மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

கலக நாயகன்!

கலக நாயகன்!

நேற்று ஜூலை 13, ஒரே நாளில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து அமைச்சர்களும், தமிழகச் சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் அடுக்கடுக்காக கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

விஜய் டி.வி-யில் கமல்ஹாசன் தொகுத்து நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, கலாசாரத்துக்கு எதிராக இருக்கிறது என்று இந்து மக்கள் கட்சியினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதுபற்றி நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைக் கூட்டி விளக்கம் அளித்தார் கமல்ஹாசன். அப்போது கேள்விகளும் பதில்களும் பிக் பாஸைத் தாண்டியும் போய்விட்டன.

ஒருகட்டத்தில் கமல்ஹாசன், ‘நான் சிஸ்டம் சரியில்லை என்று ஒரு வருடத்துக்கு முன்பே சொன்னேன். இப்போதுதான் அதை ரஜினி சொல்லியிருக்கிறார். தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் இருக்கிறது. என் அரசை நான் கோபித்துக் கொள்வேன்’ என்றெல்லாம் கடுமையாக தமிழக அரசைத் தாக்கினார்.

கமல்ஹாசனின் இந்தப் பேட்டி ஊடகங்களில் பெரிதாக ஃப்ளாஷ் ஆக, இதுபற்றி அமைச்சர்களிடமும் கருத்துக் கேட்டார்கள் செய்தியாளர்கள். கமலுக்கு எதிரான முதல் கண்டனத்தை வீசினார் அமைச்சர் ஜெயக்குமார்.

“கமல்ஹாசன் தனது ‘பிக் பாஸ்’ டி.ஆர்,பி. ரேட் ஏற வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் மீது சேற்றை வாரி இறைக்கக் கூடாது. சிஸ்டம் சரியில்லை என்று சொன்னால் நம் நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் சரியில்லை என்று கமல் சொல்கிறாரா?” என்று கேட்டார் ஜெயக்குமார்.

இவரை அடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கமலை இன்னும் கொஞ்சம் காரம் போட்டு பேசினார்.

“கமல்ஹாசனுடைய ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியே கொண்டுவர அவர் என்ன பாடுபட்டார்? அப்போது அம்மா எப்படியெல்லாம் அவருக்கு உதவி செய்து படத்தை வெளிக்கொண்டு வர உதவினார்கள் என்பதை எல்லாம் கமல்ஹாசன் நினைத்துப்பார்க்க வேண்டும். அம்மா செய்த உதவியை மறந்துவிட்டு இப்போது அம்மா அரசையே தாக்கத் துணிந்துவிட்டார்.

அம்மா இப்போது இல்லை. அதனால், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று சூடாகவே கருத்து தெரிவித்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.

இதற்கிடையில் பொறியியல் கலந்தாய்வு பற்றி செய்தியாளர்களைச் சந்தித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். அப்போது அனைத்துத் துறையிலும் ஊழல் என்று கமல் சொன்னது பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்க, அவர் ஒரேயடியாக கமல் மீது பாய்ந்துவிட்டார்.

“கமலெல்லாம் ஒரு ஆளே கிடையாது. அவன் சொல்றதுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியமே இல்லை’’ என்று பிரஸ் மீட் என்பதைக்கூட மறந்து கமலை ஏக வசனத்தில் தாக்கினார் அமைச்சர்.

இப்படி தமிழக அமைச்சர்களால் கமல் பந்தாடப்பட்ட நிலையில்… மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, “தமிழகத்தின் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது என்று துணிந்து உண்மையைச் சொன்ன கமல்ஹாசனைப் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017