலகம் நிஜத்தில் எப்படி இருக்கிறதோ அதை விவரிக்கிறது - என்பது முக்கியத்துவத்தை இழக்கிறது. மக்களின் கற்பனையில் ஊழல் என்பது மிகப் பெரிய மோசடி என்று எண்ணம் வலுப்பட்டுவிட்டது. மேலும் அவர்கள் ஊழல் செய்து திரட்டப்பட்டுள்ள கறுப்புப் பணம் குவியல் குவியலாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நம்பவைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஊழல் மோசடிகளில் ஈடுபடுவது என்பது, எல்.பி.ஜியின் கீழ் தாராளவாத சீர்திருத்தங்களால் தூண்டிவிடப்பட்டது என்றும் அப்படித் திரட்டப்படும் கறுப்புப் பணம் எப்போதும் ரொக்கமாக வைத்துக் கொள்ளப்படுவதில்லை என்ற உண்மையும் மக்களிடம் பெரிய அளவில் போய்ச் சேருவதில்லை. இந்த மெய்யறு கடந்த ‘நிஜத்தில்தான்’ பிரதமர் மோடி, பணமதிப்பழிப்பு நடவடிக்கை மூலம் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டும் பிரமாண்ட திட்டமாகத் தனது அரசியல் வியூகத்தை உருவாக்கியுள்ளார்.

(‘பணமதிப்பழிப்பு, ஊழல், கறுப்புப் பணம்: உண்மை கடந்த சகாப்தத்தில் (Era of Post-Truth) சந்தர்ப்பவாத அரசியலில் முற்றுகையிடும் ஆபத்துகள்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் டி.நரசிம்ம ரெட்டி 22-09-2017 அன்று விஜயவாடா சித்தார்த்தா அகாடமி ஆடிட்டோரியம் அரங்கில் வழங்கிய ஆய்வுரையின் ஆறாம் பகுதி இது. நரசிம்ம ரெட்டி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியர். இதன் அடுத்த பகுதி நாளை வெளியாகும் – ஆசிரியர்.)

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

செவ்வாய் 14 நவ 2017