மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சிறப்பு நேர்காணல்: ஆயிஷா இரா.நடராசன்

சிறப்பு நேர்காணல்: ஆயிஷா இரா.நடராசன்

நீட் தேர்வு - சிலர் கல்லாகட்ட எங்கோ யாரோ கூடிச் செய்த சதி!

ஏற்கெனவே நமது கல்விமுறையின் அடிப்படை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் நம் கல்வியில் பல அடுக்குகள் இருக்கின்றன. அதாவது பணத்துக்குத் தகுந்த கல்வி, அரசு பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், சிபிஎஸ்சி பாடத்திட்டம், இன்டர்நேஷனல் பாடத்திட்டம் என இத்தனை பாகுபாடுகள் இருக்கிறதே… நமது கல்விமுறையும், பாகுபாடுள்ள அடுக்குகளும் இணையும்போது அது எத்தனைப் பெரிய பிரச்னையாக வெடிக்கும்? இப்படி கல்வியில் இத்தனை பாகுபாடு இருப்பது நியாயம் தானா?

உங்கள் கேள்விக்கு அமர்த்தியா சென் சொன்ன பதில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாற்றுக் கல்வியைக் கொண்டுவர வசந்திதேவி கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் நான் செயலராக இருக்கிறேன். நாங்கள் பலவிதமான மக்களை தமிழகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தோம். இந்தியா ஒரு மூன்றாம் உலகநாடு. இங்கே திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படுகிறது. இது இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான பாகுபாட்டை மேலும் அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் இந்த கமிட்டிக்காக அமர்த்தியா சென்னோடு வீடியோ கான்பரன்ஸ் முறையில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அப்போது அமர்த்தியா சென் கூறுகிறார், “அப்துல் கலாம் தனது புத்தகத்தில், ‘ஒரு நாடு உற்பத்தியில் திறம்பட ஈடுபட்டு, ஜிடிபி என்று சொல்லப்படுகின்ற ஒட்டுமொத்த உற்பத்தியும் உயர்த்தும்போதுதான் அந்த நாட்டு அரசால் மக்களுக்குத் தரமான கல்வியையும், மருத்துவத்தையும் வழங்க முடியும், ஆகவே அனைவரும் வாருங்கள் உற்பத்திக்காகப் பாடுபட்டு நாட்டை உயர்த்துவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். அப்துல் கலாம் கூறுவது எதிரான வழி. எந்த ஒரு நாட்டில் கல்வி ஏற்றத்தாழ்வோடும், தரமற்றதாகவும், விலை கொடுத்து வாங்கும்படியும் இருக்கிறதோ அந்த நாட்டில் உற்பத்தி அளவை அதிகப்படுத்த வாய்ப்பே இல்லை. எந்த ஒரு நாடு தன் மக்களுக்கு, கல்வியையும் மருத்துவத்தையும், தரமானதாக எல்லோருக்கும் ஒரே விலையில் அல்லது அனைவருக்கும் விலையற்றதாக வழங்குகிறதோ அந்த நாடுதான் உற்பத்தியிலும் மேம்பட்ட நாடாக மாறி பொருளாதார அடிப்படையில் மேம்பாடு அடைந்த நாடாக முடியும்” என்று அமர்த்தியா சென் கூறினார்.

இத்தனை கோடி மக்கள் வாழும் நாட்டில் இது எப்படிச் சாத்தியமாகும் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், “இந்தியா வளங்கள் நிறைந்த நாடு. ஆகவே, அது சாத்தியமான ஒன்றுதான். இந்தியாவை ஆளும் அரசுகள் மனது வைத்தால் அது நடக்கும்” என்று குறிப்பிட்டார்.

