மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மினித் தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? - முரளி சண்முகவேலன்

மினித் தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? - முரளி சண்முகவேலன்

கட்டுரை 4 - திறனாளர்களும் தொழிலாளர்களும்

மூன்றாவது உபாயம் (The Third way) என்ற கருத்தாக்கத்தின் ஆரம்பம்; அவற்றின் சமூக, அரசியல், பொருளாதாரப் பண்புகள் மேற்கத்திய நாட்டில் மட்டுமல்ல; இந்தியா போன்ற நாடுகளிலும் முழு வீச்சாக முன்னெடுக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மூன்றாவது உபாயம் என்ற கருத்தாக்கம் வேண்டுமானால் நடைமுறையில் புழக்கத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றின் தன்மைகள் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள நவ தாராளக் கொள்கைகள் (neo-liberal policies) ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் மூன்றாவது உபாயத்தின் கருத்தாக்கத்தை விடவும் தொழிலாளர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.

மூன்றாவது உபாயம் என்ற கருத்தாக்கம் சோஷலிசப் பண்புகளுக்கு எதிரானதல்ல என்று சமூகவியலாளர் ஆண்டனி கிட்டன்ஸ் வலியுறுத்தினார் (படிக்க, போன வாரம்). இந்த சோஷலிசப் பண்பின் தாக்கத்தாலும், லேபர் கட்சியின் பாரம்பர்யத்தை பின்னொட்டும் டோனி ப்ளேர் தலைமையிலான அரசு கீழ்நிலைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்தது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொழிலாளர் உரிமைகளைப் பொறுத்தவரையில் இது ஒரு மாபெரும் சரித்திர நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

உலகமயமாக்கலினாலும், தகவல் தொடர்பு முதலீட்டியத்தினாலும் வேலைவாய்ப்பு அதிகரித்திடும்போது, இவ்வகையான சட்டங்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கிறது என்கிற வாதத்தில் உண்மை உள்ளது. ஆண்டனி கிட்டன்ஸ் எடுத்துரைத்த சோஷலிசம் கலந்த மூன்றாவது உபாயம் சமூகத்துக்கு பயனளிக்கக்கூடியதே என்பது இது மாதிரியான சட்டங்களின் மூலம் நம்பிக்கை பெறுகிறது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா?

உலகமயமாக்கலும், தகவல் தொடர்பு முதலீட்டியமும் இயங்கிட அரசு முதலாளிகளுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தால் ஒழிய வேலைவாய்ப்பு பெருகாது. வேலை இல்லாத பட்சத்தில் தொழிலாளர்களுக்கு வேலை பற்றிய பாதுகாப்புச் சட்டங்களினால் பயன் ஏது? இது எளிமையாகத் தோன்றினாலும், உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளும்போது, மூன்றாவது உபாயத்தில் (அல்லது நவ தாராளத்தில்) உள்ள நுட்பமான சிக்கல்கள் தெரியவரும்.

சோப் அண்ட் கோ: நறுமணப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் பல கிளைகள் கொண்ட ஒரு நிறுவனம். மேல்தட்டு மக்களே இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். லண்டனிலும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு ஒழுங்கான முறையில் ஊதியம் அளிப்பதில்லை என்பது பிபிசி-யின் நியூஸ்நைட் (Newsnight) என்ற செய்தி நிகழ்ச்சித் தயாரிப்புக்குத் தெரியவந்தது. நியூஸ்நைட்டைச் சேர்ந்த ஒரு செய்தியாளர், சோப் அண்ட் கோ-வில் ஒரு பணியாளராகச் சேர்ந்து ஒரு மாதம் வேலை பார்த்தார். அந்தக் காலகட்டத்தில் பணியாளர்களின் நலனில் எப்படியெல்லாம் முறைகேடுகள் நடந்தது என்பதை பிபிசி-யில் கடந்த வாரம் அம்பலப்படுத்தினார். அவற்றில் ஊதியச்சுரண்டல் மிக முக்கியமானது. ஒரு மணி நேரத்துக்கு சோப் அண்ட் கோ தனது ஊழியர்களுக்கு 2.05 பவுண்டுகளே கொடுத்தது. அரசின் குறைந்தபட்ச நிர்ணயத் தொகை: 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு 4.05 பவுண்டுகள்; பெரியவர்களுக்கு 7.50 பவுண்டுகள்.

