மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

சிறப்புக் கட்டுரை: நச்சுக் காற்றின் நடுவே டெல்லி!

சிறப்புக் கட்டுரை: நச்சுக் காற்றின் நடுவே டெல்லி!

உதய் பாடகலிங்கம்

கனரக வாகனங்கள், ட்ரக்குகள் நுழைய அனுமதி மறுப்பு. புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குவதில் தாமதம். விமானங்கள் சேவை குறைப்பு அல்லது ரத்து. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு. பொதுமக்களுக்குச் சுவாச மண்டல, சரும நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு...

இப்படி எத்தனையெத்தனை தலைப்புகள் இட்டாலும் பொருந்திப் போவதற்கான அத்தனை சாத்தியங்களையும் தந்திருக்கிறது டெல்லியில் நிலவும் தரமற்ற காற்றுச் சூழல்.

வாழவே முடியாத அளவுக்கு, இந்தியாவின் தலைநகரத்தில் அப்படியென்ன கேடு உண்டாகிவிட்டது? இந்தக் கேள்விக்கான பதில், பெருநகரங்களில் புதிதாகக் குடிவந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். வாழும் இடத்தில் மனித நெருக்கடி அதிகமாகும்போது, அவர்களது தேவைகளும் பெருகும். அதன் விளைவுகள் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கும்.

ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது, வகைதொகை இல்லாமல் தொழிற்சாலைகளை அமைப்பது, எக்கச்சக்கமான வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு நிற்பது என ஒவ்வொரு விஷயத்திலும் இது தொடரும். மற்ற நகரங்களைக் காட்டிலும், டெல்லியில் நிலைமை இன்னும் மோசம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள். டெல்லியிலுள்ள காற்றின் தரம் மாசடைந்து பல ஆண்டுகளாகிறது.

பனி, புகை, நச்சு…

சூரியனைக் கண்டதும் அகலும் பனிபோல என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி நிகழாவிட்டால், மார்கழி மாதம் முழுவதும் நாம் என்ன செய்வோம்? அதைத்தான் தற்போது டெல்லிவாசிகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெறுமனே பனி மற்றும் புகை மட்டுமல்லாமல், அவர்கள் சுவாசிக்கும் காற்றில் நச்சு அதிகமாகியிருப்பது பேராபத்தாக மாறியிருக்கிறது. வெயிலில் வாடுபவர்களுக்கு நீர்மோர், பானகம் கொடுப்பது போல தற்போது டெல்லியிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுவாச முகமூடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் இந்தப் புகை மூட்டத்தினால் டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. முன்னால் செல்லும் வாகனம் பார்வையில் புலப்படாததே இதற்குக் காரணம். இத்தனைக்கும் பட்டப்பகலில் இந்த விபத்துகள் நடந்திருக்கின்றன. இதில் மனித உயிர்கள் பலியாகவில்லை என்பது மட்டுமே ஆறுதல்.

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை மட்டுமல்லாமல் செங்கல் சூளை மற்றும் கட்டுமானத் தொழிலால் ஏற்படும் காற்று மாசுபாடு மிக அதிகமாக இருக்கிறது. இதைவிட முக்கியமான காரணமும் இந்த நச்சுச் சூழலுக்குப் பின்னல் இருக்கிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களில் மீந்திருக்கும் காய்ந்த கூளங்களை எரிப்பதனால் காற்றில் கலக்கும் தூசிதான் அந்தக் காரணம். அருகிலுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் நடைபெறும் இந்தச் சீர்கேடு, டெல்லியைப் பதம்பார்க்கிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரமான காற்றின் அளவீட்டை 100 என்று நிர்ணயித்திருக்கிறது. இந்தக் காற்றுத் தர மதிப்பீடு, டெல்லியிலுள்ள நொய்டா பகுதியில் 1,119 என்ற அளவில் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் 400, 500 என்ற அளவில் உள்ளது. அதாவது அபாய அளவு என்பதையும் தாண்டியே டெல்லி நிலைமை இருக்கிறது.

