மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

சிறப்பு டிஜிட்டல் திண்ணை: விவேக் வீட்டுக்குள் இருந்து வந்த அழுகுரல்!

சிறப்பு டிஜிட்டல் திண்ணை: விவேக் வீட்டுக்குள் இருந்து வந்த அழுகுரல்!

பூட்டிய வீட்டில் நடப்பது என்ன?

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். செல் நிறைய தகவல்களுடன் வந்திருந்தது வாட்ஸ் அப்.

“சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டு என்பது இளவரசியின் மகன் விவேக்கைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது என்பதை நான் தொடர்ந்து ‘டிஜிட்டல் திண்ணை’யில் சொல்லிவருகிறேன். விவேக் வீட்டில் ரெய்டு தொடர்கிறது. நுங்கம்பாக்கத்தில் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் எல்லோருக்கும் தெரியும். இதற்கு எதிர்ப்புறத்தில் உள்ள ராமநாதன் தெருவில்தான் விவேக் வசிக்கும் பங்களா இருக்கிறது. ரெய்டு தொடங்கிய நாளிலிருந்து இந்த வீட்டில் இருந்த யாரையும் வெளியே விடவில்லை. புதிதாக யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை. வீட்டுக்குள் இருப்பது மூன்று பேர். விவேக், அவரது மனைவி கீர்த்தனா, இளவரசியின் சகோதரர் மகன் பிரபு. டிடிவி வீட்டுக்கு எதிரே இருக்கும் கூட்டத்தை விட விவேக் வீட்டுக்கு வெளியே அதிக அளவில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து முடிந்துவிட்டது. அவர் வீட்டில் ரெய்டு முடிந்ததும், பாஸ்கர் கிளம்பி வந்துவிட்டார். விவேக் வீட்டு வாசலிலேயே ஒரு சேரைப் போட்டு அமர்ந்திருக்கிறார் பாஸ்கர். விவேக்கைப் பார்க்க வருபவர்கள் பாஸ்கரிடம்தான் கைகொடுத்து விசாரித்துவிட்டுப் போகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மதியம் விவேக் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டைத் தாண்டி வெளியே கேட்டது. வீட்டுக்குள் இருக்கும் ஒரே பெண் விவேக் மனைவி கீர்த்தனாதான். வெளியே இருந்த விவேக் உறவினர்களும் அதிமுகவினரும் இதைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டனர். பூட்டப்பட்டிருந்த விவேக் வீட்டு கேட்டை அவர்கள் எல்லோருமாக சேர்ந்து தட்ட ஆரம்பித்துவிட்டனர். ‘உள்ளே என்னங்கடா பண்றீங்க... எங்க புள்ளைங்களை வெளியே அனுப்புங்க...’ என ஆக்ரோஷமாகக் கத்த ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார் இளவரசியின் சகோதரர் மகன் பிரபு. கேட்டில் இருந்த சதுர வடிவிலான முகம் பார்க்கும் ஜன்னலைத் திறந்து, ‘தயவு செய்து எல்லோரும் அமைதியா இருங்க. பாப்பாதான் அழுதுட்டு இருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்க சத்தம் போட்டீங்கன்னா உள்ளே இருக்கிறவங்க டென்ஷன் ஆகுறாங்க. உங்களை கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக்குறேன். அமைதியா இருங்க...’ என கலங்கிய கண்களுடன் சொல்லிவிட்டு மறுபடியும் வீட்டுக்குள் போய்விட்டார்.

அவரைப் பின் தொடர்ந்து இரண்டு போலீஸாரும் போனார்கள். வெளியில் இருந்த விவேக் மாமனார் பாஸ்கர், ‘நாலு நாளா புள்ளைங்களை என்ன சித்ரவதை செய்யுறாங்களோ தெரியலை. அவங்க ரெய்டு பண்ணட்டும்... உள்ளே இருக்கிற மூணு பேருமே 30 வயசுக்குள்ள இருக்கிற புள்ளைங்கதான்... அவங்களை இவ்வளவு டார்ச்சர் பண்ணனுமா? எனக்குத் தெரிஞ்சு, அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதில் கையெழுத்து வாங்காமல் என் மருமகப் பிள்ளையை வெளியே விட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுக்காகத்தான் இவ்வளவு டார்ச்சர் கொடுத்துட்டு இருக்காங்க...’ என அங்கே இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்திருந்தது. “விவேக் வீட்டிலும் ஜெயா டிவியிலும் ரெய்டு தொடர்ந்தாலும், டிடிவி தினகரன் அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை என்கிறார்கள். தினகரன் ஆதரவாளர்கள் எல்லோருமே விவேக் வீட்டுக்கும், ஜெயா டிவிக்கும் போய் வந்தபடியே இருக்கிறார்கள். ஆனால், தினகரன் இதுவரை அந்தப் பக்கம் போகவே இல்லை. சிறையிலிருந்து பரோலில் சசிகலா வந்து போன பிறகு முக்கிய பொறுப்புகள் எல்லாமே விவேக் கைக்கு மாறியது. இதில் தினகரன் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார். வரவு செலவு கணக்குகளுக்குக்கூட விவேக்கிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தினகரன். இதுதான் அவரை உச்சபட்சமாக டென்ஷன் ஆக்கியிருக்கிறது. ‘என்கிட்ட எதுவுமே இல்லை. எல்லாம் விவேக்தானே பார்த்துட்டு இருக்காரு... கடந்த 6 வருஷமா என்ன நடந்துச்சுன்னுகூட எனக்கு தெரியாது. கூடவே இருந்து பார்த்தது அவருதானே... அதனாலதான் இப்போ அவரை கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. என் வீட்டுல ஒரே நாளில் ரெய்டு முடிஞ்சுடுச்சு. ஆனால், அங்கே இன்னும் ரெய்டு நடக்குது. இதுல இருந்தே தெரிஞ்சுக்க வேண்டாமா... எல்லாம் எங்கே இருக்குன்னு!’ என்று தனக்கு நெருக்கமான ஒரு எம்.எல்.ஏ.விடம் சொன்னாராம் தினகரன்.

அதற்கு அந்த எம்.எல்.ஏ, ‘இப்போ அதையெல்லாம் பார்த்துட்டு இருக்காதீங்க. என்னதான் இருந்தாலும் அவரு நம்ம புள்ளைதானே... இருக்கிற எல்லாத்தையும் ஒதுக்கிட்டே போனால், நம்மகூட யாருமே இருக்க மாட்டாங்க...’ என அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனாலும் தினகரன் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்திருக்கிறார்” என்று அந்த மெசேஜும் முடிந்தது.

இரண்டு மெசேஜ்களையும் காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

“நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் பிஜேபி போடும் திட்டம் என சசிகலா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ‘விவேக்கையும், தினகரனையும் பிரிக்க வேண்டும் என்பதற்காக பிஜேபியில் உள்ள சிலர்தான் திட்டம் போட்டுக் காய் நகர்த்திவருகிறார்கள். அது புரியாமல் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக இழுத்துட்டு இருக்காங்க. தினகரன் அணியையும் உடைக்க வேண்டும் என்பதுதான் பிஜேபியின் அடுத்த அஜண்டா. அதை இந்த ரெய்டில் செய்து முடித்துவிடுவார்கள்” என்ற ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017