இது மட்டுமல்ல; பணியாளர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர் என்ற உண்மையும் வெளிவந்தது. வாரத்துக்கு ஆறு நாள்கள் பணிக்கு வரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் (சட்டப்படி ஐந்து நாள்களே); வேலை நேரத்தில் அலைபேசியில் பேசினால், தண்டனையாக எதேச்சதிகாரமாக சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டது; பணியாளர்களுக்கு ஓய்வுநேரம் அளிக்கப்படவில்லை.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்துவந்து வேலை செய்கிற சில பணியாளர்களுக்கு தங்கும் வசதி என்ற பெயரில் சிறிய அறைகள் அளிக்கப்பட்டு, பின்னர் வாடகை கழிக்கப்பட்டு, அவர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டது. லண்டனில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகள் நடுத்தர, மேல்தட்டு மக்கள் தினந்தோறும் செல்கிற வெஸ்ட்ஃபீல்ட் என்னும் ஷாப்பிங் மாலில் உள்ளது. மக்களின் வாழ்வுத்தரம் ஓரளவு நன்றாக இருக்கும் வளமான லண்டன் பெருநகரத்தின் நடுவில், அரசாங்கத்தின் கண்முன்னே இம்மாதிரியான கொத்தடிமைத்தனம் சாத்தியமானது என்பது? சென்னை பாண்டி பஜாரில் நடப்பது சட்ட ஏமாற்று வேலை; நேரடியான சுரண்டல். மேற்குலகில், இதுவெல்லாம், கொஞ்சம் நாசுக்காக நடக்கும் - சட்டத்தின் துணையுடன்!

மீண்டும் மூன்றாவது உபாயத்துக்கு வருவோம்... உலகமயமாக்கலிலும், தகவல் தொடர்பு முதலீட்டியத்திலும் மிக முக்கியமாக வளர்ந்தது சேவைத்துறை பொருளாதாரம். இத்தன்மையை கிட்டன்ஸ் போன்ற சமூகவியலாளர்கள் அங்கீகரித்துள்ளனர். தொழில் செய்து உற்பத்தி செய்யும் ‘வாய்ப்பு’, தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிகிற வளரும் நாடுகளுக்கு (உதாரணம்: சீனா, இந்தியா, வங்காள தேசம், மியான்மார், வியட்நாம்) கொடுக்கப்பட்டது. இதனால், பண மதிப்பில் உயர்ந்த ஐரோப்பிய நாடுகள் மலிந்த விலையில் பொருள்களை இறக்குமதி செய்துகொண்டது.

விற்பனை மற்றும் சேவைத்துறை மட்டும் உள்ளூரிலேயே இருந்தது. தொழிற்புரட்சி என்பது கனவாகிப்போன நிலையில், பிரிட்டனின் பொருளாதாரம் விற்பனை மற்றும் சேவைத்துறையை நம்பியே உள்ளது. இத்துறைகளில் முதலாளிகளைக் கவரும்வகையில் - ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒரு முக்கியமான சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது (இச்சட்டம் மேற்கில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது).

இந்தப் புதிய விதிமுறையின் படி - விற்பனை மற்றும் சேவைத்துறையில் முதலீடு செய்பவர்கள், இரண்டுவிதமான முறையில் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கலாம். ஒன்று, நிரந்தரப் பணியாளர்கள்... இம்முறைப்படியின்படி தொழிலாளர்களுக்கு ஆண்டு விடுமுறை, உடம்பு சரியில்லாமல் போனால் ஊதியத்துடன் கூடிய விடுமுறை எல்லாம் வழங்கப்பட வேண்டும். அரசின் தேசிய நலச் சேவைக்கு (National Health Service) மாதச் சந்தா செலுத்த வேண்டும்; தொழிலாளருக்காக அரசுக்கு செலுத்தப்படும் ஓய்வுத் தொகையில் பங்களிக்க வேண்டும்; சம்பள வரி பிடிக்க வேண்டும்; இதன் விளைவாக அலுவலகத்தில் நிர்வாகப் பணியும், செலவினங்களும் கணிசமாக அதிகரிக்கும். மிக முக்கியமாக இப்படிப்பட்ட பணியாளர்கள் தொழிலாளர் சங்கங்களுக்குக் (Trade union) கீழ் வருவர்.

இரண்டாவது முறை... பணியாளர்களைச் சுயதொழில்முனைவோர் (self-employed) என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்வது. இதன் அடிப்படையில், தனி நபர்கள், ‘ஆலோசகர்கள்’ என (Consultants) ஒப்பந்த அடிப்படையில் தங்களது ‘சேவைகளைத்’ தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துணிக்கடையில் உள்ள விற்பனையாளர், சேல்ஸ் எக்ஸ்க்யுட்டிவ் (sales executive) அல்லது சேல்ஸ் அட்வைசர் (sales advisor) ஆகியது இப்படித்தான்.

