மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சினிமா விருதுகள் 2009-17: தமிழக அரசின் காமெடி நிகழ்ச்சி!

சினிமா விருதுகள் 2009-17: தமிழக அரசின் காமெடி நிகழ்ச்சி!

மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் திரைப்பட விருதுகள் தமிழ்நாடு அரசால் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வந்தன. விருதுகள் பெறுவதற்குத் தகுதியான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து செயல்படாமல் இருந்த அல்லது செயல்பாட்டை நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த அமைப்பு திடீரென இந்த வருடம் வெளியே வந்திருக்கிறது.

ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும், மூன்றாம் பரிசு ரூ. 75 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. இவை, திரையுலகில் இருக்கும் கலைஞர்களுக்குச் சன்மானங்களாக மட்டுமில்லாமல் மிகப்பெரிய பெருமையையும் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட 7 வருடங்கள் (2009 - 2016) தமிழக அரசு மூலம் திரைத்துறையினருக்குக் கிடைத்துக்கொண்டிருந்த பெருமை நிறுத்தப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக-வின் ஆட்சி மட்டுமல்ல. 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த திமுக-வும் இவ்விருதுகளைப் புறக்கணித்து வந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், நமக்கெதற்கு அரசியல்? விருது வாங்கியவர்களைப்பற்றிப் பார்ப்போம். மாநில அரசின் இந்த விருது வாங்கியிருக்கும் கலைஞர்களைப் பற்றி கீழே விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றிருக்கும் கலைஞர்கள், அந்த விருதுகளுக்கு 100 சதவிகிதம் பொறுத்தமுள்ள திறமைப்பெற்றவர்கள்தான். ஆனால், மாநில அரசு குறிப்பிட்டுக் கொடுத்திருக்கும் படங்களில், அதற்கான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்களா என்பது விவாதப்பொருளாக மாறிப்போகிறதல்லவா?!

சிறந்த நடிகர் விருது

2009 – கரண் (மலையன்)

2010- விக்ரம் (ராவணன்)

2011- விமல் (வாகை சூட வா)

2012 – ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்)

2013 – ஆர்யா (ராஜா ராணி)

2014 – சித்தார்த் (காவியத் தலைவன்)

மேலே குறிப்பிட்ட விமர்சன ரீதியாக நடிகர்களுக்கான விருது வழங்கப்பட்டதையே எடுத்துக்கொண்டால், 2009இல் வெளியான ‘நான் கடவுள்’ படத்துக்காக ஆர்யாவுக்குக் கொடுத்திருக்கவேண்டிய விருது, ராஜா ராணி படத்துக்காக 2013இல் கொடுக்கப்படுகிறது. ‘மலையன்’ படத்தில் கரணின் நடிப்புடன், ‘நான் கடவுள்’ படத்துக்கு ஆர்யா உழைத்திருந்தது குறைவு என்கிறார்களா? சரி, விட்டுவிடுவோம். அதிகமாக அழுத்திக்கேட்டால், விஜய் அவார்ட்ஸைக்கூட வெல்லாத படத்துக்கு மாநில அரசு விருது எப்படிக் கொடுப்பதெனக் கேட்கக்கூடும்.

சிறந்த நடிகை விருது

2009 – பத்மப்ரியா (பொக்கிஷம்),

2010 - அமலா பால் (மைனா)

2011 – இனியா (வாகை சூட வா)

2012 - லட்சுமி மேனன் (கும்கி - சுந்தர பாண்டியன்)

2013 – நயன்தாரா (ராஜா ராணி)

2014 - ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

நடிகைக்கும் நமக்கும் என்ன சார் சச்சரவு. சிஸ்டம் சரியில்லைன்னு அவங்க பேச ஸ்டார்ட் பண்ணட்டும். அப்புறம் இருக்கு.