நம் நாட்டில் பிரச்னை என்னவென்றால் கல்வி மற்றும் மருத்துவத்தைத் தரமானதாக விலையற்றதாக வழங்க முடியுமா? அப்படி வழங்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இங்கே இல்லை. ஜெர்மனியில் ஒருவன் பிறந்ததில் இருந்து இறக்கும்வரை மருத்துவம் அரசு செலவுதான். பட்டப்படிப்பு முடிக்கும்வரை கல்வி அரசின் செலவுதான். லண்டனிலும் இதே நிலைமைதான். இந்த நாடுகள் எல்லாம் கம்யூனிச நாடுகள் அல்ல. ஜெர்மனி நம்மைப்போன்ற தாராளமயக் கொள்கையை உடைய ஜனநாயக நாடு. லண்டனில் மகாராணி ஆட்சி நடக்கிறது. எனில் பிரச்னை யாரிடம் இருக்கிறது என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சிங்கப்பூரிலும் கல்வியும், மருத்துவமும் இலவசம்தான். நம்மால் சாதிக்க முடியாத பொதுப்பள்ளி முறையைச் சிங்கப்பூர் சாதித்திருக்கிறது. கனடாவில் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. தஞ்சம் புகுந்தவர்களுக்குக்கூட கல்வியும் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. நம் நாட்டில் இல்லாத வளங்களா அங்கெல்லாம் இருக்கிறது? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

ஜல்லிக்கட்டுக்காக நாம் போராடி வெற்றி கண்டோம். நல்ல விஷயம்தான். ஆனால் கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் என்று நாம் களத்தில் குதித்துப் போராடுகிறோமோ அன்றுதான் கலாம் கண்ட கனவு பலிக்கும். ஒரு குழந்தை கல்வி கற்பது அடிப்படை உரிமை என்று நமது சட்டம் கூறுவது உண்மையென்றால், அந்தக் கல்வி அரசு தருகின்ற கல்வியாக இருக்க வேண்டும் என்று வசந்திதேவி கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. அரசுப் பள்ளியில் மாணவனைச் சேர்க்க யாரும் தயாராக இல்லை. அதற்காக நாம் பிரசாரம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகளை நாம் நலிவுறச் செய்துவிட்டோம். பள்ளிப் படிப்பு முடித்ததும் அரசுக் கல்லூரிகளைத் தேடி ஓடுகிறான். ஆனால், பள்ளிகளைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறோம். இந்த இரண்டுக்குமான முரணை உடைத்தால்தான் நாம் கல்வியில் நல்ல இடத்தை எட்ட முடியும்.

தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம். காரணம், நீட் தேர்வு. பன்னிரண்டு வருடங்கள் போட்ட முதல் அனைத்தும் வீணாகிவிடுவோ என்று பதறுகிறார்கள் பெற்றோர்கள். நீட் தேர்வின் வருகையால் தமிழகத்தில் உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் பேதலித்துப் போய் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகள் பெரிதாக போணி பண்ண முடியாமல், கல்லா கட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் மூன்று லட்சம் இடங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு லட்சம் மாணவர்கள்தான் விண்ணப்பித்திருக்கிறார்கள். மற்றவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். இது மிகச் சிறந்த, நடக்க வேண்டிய மிக முக்கியமான மாற்றமாக நான் பார்க்கிறேன். இதை வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கல்விக் கொள்ளை நம்மை ப்ரொபஸனல் கல்வியை நோக்கித் துரத்தியது. அதுவரை கல்வியின் நோக்கம் வேறாக இருந்தது. நீதி போதனை வகுப்பு இருந்தது. சிட்டிசன்சிப் ட்ரைனிங் இருந்தது. 365 நாளில் பள்ளி வேலை நாள்கள் 150 போக மீதி நாள்களில் கல்விச் சுற்றுலா செல்ல முடிந்தது. கிராமங்களுக்கு என்எஸ்எஸ் கேம்ப் செல்ல முடிந்தது. தேசப்பற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில் பல செயல்பாடுகள் இருந்தன. ஸ்கவுட், என்.சி.சி மாணவர்களைத் திருவிழாக்களுக்கு அழைத்துச் சென்று போக்குவரத்தைச் சீர்செய்யும் சமூகப் பணி கல்வியோடு இணைந்திருந்தது. இதுபோன்ற சமூக நடவடிக்கைகளுக்கே நமது கல்வியில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இடமில்லாமல் போய்விட்டது.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், இந்த மாற்றங்கள் வரும்முன் நம் கலை அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை புரிய வரும். இப்போது நம்நாடு கல்வியில் மிக மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஐ.டி. செக்டாரில் மட்டும் பணிபுரியும் பொறியாளர்களை உற்பத்தி செய்கின்றன பொறியியல் கல்லூரிகள். அவர் பொறியியல் துறையில், சிவிலே, மெக்கானிக்கலோ, எந்தப் பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் சரி, அவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தார். சாஃப்ட்வேரில் வேலை கிடைக்கவில்லை என்றால்தான் அவர் வேறு வேலைக்குச் செல்வார். இல்லையென்றால் மெடிக்கல் காலேஜ் சென்று மருத்துவராகிவிட வேண்டும். இதில் மாணவர்களின் நிலைமை பரிதாபமானது. எப்படியோ , உருண்டு புரண்டு, மெடிக்கல் காலேஜில் இடம்பிடித்து உள்ளே சென்றுவிடுவார்கள். மெடிக்கல் காலேஜ் சென்று அங்கே படிக்க முடியாமல் பைத்தியமாகி விடுபவர்கள் பலர். மனப்பாடம் செய்து செய்தே அவன் காலம் முடிந்துவிடுகிறது. அனைவரும் மருத்துவராக வேண்டும் என்ற வெறியே இந்த நிலைமைக்குக் காரணம்.