இந்த இரண்டாவது முறையானது உலகமயமாக்கலின், தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் அடிப்படையில் உருவானதாகச் சொல்லப்பட்ட திறன் அல்லது பகுதித் திறன் சார்ந்த பணியாளர்களுக்காக (skilled or semi-skilled service providers) உருவாக்கப்பட்டது. இம்மாதிரியான திறன் சார்ந்த பணியாளர்கள், தொழிலாளர்கள் (workers or labourers) அல்ல என்று வேறுபடுத்தப்பட்டனர்.

திறனாளர்கள் தொழிலாளர்களைவிட பல படி மேல் எனவும், அவர்களைச் சுயதொழில்முனைவோர் போல நடத்துவதன் மூலம் தனிநபர்களின் வருவாய்க்கான சந்தர்ப்பத்தைப் பெருக்க அரசு ஆதரவளிக்கிறது என்பதும் இந்தச் சட்டத்திருத்தத்தின் பின்னிருக்கும் வாதம், ஊகம்.

ஆனால், நடந்தது தலைகீழ்.

சோப் அண்ட் கோ தனது விற்பனையாளர்கள் அனைவரையும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ள சுயதொழில்முனைவோர் என அரசுக்குத் தெரிவித்தது. எனவே, இத்திறன் சார் பணியாளர்கள் தாங்கள் கொண்டுவரும் மொத்த வியாபாரத் தொகையின் அடிப்படையில் கமிஷன் பெறுகிறார்கள் (எனவே தொழிலாளர்கள்). அதே சமயத்தில் கமிஷனின் அளவை குறைந்தபட்ச ஊதியத்துக்கும் கீழாக கணிசமாகக் குறைத்தது. விளைவு சட்டத்தின் ஓட்டைகளை வைத்து சுரண்டல் சாத்தியமாயிற்று.

இது சோப் அண்ட் கோ பற்றிய பிரச்னை மட்டுமல்ல. லண்டனில் உள்ள பல முன்னணி கடைகளிலும், நிறுவனங்களிலும் தினசரி நடந்துவரும் கொத்தடிமைத்தனம். அமெரிக்காவில் இது இன்னும் மோசம். அங்கே தொழிலாளர்களுக்கு இருபது சதவிகித டிப்ஸ் கலாசாரத்தின் ஆணிவேரே குறைந்தபட்ச ஊதியம் இல்லாததுதான்.

சோப் அண்ட் கோ-வுக்கு வேலை தேடிவரும் பணியாளர்களோ சட்ட ரீதியாக எதையும் கேட்டுப் பெற முடியாதவர்களாக உள்ளனர். காரணம், அவர்கள் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களல்ல. மேலும், இம்மாதிரியான பணியாளர்கள் பலரும் குடியேறிகள். வேறு சந்தர்ப்பம் இல்லாதவர்கள். இந்த நிராதரவுத்தன்மை, உலகமயமாக்கலினால், மேற்குலகில் விளைந்த ஒரு முக்கியமான நச்சு விளைவாகும்.

தகவல் தொடர்பு முதலீட்டியம், இதற்கும் ஒருபடி மேலே சென்று தொழிலாளர்களின் குரல்வளையைப் பிடிக்கிறது, சிலிக்கன் பள்ளத்தாக்கின் கிக் பொருளாதார (gig economy) மாடல்.

இந்த மாடலின்படி, ஒரு ஸ்டார்ட் அப் (Start up) முதலீடுதாரர் ஒரு வலைதளம் (web platform) வைத்திருப்பார். அங்கே வாடிக்கையாளர்கள் என்ன மாதிரியான சேவைகளெல்லாம் பெற முடியும் என அறிவிப்பிருக்கும். பணியாளர்களும் தங்களது திறன்களைச் சொல்லி வாடிக்கையாளர்களுக்காகக் கடை விரித்திருப்பார்கள். இருவரையும் தனது தளத்தில் ஒன்றுசேர்ப்பதற்கு ஸ்டார்ட் அப் முதலீடுதாரர் கமிஷன் பெற்றுக் கொள்வார். மற்றுமொரு உதாரணம்... லண்டனில் பீப்பிள் பெர் அவர் என்னும் ஒரு ஸ்டார்ட் அப் உள்ளது. இது மின்வயத்தள பொருளாதாரத்தின் (digital platform economy) அடிப்படையில் இயங்குவது.

People per Hour வலைதளத்தில் உங்கள் பொருளை விற்கலாம்; வாங்கலாம். இங்கே பொருள் (commodity) என்பது ‘சேவை, உழைப்பு, திறன்’ (service, labour, skills) என அனைத்தையும் குறிக்கும். இந்த மொழித் திரிபு மோசடியின் ஆரம்பம்.