சிறந்த இயக்குநர் விருது

2009 - அங்காடித் தெரு (வசந்த பாலன்)

2010 - பிரபு சாலமன் (மைனா)

2011 - ஏ.எல்.விஜய் (தெய்வத் திருமகள்)

2012 - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)

2013 – ராம் (தங்க மீன்கள்)

2014 – ராகவன் (மஞ்சப்பை)

ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். 2014ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருது, ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கியதற்காக இயக்குநர் ராகவனுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த படம்

2009 - பசங்க

2010 - மைனா

2011 - வாகை சூட வா

2012 - வழக்கு எண் 18/ 9

2013 - ராமானுஜன்

2014 - குற்றம் கடிதல்

2013ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டிருக்கும் விருது, கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில் உருவாகும் ராமானுஜர் நாடகத்துக்குக் கிடைத்த விருதென்று தவறாக நினைத்துவிட வேண்டாம். பாரதி, பெரியார் ஆகிய படங்களின் மூலம் 2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் தேசிய விருது விழா மேடையை அலங்கரித்த ஞான ராஜசேகரன் அவர்களின் படைப்பு இந்தப் படம்.

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது

2009 - கஞ்சா கருப்பு

2010 - தம்பி ராமையா

2011 - மனோ பாலா

2012 - சூரி

2013 - சத்யன்

2014 - சிங்கமுத்து

‘சில்லுனு ஒரு காதல்; திரைப்படத்தில், பஞ்சாயத்தில் அடிவாங்கிய பிறகு ‘ஏம்ப்பா யாரும் மிச்சம் இருக்கீங்களா?’ என வடிவேலு கேட்பது ஏனோ இந்தக் காமெடி நடிகர்களுக்கான விருது லிஸ்ட்டைப் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. சிங்கமுத்து தீவிர அரசியலிலிருந்து மீண்டும், திரைத்துறைக்குள் வலம்வர வேண்டும்.

சிறந்த இசையமைப்பாளர் விருது

2009 – சுந்தர்.சி பாபு

2010 - யுவன் ஷங்கர் ராஜா

2011 - ஹாரிஸ் ஜெயராஜ்

2012 - இமான்

2013 - ரமேஷ் விநாயகம்

2014 - ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த வில்லன்

2009 - பிரகாஷ் ராஜ்

2010 - திருமுருகன்

2011 - பொன்வண்ணன்

2012 - விஜய் சேதுபதி

2013 - விடியல் ராஜ்

2014 - பிருத்விராஜ்

இந்த விருதுகள் வழங்கியிருக்கும் பட்டியலைப் பார்த்ததும் முதலில் நினைவில் வந்தது, ஜூலை 6 அன்று வெளியான டிஜிட்டல் திண்ணை தான். விருது பெற்றிருக்கும் படங்களில் பெரும்பாலானவை, மாநில அரசின் அங்கீகாரத்தைவிட உலக அங்கீகாரத்துக்குத் தகுதியுடையவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், வேறு யாரோ சிலரை நிராகரிப்பதற்காக இப்படி ஒரு விருது பட்டியலைத் தயாரித்திருப்பது எவ்விதத்தில் அறமாகும் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுதலே அறம்.

எல்லாவற்றுக்கும் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்ட விஷால், போருக்குத் தாயாராகிக் கொண்டிருக்கும் ரஜினி, ‘கண்ட மாடும் மணியடிக்கிறது’ எனச் சொல்வதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் கமல் எனத் திரையுலகத்தில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு அணிகள் உருவாகத் தொடங்கிவிட்டன. அதிமுக கட்சியில் இருக்கும் அணிகளைவிட அதிகமாக சென்றுவிடக் கூடாது என்பதால், இப்படியொரு அதிரடி அறிவிப்பை அறிவித்திருக்கிறார்களே அன்றி, இந்த விருதினால் தமிழ் சினிமாவுக்குப் பெருமையும், மக்கள் ஆதரவும் இல்லை. அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, மக்கள் கோரிக்கையை ஏற்று ஒதுங்கி நின்றதும், இன்று ஜி.எஸ்.டி-யை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்ததும்தான் மக்களிடம் நற்பெயரை வாங்கிக் கொடுத்திருக்கின்றன. (தியேட்டர் போராட்டத்தில், கடைசியில் மக்கள் தலையிலேயே ஜி.எஸ்.டி-யைத் தூக்கிவைத்தது வேறு கதை)

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017