கல்லூரி மாணவர்களால்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றியடைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இதுபோல், எந்தவிதத்திலும் சமூகத்தோடு ஒன்றமுடியாத கதவடைக்கப்பட்ட கல்லூரிகளை 80, 90-களில் உருவாக்கி இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தக் கல்லூரிகளின் நோக்கம் நூறு சதவிகித தேர்ச்சி மட்டுமே. நூறு சதவிகித வேலைவாய்ப்பு என்ற மாயமான தோற்றத்தை உண்டாக்குவது மட்டுமே. ஆனால், இதே கல்வி நிறுவனங்களின் அடிப்படையில் செயல்படக் கூடிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் சொல்கின்றன, “இந்தியாவில் உள்ள மாணவர்களில் 65 சதவிகிதத்தினர் வேலை பார்க்க தகுதியற்றவர்கள்” என்று.

இந்த நிலையில்தான் நீட் தேர்வு வருகிறது. ராஜஸ்தான், குஜராத் தொடங்கி, தெலங்கானா வரை ஆல் இன்டியா ப்ரி மெடிக்கல் எக்ஸாம் சென்டர்களை பெட்டிக்கடை போல் நடத்தி அதன் மூலம் கல்லாக்களை நிரப்பிக்கொண்டிருந்தது ஒரு கும்பல். இந்த கும்பல் எங்கேயோ, யாரையோ சந்தித்து கூடிப் பேசிய சதிதான் இந்த நீட் தேர்வு.

ஒரு காலத்தில் இந்தியாவில் இது மாதிரி நுழைவுத் தேர்வு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அந்த நுழைவுத் தேர்வு எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் வாங்கும் மதிப்பெண், நுழைவுத் தேர்வில் வாங்கும் மதிப்பெண் இரண்டையும் வைத்து ஒரு கட்ஆப் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவப் படிப்பா இல்லை பொறியியல் படிப்பா என்பது முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள நீட் தேர்வு பன்னிரண்டு வருடப் படிப்பை துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டது. இந்தத் தேர்வை எழுதித்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். மருத்துவப் படிப்புக்குச் செல்லத் துடிக்கும் 15 சதவிகிதத்தினருக்குத்தான் இந்தக் கவலை. ஒரு குழந்தை என்னவாக உருவாக விரும்புகிறதோ அதை அவ்விதம் உருவாக்க வேண்டியது அரசின் கடமை. நாம் நீட்தேர்வை ஏன் எதிர்க்கிறோம் என்று சொல்கிறேன்.

