மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இரட்டை இலை வழக்கில் திடீர் திருப்பம்!

இரட்டை இலை வழக்கில் திடீர் திருப்பம்!

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பெயர் அதில் சேர்க்கப்படவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால், அதிமுக சசிகலா அணி , பன்னீர் அணி என இரண்டாக உடைந்தது. மேலும் பன்னீர்செல்வம் அணியினர் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்ததால் சின்னம் முடக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியிலுள்ள நட்சத்திர விடுதியில் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டெல்லி போலீசார் தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் 4 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்துவந்த தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜூன் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தினகரனுக்கு 5 லட்சம் செலுத்தி ஜாமீனில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சூழ்நிலையில், இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நாளை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். அதில் திடீர் திருப்பமாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் தினகரன் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை என்று டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் லஞ்சம் வாங்கியதாக இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இல்லாத காரணத்தால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017