மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

சிறப்புக் கட்டுரை: லக்ஷ்மியும் கலையைத் தேடும் மனித மனமும்!

சிறப்புக் கட்டுரை: லக்ஷ்மியும் கலையைத் தேடும் மனித மனமும்!

போகன் சங்கர்

லக்ஷ்மி எனும் குறும்படம் இன்று பெரிதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் படத்தைவிட இதற்கான எதிர்வினைகள் சுவையாக இருக்கின்றன.

பழைமைவாத எதிர்வினைகள், இந்தப் படத்தில் நிகழ்வதை ஒழுக்கக் கேடு என்று சொல்கின்றன. பெண்களுக்கு வேறு பிரச்னைகள், வேறு விடுதலைகள் நிறைய இருக்கின்றன; தேவைப்படுகின்றன. இந்தக் குறும்படமும் இதைப் போன்ற படங்களும் பெண் விடுதலையைப் பாலியல் பிரச்னையாகக் குறுக்குகின்றன என்பது போன்ற எதிர்ப்புகளையும் சில பெண்ணியர்கள் முன்வைக்கிறார்கள்.

ஸ்வாமி அகேகானந்த பாரதி என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒரு ஆஸ்திரிய வெள்ளைக்காரத் துறவியின் சுயசரிதை The Ochre Robe. இந்தியத் தத்துவவியலில் முக்கியமான பெயர் அகேகானந்த பாரதி. அவர் இந்து மதத்தின் மீதும் இந்தியாவின் மீதும் பற்றுக்கொண்டு இளமையிலேயே சமஸ்கிருதம் கற்கிறார். அதோடு நில்லாது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்டு இந்தியச் சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொள்கிறார். இதன் காரணமாக நேசப்படைகளால் கடும் சிறையில் வைக்கப்படுகிறார். அங்கு அவர் தன்னை ஒரு பஞ்சாபி என்றே சொல்லிக்கொள்கிறார். முடிவில் அவர்கள் அவர் ஒரு வெள்ளையர் என்று கண்டுபிடித்து விடுதலை செய்கிறார்கள்.

அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து காசியில் முறைப்படி சந்நியாசம் வாங்கிக்கொண்டு கால்நடையாக இந்தியா முழுக்க சுற்றுகிறார். அவரது சம்பிரதாயப்படி மூன்று நாளைக்கு மேல் எங்கும் தங்க மாட்டார். பிச்சை எடுத்துதான் உணவு. அவரது ஆரம்பப் பயங்களுக்கு மாறாக அவருக்கு இந்தியாவில் எங்கு சென்றாலும் யாராவது உணவளிக்கிறார்கள். பெரிய மரத்தடி ஒன்றில்தான் அவரது ஜாகை. மாலைகளில் அவரைத் தேடி தரிசனத்துக்காக மக்கள் கூட்டமாகவும் தனியாகவும் வருவார்கள். தரிசனம் என்று சொன்னாலும் பெரும்பாலும் அவர்களது வாழ்க்கைப் பிரச்னைகளுக்கான ஆலோசனை எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

பிரச்னைகள்: ஆண்களும் பெண்களும்

கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வாமி இந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஒரு ஒத்த தன்மையைக் காண்கிறார். ஆண்களது பிரச்னைகள் பெரும்பாலும் நிலம், தொழில் தொடர்பாக இருக்கின்றன. பெண்களின் குறைகள் குழந்தைகள், கணவர்கள் தொடர்பாக இருக்கின்றன. அதிலும் கணவர்களது 'அன்பின்மை’ தொடர்பாக இருக்கின்றன. இங்கே அன்பின்மை என்பது மனத் திருப்தியை மட்டும் குறிக்கவில்லை என்பதை அவர் மெதுவாகப் புரிந்துகொள்கிறார். திரும்பத் திரும்ப அது அவரிடம் சொல்லப்படுகிறது . ஆனால், மறுபுறம் அந்தக் கணவர்களுக்கு இப்படியொரு பிரச்னை இருப்பதே தெரியவில்லை. அவர்கள்தான் அவர்கள் மனைவிகளுக்கு 'மக்கள் செல்வத்தை'வாரி வழங்கிவிட்டார்களே!

இது சுதந்திரத்துக்கு முன்பான நிலை. பஞ்சமும் பசியும் கலவரங்களும் கொள்ளை நோய்களும் நிறைந்த நூற்றாண்டிலும் இருந்த ஒரு பிரச்னை. இப்போது இன்னும் பெரிதாக இருக்கிறது. பெண்கள் இப்போது சாமியார்கள் மட்டுமில்லாது மனநல மருத்துவர், வக்கீல் போன்று வேறு நபர்களிடமும் தளங்களிடமும் இந்தக் குறைகளை வெளிப்படுத்திச் சொல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தக் குறும்படம் அப்படியொரு தளம். அவ்வளவுதான்.

