மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழகச் சட்டமன்றம் எப்போது கூட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய இடமாக இப்போது நீதிமன்றம்தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழகச் சட்டமன்றம் தொடர்பான முக்கிய வழக்குகள் இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செம்மலை, மாணிக்கம் ஆகியோர் தாக்கல் செய்த புதிய மனு இன்று (நவம்பர் 13) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

அதைப் பற்றிப் பார்க்கும்முன், தமிழகச் சட்டமன்றம் தொடர்பாக இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் முக்கியமான வழக்குகளைப் பார்த்துவிடுவோம். சட்டமன்றத்தைக் கூட்டுவது, பெரும்பான்மை நிரூபிப்பது, சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது போன்றவை தொடர்பான முக்கியமான வழக்குகள் இவை.

வழக்கு 1

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் குட்காவைக் கொண்டுவந்து காட்டினார் என்று அவர் மீது உரிமை மீறல் புகார் சட்டமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதன்மீது ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய ஏற்பாடுகள் தீவிரமான நிலையில், தங்கள் மீது உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்க தடை விதிக்குமாறு ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். இது இப்போது நிலுவையில் இருக்கிறது

வழக்கு 2

கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், தங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுக்கின்றனர். இதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. எனவே சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கு 3

மேற்கண்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போதே தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அப்போது மேற்கண்ட வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொண்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ‘சபாநாயகர் எங்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு அதன்பிறகு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று மனு தாக்கல் செய்தார். எனவே நீதிமன்றம் உத்தரவிடும் வரை சபையை கூட்ட தடை விதிக்கப்பட்டது.

வழக்கு 4

முந்தைய வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, வெற்றிவேல் சந்தேகம் தெரிவித்தது போல தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே அவர்கள் 18 பேரும் சேர்ந்து, சபாநாயகர் தங்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் சபாநாயகரின் தகுதி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை என்று நேரடியாக தடை விதிக்கவில்லை. ஆயினும், சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவின் அடிப்படையில் சபை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு, ‘18 தொகுதிகள் காலியாக இருக்கின்றன’ என்று கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை நிறுத்தி வைத்து, உத்தரவு வரும் வரை அந்த 18 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது.

வழக்கு 5

இதற்கிடையில் திமுக சட்டசபை கொறடாவான சக்கரபாணி புதிய வழக்கு ஒன்றைத் தொடுத்தார். ‘கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரியபோது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர் உட்பட 12 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர் உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்பதுதான் சக்கரபாணியின் வழக்கு.

அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இது தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வழக்கு 6

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே வெற்றிவேல், பார்த்திபன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இணைந்து, ‘ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 பேர் அதிமுக கொறடா உத்தரவை மீறி சட்டமன்றத்தில் செயல்பட்டனர். ஆனால், அந்தத் தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் கட்சி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கவில்லை. அதனால் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நாங்கள் கொடுத்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.

வழக்கு 7

இதன்பின் திமுக சட்டமன்றத் துணை கொறடா பிச்சாண்டி, ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறிய புகாரில், சட்டமன்ற உறுப்பினர்களாகவே இருக்க முடியாத நிலையில் அவர்கள் அமைச்சர் பதவி வகிக்கத் தகுதி இல்லாதவர்கள்’ என்று வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இவை அனைத்தும் சட்டமன்றம் தொடர்பாக இருப்பதால் வழக்குகளை அமர்வு விசாரிப்பது தொடர்பாகத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களான செம்மலை, சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

‘சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சார்ந்த வழக்குகளை மட்டும் உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும். சட்டமன்ற சபாநாயகரின் உரிமைகள், அதிகார வரம்புகள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்’ என்று ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

ஆனால், இந்த மனு பற்றிய தகவல் திரிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகச் சட்டமன்றம் தொடர்பாக நடக்கும் எல்லா வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்கின்றன என்ற செய்தி பரவியது. அது உண்மையல்ல.

சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு சட்டமன்றத்தைக் கூட்ட இருப்பதாக வெற்றிவேல் தொடுத்த வழக்கு, ஓ.பன்னீர் உள்ளிட்ட 12 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு ஆகிய இந்த இரண்டு வழக்குகள்தான் உச்ச நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளன.

இதில் வெற்றிவேல் தொடுத்த வழக்கு இந்தியாவிலேயே முன்னோடி வழக்கு இல்லாத புதிய வழக்காக பார்க்கப்படுகிறது. மீதியுள்ள வழக்குகள் எல்லாமே சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் தொடர்ந்து நடைபெறும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017