மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

ஓய்ந்தது ரெய்டு மழை!

ஓய்ந்தது ரெய்டு மழை!

தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து ஐந்தாவது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறையின் சோதனை இன்றுடன் நிறைவடைந்தது. விசாரணைக்காக ஜெயா டிவி சிஇஒ விவேக் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான 190 இடங்களில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் 1800 வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையை ஆரம்பித்தனர். சென்னை, தஞ்சை, நீலகிரி, நாமக்கல், புதுச்சேரி, கடலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் முதல் நாளில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், போயஸ் கார்டனிலுள்ள பழைய ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், பீனிக்ஸ் மால், படப்பையிலுள்ள மிடாஸ் மதுபான ஆலை, தினகரனின் பண்ணை வீடு, மன்னார்குடியிலுள்ள திவாகரன் இல்லம், அவரது செங்கமலத்தாயார் கல்லூரி, விவேக், கிருஷ்ணப் பிரியா ஆகியோரின் இல்லங்கள், சசிகலா வழக்கறிஞர் செந்தில்நாதன் இல்லம், கடலூர் ஜோதிடர் சந்திரசேகர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்ட சோதனை இரண்டாவது நாளில் 147 இடங்களாக குறைந்தது.

இதில் வருமான வரித் துறையினரால் அதிகமாகக் குறிவைக்கப்பட்டது, விவேக் சம்பந்தப்பட்ட இடங்கள்தான். ஜெயா டிவி, மகாலிங்கபுரத்திலுள்ள அவரது இல்லம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம் தி.நகரிலுள்ள கிருஷ்ணப் பிரியா இல்லம் என சென்னையில் மட்டும் 12 இடங்களில் இன்றும் சோதனை தொடர்ந்தது. நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 13) ஐந்து நாட்களாக சசிகலா சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறையின் அனைத்துச் சோதனைகளும் முடிவுற்றன. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை வருமான வரித் துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்து வருகின்றனர். சென்னை மாகாலிங்கபுரத்திலுள்ள ஜெயா டிவி சிஇஒ விவேக் வீட்டில் சோதனை முடிவுற்ற நிலையில், பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக விவேக்கை, நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017