மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

பிறந்த நாள் கொண்டாடிய கொள்ளையர்கள்: வளைத்த போலீஸ்!

பிறந்த நாள் கொண்டாடிய கொள்ளையர்கள்: வளைத்த போலீஸ்!

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து செயின் திருட்டில் ஈடுபட்ட கும்பலை, கடலூர் மாவட்ட டெல்டா டீம் வெற்றிகரமாக மடக்கி பிடித்துள்ளது.

நமது மின்னம்பலத்தில் நவம்பர் 9ஆம் தேதி காலைப் பதிப்பில், ‘ஐ.பி.எஸ். படித்த டாப் டென் கொள்ளையன்!’ என்ற தலைப்பில் கடலூர், நெய்வேலி, திட்டக்குடி டிவிஷனில் தொடர்ந்து செயின் அறுப்பு அட்டூழியங்கள் நடைபெற்று வருவதும், கடந்த வாரம் திட்டக்குடி டிவிஷனில் ஒரே நாளில் ஒரு அப்பாச்சி பைக், இரண்டு யமஹா பைக்கில் ஏழு பேர் கொண்ட டீம், நான்கு செயின் அறுப்பு செய்த சம்பவத்தையும் ஏழு பேர் பைக்கில் சென்றபோது சி.சி.டி.வி படங்களையும் வெளியிட்டிருந்தோம்.

இந்த ஏழு திருடர்களையும், கடலூர் எஸ்.பி.விஜயகுமார் கட்டுப்பாட்டில் இருக்கும், டெல்டா டீம் எஸ்.ஐ. நடராஜ் தலைமையில் உள்ள பத்து பேர் கொண்ட குழுதான் சைபர் கிரைம் உதவியோடு பிடித்துள்ளனர்.

செயின் அறுப்புகளில் ஈடுபட்ட திருட்டுக் கும்பலை பிடித்த சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “சுவாதி கொலை வழக்கில், தம் கால் சிஸ்டம் பயன்படுத்தியது பற்றி மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தீர்கள். அதே தம் கால் சிஸ்டம்தான், செயின் அறுத்த திருடர்களையும் பிடிக்க உதவிகரமாகயிருந்தது.

கடலூர் மாவட்டம் எல்லை முடிவில் வேப்பூர் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் ஆணி சங்கர். இவன் பத்தாவதுகூட படித்ததில்லை, இவன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடர் செயின் அறுப்புகள் சம்பவங்கள் நடப்பதையறிந்து, ஆணி சங்கரையும், நெய்வேலி மந்தாரக்குப்பம் கெளதம் என்பவனையும் தேடி வந்தோம். தொழில்நுட்ப உதவியுடன் வேறு ஒரு வழக்குக்காக கெளதம் பெங்களூரிலிருப்பதை அறிந்து நெருங்கிப் பிடித்தோம். அங்கு அவனிடம் கடலூர் மாவட்டத்தில் தொடர் செயின் அறுப்பு சம்பவங்கள் குறித்து விசாரித்தோம். அந்தச் சம்பவத்தை செய்தது ஆணி சங்கர்தான். அவன் புதுச்சேரியில்தான் இருக்கிறான் என்ற தகவலை அவன் கூறினான்.

தமிழ்நாடு வந்ததும் தம் கால் போடச்சொல்லி ஆராய்ந்து பார்த்தோம். அது கடலூர் - புதுச்சேரி செல்லும்வழியில் நோனங்குப்பம் கடலோர பகுதியைக் காட்டியது. டெல்டா டீம் திறமையாகவும், விவேகமாகவும், ஆணி சங்கர் இருக்குமிடத்தை நெருங்கிச் சுற்றிவளைத்ததில், ஆணி சங்கர் உட்பட 9 பேர் சிக்கிக்கொண்டார்கள். ரவி என்றவன் தப்பிவிட்டான்.

ஜெயபிரகாஷ் என்பவனுக்குப் பிறந்த நாள் விழா என்பதால் அனைவரும் சரக்கு, கோழி, மீன், மட்டன் போன்ற சைடிஷ்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான் மடக்கி பிடித்தது போலீஸ்.

ஆணி சங்கரிடம், இவர்களின் நட்பு குறித்து போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, “கடந்த ஒரு மாதம் முன்பு விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் போலீஸார் என்னைத் தேடினார்கள். எனக்கு ஒதுங்க இடமில்லாமல், பாதுகாப்பின்றி தவித்துபோய், புதுச்சேரி நோனங்குப்பம் டீ கடையில் கெளதமின் நட்பு கிடைத்தது.

கெளதம் உதவியுடன் பூர்ணங்குப்பம் ஆனந்தராமன், கார்த்திகேயன், தானம்பாளையம் பிரேம்குமார், ஆனந்த், விஜய் என்ற இசக்கிமுத்து, அபிஷேகபாக்கம் ஜெயபிரகாஷ், ரவி, தவளக்குப்பம் சூரியா என மொத்தம் பத்து பேர். செயின் அறுக்க நான்கு பைக், அதில் மூன்று திருட்டு பைக், ஒரு பைக் ரவிக்குச் சொந்தமானது. நானும் கெளதமும் செயின் அறுப்போம். மற்றவர்கள் பைக் ஓட்டுவார்கள்.