பாலின விடுதலையும் பாலியல் விடுதலையும் ஒன்றல்ல என்பது இந்தியாவுக்கே உரிய ஒரு விநோத சிந்தனை. மேற்கே இப்படிப்பட்ட பிளவுகள் இல்லை. பெண்ணின் அடிமைத்தனம் அவளது பாலியல் உறவுகள் மூலமாகவே வருவதால் அதன் புனிதம் வெடிவைத்துத் தகர்க்கப்படாமல் பாலினச் சமத்துவமும் வராது என்பதே அவர்கள் நிலை. அதைப் பதற்றத்துடன் காதல் என்ற சொல்லால் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. பெண்ணின் உடல் மீட்டெடுக்கப்பட வேண்டும், அதன் இன்பங்களுடன் சேர்த்து.

பாலியல் திருப்தியும் இந்திய ஆண்களும்

எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறுகிறார். இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. ஆண்கள் பாதிக்கும் மேல். ஆனால், உண்மையில் ஆண்மை கொண்ட ஆண்கள் அதில் பத்து சதம்கூட இருக்க மாட்டார்கள் என்றார். இந்த சதம் இன்னும் வேகமாகக் குறைந்துவருகிறது .உலகிலேயே மிகக் குறைவாக உடலுறவில் திருப்தி தரக்கூடியவர்கள் என்று இந்திய ஆண்களை ஒரு சர்வே சொல்கிறது. அவர் சொன்னார்: “தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கொள்ளை நோய்போல பரவிவரும் குடிப் பழக்கம் இந்த சதவிகிதத்தை ஏறக்குறைய இன்னும் பத்தாண்டுகளில் சுழியத்துக்கு அருகில் கொண்டுவிட்டுவிடும்.”

ஆனால், இது அவர் சொல்வதுபோல இது வெறுமனே உடல் சம்பந்தப்பட்டதுதானா? ஆம். இது வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது என்று சொல்வதில் என்று சொல்வதில் எந்த இழிவும் இல்லை. உடலை உடல் மூலம் தொடர்ச்சியாக இழிவாகக் கருதுவது இந்தியாவின் ஆழ்மனதிலேயே உள்ளது. இதற்கு முற்போக்குப் பெண்ணியர்களும் விலக்கல்ல என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

லக்ஷ்மி குறும்படத்தில் ஒரு பாரதியார் பாடல் வருகிறது. லக்ஷ்மி மயங்குகிற நபர் ஒரு சிற்பியாக இருக்கிறார்.

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்

அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!

இங்கு பாரதியார் கலை என்ற சொல்லை பொலிவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் வேறொரு அர்த்தம் கொள்ளுகிறேன். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் உடல் ரீதியான தேவைகள் தவிர மன ரீதியான தேவைகள் உள்ளன. இந்த மன ரீதியான தேவையை சிலர் காதல் என்று சொல்லப் பிரியப்படுகிறார்கள். நான் அதை 'கலைக்கான தேவை' என்று சொல்வேன்.

கலையின் பங்கு என்ன?

பனி யுகக் காலத்தில் குகைகளில் வன விலங்குகளுக்கும் பனிப் புயல்களுக்கும் பசிக்கும் அஞ்சி ஒடுங்கிக் கிடந்த காலத்திலும் மனிதன் இருண்ட குகைச் சுவர்களில் ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தான். உண்மையில் அது அவனது ஆற்றலை வீணடிக்கிற வேலை. பல நேரங்களில் அபாயகரமான ஒரு செயல். பிறகு எது அவனை அதை நோக்கித் தள்ளுகிறது என்பதில் லக்ஷ்மியின் ஓரிரவுத் தங்கலுக்கான விடை இருக்கிறது. அவள் ஒரு கலைஞனால் ஈர்க்கப்படுவது இதனால்தான். உலக சரித்திரம் முழுக்க இது நிகழ்ந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் கலையினால் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அன்றன்றைய காலகட்டத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒழுக்கவிதிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், எல்லாக் காலகட்டத்திலும் கலைக்கான ஏக்கம் கலைஞர்கள் அல்லாதவர்களிடத்தில்கூட இருக்கும். எந்தச் சூழலிலும் அவனோ அவளோ சித்தாள் வேலை பார்த்தாலும் பெரிய நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் தங்கள் இயந்திர வாழ்வில் சிறிதளவேனும் கலைக்காக ஏங்குவார்கள். அதற்காகச் சில நேரங்களில் சாகவும் செய்வார்கள்.

இதைப் புரிந்துகொள்ளும்போது லக்ஷ்மியை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017