மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

குண்டு வீசியவர்களின் முகம்!

குண்டு  வீசியவர்களின் முகம்!

தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில்,ஜூலை 13 ஆம் தேதி நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் சந்தேக வளையத்தில் உள்ள நபர்களில் ஒருவரது முகம், சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியிருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ளது, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம். பரபரப்பான இந்தப் பகுதியில், நேற்று அதிகாலை நான்கு மணியளவில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. அது, போலீஸ் நிலைய வளாகத்துக்குள் விழுந்து டமார் என்று வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்துக்குள் இருந்த போலீஸார் வெளியில் வந்தனர். மண்ணெண்ணெய் வாசனை, உடைந்த பாட்டில் ஆகியவை மூலம் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர். அடுத்து, அந்தப் பகுதியில் உடனடியாக போலீஸார் ரோந்து சென்றனர். இந்தத் தகவல், உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதும் சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, ஒரு சி.சி.டி.வி. கேமராவில், போலீஸ் நிலையத்தைக் கடந்துசெல்லும் காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. அவர், யார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில்,தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தின்மீது வீசப்பட்டது மண்ணெண்ணெய் குண்டு என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட கைரேகைகளைப் பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துவருகிறோம். ஏற்கெனவே, எங்களது சந்தேக வளையத்தில் 12 பேர் உள்ளனர். அவர்களிடம் விசாணை நடந்துவருகிறது. அதில் ஒருவரின் முகச்சாயல் சி.சி.டி.வி. கேமரா பதிவில் உள்ள நபருடன் ஒத்துப்போகிறது. இதனால், அவர் மீதுள்ள சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும் விசாரணை நடந்துவருகிறது.

இதற்கிடையில், தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் அங்கு வேலைபார்க்கும் போலீஸார் மீதுள்ள கோபத்தில்தான் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால், இதுதொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், குண்டாஸ் போடப்பட்ட ரவுடிகளின் பட்டியல், அவர்களது ஆதரவாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. தேனாம்பேட்டையில் உள்ள குடிசைப் பகுதியில் தகராறு நடந்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது என்றனர்.

போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சென்னை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டபோது, அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த நடைமுறை இருந்துவந்தாலும், போலீஸ் எண்ணிக்கை பற்றாக்குறை காரணமாக, பல இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில்லை. இந்தப் பணியை பாரா டியூட்டி என்று அழைப்பதுண்டு. தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தால், வெடிகுண்டு வீசிய நபர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம். அதோடு, அவர்களையும் உடனடியாகக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அங்கு யாருமில்லாததால் தைரியமாக வந்து போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வீசியுள்ளனர். இதனால், சென்னை போலீஸ் கமிஷனர், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளைக் கண்டறிய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்பிறகு, ஜூலை 14 ஆம் தேதி இன்று காலை முதல் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜூலை 14 ஆம் தேதி இன்று சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கூறுகையில், தேனாம்பேட்டை சம்பவத்துக்குப் பிறகு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை.,அனைத்து காவல் நிலையத்திலும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்த வேண்டும் என்று இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.ஆனால், போலிஸ் நிலையத்தில் கேமரா இருந்தும் அதனை சரியாக பராமரிக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டால் மக்கள் எப்படி புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வருவார்கள். எனவே தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. சி.சி.டி.வி. கேமராவில் தூசி படிந்திருந்ததால், குற்றவாளியின் புகைப்படம் தெளிவாக இல்லை. இருப்பினும் கேமராவில் பதிவான ஒருநபரின் முகம், விசாரணை வளையத்திலிருக்கும் நபருடன் ஒத்துப்போவதால், அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது என்று விளக்கமளித்தார். இதைப் பார்க்கும்போது சி.சி.டி.வி. கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் குண்டு வீசிய நபர்களை விரைவாக கண்டுபிடிபதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017