தனியார் பள்ளிகள் மேலும் கல்லா கட்ட புதிய கதவை இந்த நீட் தேர்வு திறந்துவிட்டிருக்கிறது. நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்று ஒரு பெரிய தொகையை பெற்றோர்களிடம் இருந்து தனியார் பள்ளிகள் பிடுங்கிவிடும். இதில் சந்தேகமே வேண்டாம். இதைக் கட்டுப்படுத்தும் எந்தவித அமைப்பும் நம்மிடம் இல்லை. இந்த நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். இல்லையென்றால் கிராமப்புற மாணவர்களுக்குத் தனியான இடஒதுக்கீட்டை நாம் மத்திய அரசிடம் கேட்டு வாங்க வேண்டும். இதை உரிமையோடு கேட்கும் நிலையில் நமது மாநில அரசும் இல்லை. கொடுக்கும் நல்ல மனது மத்திய அரசிடமும் இல்லை.

நான் நெய்வேலியை உதாரணமாக எடுத்துக்கொண்டு நீட் தேர்வின் பாதிப்பைக் கூறுகிறேன். நெய்வேலியில் இரண்டு வகையான குழந்தைகள் படிக்கிறார்கள். டெல்லி அளவுக்கான மேதைமை பொருந்திய அதிகாரிகள் என்எல்சியில் பணிபுரிகிறார்கள். அவர்களின் குழந்தைகளும் நெய்வேலியில் படிக்கிறார்கள். என்எல்சிக்காக நிலம் கொடுத்துவிட்டு குக்கிராமங்களில் வாழும் கூலித் தொழிலாளியின் குழந்தையும் நெய்வேலியில் படிக்கின்றன. இந்த இரண்டு வகையான தமிழகமும் நெய்வேலியில் இருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வந்தது. நெய்வேலியில் படித்த மாணவர் ஒருவர் 720 மதிப்பெண்ணுக்கு 525 மதிப்பெண் வாங்கியிருக்கிறார். 500-க்கு மேல் வாங்கியவர்கள் 20 பேர். இவர்கள் அனைவரும் மேதைமை பொருந்திய அதிகாரிகளின் பிள்ளைகள் மட்டுமே. இவர்கள் மருத்துவப் படிப்புக்குள் எளிமையாகச் சென்றுவிடுவார்கள்.

ஆனால், நீட் தேர்வு என்று ஒன்று இருக்கிறது என்று அறியாமல், பயலாஜியில் இருநூறுக்கு இருநூறு வாங்கிய மாணவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். மல்லாக்கொட்டை பொறுக்கிக்கொண்டே தாய்மொழியில் புரிந்து மிக நன்றாகப் படித்தார்கள் இவர்கள். இந்தக் குழந்தைகளால் நீட் தேர்வு எழுத முடியவில்லை. அவர்கள் மருத்துவப் படிப்பு குறித்த கனவும் தகர்ந்து போனது.

இந்த இடத்தில் இருந்துதான் நாம் நீட் தேர்வை அணுக வேண்டும். நாம் இதிலிருந்து விலக்குப் பெற போராடிப் பார்க்க வேண்டும். இல்லை நீட் எழுதியே தீர வேண்டும் என்ற நிலை வந்தால் தாய்மொழியில் நீட் எழுதும் மாணவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த விழிப்பு உணர்வையும், அதற்குத் தகுந்த பயிற்சியையும் அரசே முன்வந்து விலையில்லாமல் வழங்க வேண்டும். பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கே நீட் தேர்வு குறித்த விழிப்பு உணர்வு இல்லை. எனவே, ஆசிரியர்களின் தரத்தை உயர்ந்த வேண்டும். ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தாமல் நாம் மாணவர்களின் தரத்தை உயர்த்துவது நடக்காத காரியம். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நீட் தேர்வு அடுத்த பத்தாண்டுகளுக்கான கல்வியை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது என்பது என் கருத்து.

- வேட்டை பெருமாள்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017