குறைவான வெப்ப நிலை, காற்றில் அதிக ஈரப்பதம், மூடுபனி ஆகியவற்றுடன் காற்றின் வேகம் குறைவாக இருப்பதனால், வளி மண்டலத்தில் கலந்திருக்கும் புகை உடனடியாக அகல்வதில்லை. இங்கிருக்கும் காற்றிலுள்ள நச்சுத் துகள் நம் நுரையீரலுக்குள் செல்லும்போது, நிச்சயம் நோய்களை உண்டாக்கும். இந்தத் தகவலை வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம், நவம்பர் மாத மத்தியில் நடைபெறவிருந்த டெல்லி மராத்தான் போட்டியை ரத்து செய்யப் பரிந்துரைத்திருக்கிறது.

முடங்கிப்போன இயல்பு வாழ்க்கை

டெல்லியிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையை முடுக்கிவிட வேண்டிய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், வேறு வழியில்லாமல் ஒரு வார காலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்றிருக்கிறார். இதுகுறித்துப் பேச, ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனாலும், விஷயம் அரசியலாகிறதே ஒழியத் தீர்வு கிடைத்தபாடில்லை.

வரும் நவம்பர் 13 முதல் 17ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவர டெல்லி அரசு உத்தேசித்திருந்தது. இதையொட்டி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் பெண்களின் வாகனங்களுக்கு விலக்களிக்கும் டெல்லி அரசின் யோசனை, அதில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, டெல்லி அரசு தங்களது அறிவிப்பைத் தள்ளிப்போட்டிருக்கிறது. காற்று மாசுபாட்டினை எதிர்கொள்ளும் எந்த நடவடிக்கையும் வேறுவிதமான சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை உண்டாக்கிவிடக் கூடாது என்ற கவலையில் இருக்கிறது கெஜ்ரிவால் தரப்பு.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “இந்தப் பிரச்னையை உயரிய கவனத்தோடு நோக்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம்” என்று வாய் திறந்திருக்கிறார். ஆனால், இது சுற்றுச்சூழலை சிதைக்கும் எமர்ஜென்சி காலம் என்பதை மத்தியிலுள்ள பாஜக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒருவேளை மழை பெய்யும் வாய்ப்பு உண்டானால், புகையின் அளவு நீர்த்துப்போகலாம். ஆனால், அதை மட்டும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க முடியாது. வாகனக் கட்டுப்பாடுகளும் விடுமுறைகளும் சுவாசக் காப்புகளும் தற்காலிகத் தீர்வு மட்டுமே. இவை டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை தந்துவிடாது.

நிலமும் நீரும் கெட்டுப்போன கையோடு, வீசும் காற்றிலும் விஷத்தைக் கலந்தாகிவிட்டது. இந்த நிலைமை, நாளை வேறு சில பெருநகரங்களுக்கும் வாய்க்கலாம். ஆதலால், இது டெல்லி அரசு சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய அரசும் உடனடியாகக் கவனித்தாக வேண்டிய விஷயம் இது. பிரச்னை முற்றிய பிறகு தீர்வைத் தேடுவதில் லாபமில்லை. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதிலும் பலனில்லை. பிரச்னையை அரசியலாக்குவதால் வாக்குகள் திசை மாறலாம். காற்று சுத்தமாகிவிடப் போவதில்லை.

இன்று டெல்லி, நாளை?

தீர்வு உடனடியாக எட்டப்பட்டாக வேண்டும். மாற்று வழிகள் கண்டறியப்பட்டாக வேண்டும். தலைநகர் டெல்லியின் நிலைமையை இந்தியா முழுமைக்குமான எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு செயலில் இறங்க வேண்டும். இன்று டெல்லி. நாளை, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவை என இது பரவலாம். ஏனென்றால் சுற்றுச்சூழல் சார்ந்த கவனமின்மை என்பது டெல்லியில் மட்டும் இருக்கும் நோய் அல்ல. அது இந்தியாவின் நோய். இந்த நோய்க்கு விரைவில் மருந்து காண வேண்டும். இதில் கண நேரமும் தாமதிக்கக் கூடாது.

பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இராது என்னும் நிலை வருவதற்குள் நாம் தீர்வு கண்டாக வேண்டும். நம்மைச் சூழும் நச்சிலிருந்து நமது வாழ்க்கையை மீட்டாக வேண்டும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017