உதாரணமாக, வீட்டில் உள்ள ஒரு மராமத்து வேலைக்கு தச்சர் தேவை என வைத்துக்கொள்வோம். உங்கள் தேவையை People per Hour வலைதளத்தில் நீங்கள் விளம்பரப்படுத்தலாம். அங்கு கடை விரித்திருக்கும் ‘திறனாளர்களை’ (தச்சுத் தொழிலாளிகள்) அணுகி அவர்களின் ‘சேவைகளை’ (வேலை) நீங்கள் கோரலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட திறனாளர்கள் (தொழிலாளிகள்) உங்கள் வியாபாரத்தின் (மராமத்து வேலை) மீது விருப்பம் தெரிவித்தால் தனது ஒப்பந்தத்தொகையை (ஊதியம்) ஒரு ‘சுய பணியாளராக’ உங்களுக்குத் தெரிவிப்பார்.

இருப்பதிலேயே குறைந்த ஒப்பந்தத் தொகை (அதாவது குறைந்தபட்ச ஊதியத்துக்கும் கீழான) சொன்ன திறனாளருக்கு உங்கள் வியாபாரத்தை அளிப்பீர்கள். இந்த பரிவர்த்தனை செய்து கொள்ள உதவிய பீப்பிள் பெர் அவர் என்னும் தளத்துக்கு, தச்சுத் தொழிலாளி கமிஷன் அளிப்பார். நீங்கள் ஒன்றும் அளிக்க வேண்டாம். ஏனெனில் தகவல் தொடர்பு முதலீட்டியம் வாடிக்கையாளரின் நலனை முன்வைத்து இயங்குவது. இந்தப் பணக் கவர்ச்சியே, வாடிக்கையாளர்களாகிய நாம் எல்லோரும் தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான முறையில் வியாபாரம் செய்யத் தூண்டுகிறது. தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் மிகப் பெரிய வெற்றி இது. உபேர், ஓலா, அமேசான், ஃப்ளிப் கார்ட் எல்லாம் இந்த மாடல்தான்.

கிக் இகனாமியின் மிகப்பெரிய நச்சு விளைவு அமைப்பு ரீதியான தொழிலாளர்களை, திறன் பணியாளர்கள் என்று ஆசை வார்த்தை ஊட்டி - அவர்களைத் தனியர்களாக்கி, அவர்களின் அடிப்படை உரிமைகளை நயவஞ்சகமாகப் பறித்தாகும். இது தச்சுத் தொழிலாளிகளுக்கும், கார் ஓட்டுநர்களுக்கும் மட்டுமல்ல: H-1 விசாவின் கீழ் அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் இதே நிலைதான்.

இடதுசாரிக் கருத்தாக்கத்தில் தோய்ந்து புழங்கிய தொழில், தொழிலாளர், உழைப்பாளர், பொருள் உற்பத்தி, உரிமைகள், நலன்கள் என்ற அரசியல் மொழிகளெல்லாம் மாறி திறன், சேவை, வேலை உற்பத்தி, அறிவுப் பொருளாதாரம் (knowledge economy) போன்ற நிர்வாக மொழிகள் வந்து இருபது ஆண்டுகளாகி விட்டன. ஒருமுறை இந்த https://www.peopleperhour.com/site/aboutus என்ற பக்கத்துக்குப் போனால் நான் சொல்வது விளங்கும். இந்த மாற்றங்களில் மறைந்து போனது தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களுமே. முதலீட்டியம் தொடர்ந்து கொழித்துக் கொண்டிருக்கிறது.

இது மேற்குலகில் மட்டும் நடப்பதாக நினைக்கக் கூடாது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் மிக மோசமான அளவில் நடக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற ஐரோப்பிய நல அரசு நாடுகளில் - உலகமயமாக்கலுக்கு, தகவல் தொடர்பு முதலீட்டியத்துக்கு எதிரான விவாதம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. சாதி என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டிப் பழகிய இந்தியா போன்ற நாடுகளில் ஏற்படப் போகும் நச்சு விளைவுகளை நினைத்தாலே நடுங்குகிறது.

உலகமயமாக்கலின், தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் மைய விளைவுகளில் ஒன்று... தொழிலாளர்களின் உரிமை, சங்கம், நலன் என்ற அரசியல் பொருள்களும், மொழிகளும் நடைமுறையில் இருந்து மறைவதற்கு ஏதுவாக சட்டங்கள் இயற்றப்பட்டதாகும்.

பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து, தனியார் நிறுவனங்கள் என துறைகளில் வேலை பார்ப்பவர்களை தொழிலாளர்கள் அல்ல, வெறும் ஒப்பந்ததார திறனாளர்கள். எனவே அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நிலையை பொருள் அதிபர்களுக்கு உண்டாக்கியதில் உலகமயமாக்கல், தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் பங்கு முக்கியமானதாகும்.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்

ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?

கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்

கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017