ஒரு வீதியில் ஜாலியாக நடந்து போவோம். அடுத்த வீதியில் இருவர் பைக்கில் தயாராக இருப்பார்கள். கழுத்தில் தங்க செயின் போட்டு வருபவர்கள் தகவலை ஒருவர் தெரிவிப்பார். அவரைப் பின்தொடர்ந்து சூழ்நிலைப் பார்த்து மின்னல் வேகத்தில் அறுத்துக்கொண்டு ஓடிப்போய், பக்கத்து வீதியில் தயாராக இருக்கும் பைக்கில் ஏறி போய்விடுவோம். செயின் பறிபோனவர்களும், தெருமக்களும், நடந்து சென்றவனையும், ஓடியவனையும் தேடுவார்கள்.”

“திருடும் செயின்களை எங்கே விற்பனை செய்வீர்கள் எவ்வளவு பணம் கொடுப்பாங்க” என்று கேட்க, “விருத்தாசலம், புதுச்சேரியில் விற்பனை செய்வோம். ஒரு சவரனுக்கு, அதாவது 8 கிராமுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையில் கொடுப்பார்கள். கூடவர பசங்களுக்கு தினம் ரூ.2 ஆயிரம் கூலியாகக் கொடுத்து விடுவோம்.

வழக்கமாக செயின் அறுப்பவர்கள், வீட்டுக்குள் திருட திட்டம் போட்டபோதுதான், பசங்க பயந்துபோய் மறுத்தார்கள். சில செயின் அறுப்புகள் எங்களுக்குத் தெரியாமலே அவர்களும் செய்யத் துவங்கி விட்டனர்” என்றுள்ளான் ஆணி சங்கர்.

சில மாதங்களுக்கு முன்பு தொழுதூர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்கில், பைக்கிலிருந்தவரிடம் பணம் பறிக்க முயற்சித்தபோது, பைக்கில் வந்த நபர் தற்காப்புக்கு கட்டையெடுத்து அடித்தபோதுதான், ஆணி சங்கர் விரல் ஒடிந்துபோனது.

திருடர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள், செல்போன் கால் விவரங்களை எடுத்துப் பார்த்தீங்கனா... சட்டம் படித்தவர்கள் எண்கள்தான் அதிகமாகவுள்ளது, போலீஸ் என்ன விசாரிக்கவா முடியும்?” என்று நம்மிடம் விவரித்த அதிகாரி கூறினார்.

கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் விடாமுயற்சியாலும், எஸ்.ஐ. நடராஜன் தலைமையிலான டெல்டா டீம் கடுமையான உழைப்பாலும், தொடர் செயின் அறுப்பில் ஈடுபட்டவர்களை அடியோடு துடைத்துவிட்டதால், சில நாள்களாக கடலூர் மாவட்டத்தில் செயின் அறுப்புகள் இல்லை என்கிறார்கள் வியாபாரிகளும் பொதுமக்களும். வீடுகளில் கொள்ளையடிக்கும் கடலூர் வண்டிபாளையம் முருகனைத் தஞ்சாவூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடலூர் மந்தாரக்குப்பம் கௌதமனையும் கடலூர் போலீஸ் கைது செய்திருப்பதால், வீடு புகுந்துக் கொள்ளை அடிப்பதும் குறைந்துள்ளதை உணரமுடிகிறது.

கொள்ளை அடிப்பவர்களும், கொலை செய்பவர்களும், செயின் அறுப்பவர்களும் பெரும்பாலும் கார், பைக்குகளை திருடித்தான் சமூக விரோத செயல்களை அறங்கேற்றி வருகிறார்கள்.

குற்றவாளிகளை அடிக்காமல் மரியாதையோடு கைது செய்து சிறைக்கு அனுப்புவதால், பிணையில் வந்து மீண்டும் மீண்டும் திருடத் துவங்குகிறார்கள். போலீஸ் அடித்து விசாரணை செய்தால், மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் கொடுத்து அலைக்கழிக்கிறார்கள். சட்டம் படித்தவர்களிடம் சந்தேகம் கேட்டால் பிரச்னைகள் வருகிறது. மேல் அதிகாரிகளும் கைகழுவுகிறார்கள். இதனால் போலீஸாரும் ஒதுங்குகிறார்கள்.

திருட்டுகள் போன்ற குற்றங்களை நிரந்தரமாக ஒழிக்க, காவல்துறைக்கு, சட்டம் படித்தவர்கள் ஆலோசனையும் ஒத்துழைப்பும் வேண்டும் என்கிறார் சட்டப்படிப்பு படித்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017