மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

பள்ளிகளின் தொடர் விடுமுறை: ஆசிரியர்கள் கருத்து!

பள்ளிகளின்  தொடர் விடுமுறை: ஆசிரியர்கள் கருத்து!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையினால், சாலைகள் குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சாலைப் போக்குவரத்து அதிக அளவில் பாதிப்பு அடைந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை என்றாலே மகிழ்ச்சியில் திளைக்கும் மாணவர்களுக்கு, மழை நேரத்தில் கிடைக்கும் விடுமுறைக்குக் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஆனால், அரையாண்டுத் தேர்வு நெருங்கி வரும் வேளையில், பாடத்தை முடிக்க இயலாமல் செய்வதறியாது இருக்கும் ஆசிரியர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

விடுமுறை என்பது சரியான தீர்வல்ல

இந்தத் தொடர் விடுமுறையால், ஆசிரியர்களுக்கு ஏற்படும் மனநிலை குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம். சென்னை வளரசவாக்கத்தில் உள்ள மெய்யப்பன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ஆர். அன்னிபெசன்ட் கூறுகையில், “மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது சரியான தீர்வு கிடையாது. இது போன்று தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை கொடுப்பதால் மாணவர்களுக்குப் படிப்பில் இடைவெளி விட்டுப்போகும். இதனால் படிப்பின் தரம் குறைய நிறைய வாய்ப்புள்ளது. இதனால், பாடங்களை மீண்டும் முதலிலிருந்து படிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

விடுமுறைக்கு முன்புவரை ஆசிரியர்களான நாங்கள் மாணவர்களை ஒரே சீரான நிலையில் கொண்டு சென்றோம். ஆனால் தற்போது இந்த விடுமுறை காரணமாக இந்த நிலை மாறிவிடுகிறது. மாணவர்களை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகிறது” என்றார்

மேலும் தொடர்ந்த அவர், “காலையிலும் மாலையிலும் வகுப்புகள் எடுக்கக் கூடாது என உத்தரவும் இருக்கிறது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடத்தை முடிக்க முடியாது. எங்களின் கோரிக்கை என்வென்றால் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையளிப்பதாக இருந்தால் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகள் வரை விடுமுறை அளிக்கலாம். மாணவர்களை விட இந்த உலகத்தில் ஆசிரியர்களான எங்களுக்கு வேறு ஏதும் இல்லை. விடுமுறை விடுவதாக இருந்தாலும், மழை பெய்கின்ற பகுதிகளில் மட்டும் விடுமுறை அளித்தால் போதும். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க வேண்டாம்” என்கிறார் அவர்.

“இப்படி விடுமுறை அளிப்பதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவும் வரும். இதனால் கவலையடைவது மாணவர்களே. திங்கள்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரைதான் மாணவர்கள் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கிறார்கள். சனிக்கிழமை ஏதோ கடமைக்காகத்தான் செய்கிறார்கள்” என்று அன்னிபெசன்ட் கூறுகிறார்

சேலத்தைச் சேர்ந்த நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ராணி கூறுகையில், “மாணவர்களின் தரத்தை உயர்த்த அவர்களின் பள்ளி வருகை மிகவும் முக்கியம். மழையின் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அளிப்பதால் நிச்சயமாக அவர்களால் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. அவர்கள் விடுமுறை மனநிலையிலிருந்து மீண்டு வரவே இரண்டு மூன்று நாட்கள் ஆகும்” என்கிறார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017