மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

நீலக்குறிஞ்சி 9: இந்திய விஷப் பாம்புகள்! - பகுதி 2

நீலக்குறிஞ்சி  9: இந்திய விஷப் பாம்புகள்! - பகுதி 2

உலகிலேயே பாம்புகள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில்தான் அதிகளவில் பாம்புகளும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிற உயிரினங்களும் வாழ்கின்றன. இந்தியத் துணைக்கண்டம் வெப்பமண்டல மழைக்காடுகள் (Tropical Rainforests), இலையுதிர் காடுகள் (Deciduous Forests), வெப்பமண்டலப் புல்வெளிகள் (Tropical Open Grasslands), அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) எனப் பல வகையான இயற்கை வாழ்விடங்களைக் கொண்டிருப்பதால் இங்கு பல நூறு வகையான பாம்புகளும் வாழ்கின்றன. உலகில் மொத்தம் 3,000-த்தில் இருந்து 3,500 பாம்பினங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் வருடந்தோறும் பல புதிய பாம்பினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் 270-லிருந்து கிட்டத்தட்ட 300 பாம்பினங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது உலகின் மொத்த பாம்பினங்களில் 10% ஆகும். வட அமெரிக்க மொத்த கண்டத்திலுமே வெறும் 160 பாம்புகள் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா முதன்மையான ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு இந்தியக் காடுகள், சுந்தரவனக் காடுகள் ஆகிய இடங்களில் ஒவ்வொரு வருடமும் பல புதிய பாம்புகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை விஷமற்ற பாம்புகளே. இந்தியாவில் மொத்தம் இருக்கக்கூடிய கிட்டத்தட்ட 300 பாம்புகளில் 60 முதல் 70 விஷப்பாம்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. நம் நாட்டில் இருக்கும் பாம்புகளில் 20% மட்டுமே விஷப்பாம்புகள். அதாவது இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் ஐந்தில் ஒன்று மட்டுமே விஷமுடையது. ஆனால், நமக்கோ எல்லா பாம்புகளும் விஷப்பாம்புகள் என்றொரு தவறான புரிதல் இருக்கிறது. எல்லா பாம்புகளும் ஆபத்தானவை அல்ல. விஷமுடைய பாம்புகள் எவை என்பதைத் தெரிந்துகொண்டு நாம் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலே போதுமானது. இந்தியாவில் இருக்கும் கிட்டத்தட்ட 60 முதல் 70 விஷப்பாம்புகள் பெரும்பாலும் மனித நடமாட்டமில்லாத அடர்க்காடுகளில்தான் இருக்கின்றன. அதனால், நாம் எல்லாப் பாம்புகளையும் பார்த்து பயப்படத் தேவையில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் வருடத்துக்கு பத்து லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகின்றனர் என்கின்றன பல ஆய்வுகள். இத்தனை பாம்புக் கடிகளுக்கும் முக்கியக் காரணம் நான்கு பாம்புகள் மட்டும் தான். அந்த நான்கு பாம்புகளைப் பற்றி தெரிந்துகொண்டு நாம் பாதுகாப்புடன் இருந்தாலே பாம்புக் கடியிலிருந்து மிகச் சுலபமாக நம்மால் தப்பித்துக் கொள்ளமுடியும். அந்த நான்கு விஷப்பாம்புகள், நாகப்பாம்பு (Indian Spectacled Cobra), கட்டு விரியன் பாம்பு (Common Krait), கண்ணாடி விரியன் பாம்பு (Russell's Viper) மற்றும் சுருட்டை விரியன் பாம்பு (Saw-scaled Viper) ஆகியன. இதன் காணொளி இணைப்பு

நாகப்பாம்பு - (Indian Spectacled Cobra)

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், காடுகள், மலைகள், நீர்நிலைகள், சமவெளிகள், புல்வெளிகள், விவசாய நிலங்கள், கிராமப்புறங்கள், மக்கள் நெருக்கடி நிறைந்த நகர்ப்புறங்கள் எனப் பல்வேறுபட்ட வாழ்விடங்களிலும் காணப்படும் மிக முக்கிய விஷப்பாம்பு இந்த நாகம். இந்தியா முழுக்க பல இடங்களில் கடவுளின் அங்கமாகவும், கடவுளின் அவதாரமாகவும் நாகம் வழிபடப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான பாம்புக்கடிகளுக்குக் காரணம், இந்த நாகப்பாம்புதான் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் பெரும்பாலான இடங்களில் இது நல்லப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. இந்தப் பாம்பு அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் கடித்துவிடாது. தனக்கு ஆபத்து வரும்போது தலைக்குக் கீழிருக்கும் கழுத்துப் பகுதியிலுள்ள சதைப்பகுதியை விரித்து, பார்ப்பவர்களை படமெடுப்பது போல் பயமுறுத்தும் இயல்புடையது இந்த நாகம். பல சமயங்களில் கொத்துவது போல் பயமுறுத்தும் இந்த நாகம், தன் வாயிலிருந்து விஷத்தை செலுத்தாமல் பொய்க்கடி (False bite) கடிக்கும் என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால், இவை ஆய்வாளர்களால் Gentleman snake என்றும் அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் தவளை, எலி, பல்லி, பாம்புக் குட்டிகள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணும் நாகப்பாம்புகளை விவசாய நிலங்களுக்கு அருகிலும், கிராமப்புறங்களிலும் பார்க்கலாம். விவசாய நிலங்களில் தவளைகள், எலிகள், பூச்சிகள் போன்றவை அதிகளவில் இருப்பதால் இதுபோன்ற இடங்களில் இந்தப் பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதிகமாக இரவு நேரங்களில் நடமாடும் இயல்புடையவை நாகப்பாம்புகள். பகல் நேரங்களில் மரப்பொந்துகள், கறையான் புற்றுகள், எலி வலைகள், மண்பொந்துகள் போன்ற இடங்களில் மறைந்துகொள்ளும். இரவு நேரங்களில் காவலுக்காகவும், இயற்கை உபாதைகளுக்காகவும் வயல்வெளிகளில் நடக்கும் மனிதர்களை தனக்கு ஆபத்தாக நினைத்துக் கடித்துவிடுவதால் இரவு நேரங்களில் வயல்வெளிகளிலும், கிராமப்புறங்களிலும் நடமாடும் மக்கள் டார்ச் லைட்டோ அல்லது ஏதாவது வெளிச்சம் தரும் விளக்குகளின் உதவியுடன் நடந்தால் அந்த வெளிச்சத்தில் பாம்புகள் விலகிச் சென்றுவிடும். பாம்புக்கடி ஆபத்திலிருந்தும் நாம் சுலபமாக தப்பித்துக் கொள்ள முடியும்.

நாகத்தின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது (Neurotoxic Venom). பாம்பு கடித்தவுடன் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்படாவிட்டால் விஷம், நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயம், நுரையீரல் போன்றவை செயலிழந்து மரணம் நேர்ந்துவிடும் ஆபத்து மிக அதிகம். இதன் காணொளி இணைப்பு

கட்டு விரியன் - (Common Krait)

இந்தியாவின் மற்றுமொரு மிக முக்கிய விஷப்பாம்பு இந்த கட்டு விரியன் பாம்பு. நாகப்பாம்பைப் போல் பெரிதும் அறியப்படாத இந்தப் பாம்பு இரவு நேரங்களில் நடமாடும் இரவாடி (Nocturnal). பகல் நேரங்களில் சில இடங்களில் தென்படும் இது, மிகவும் சாதுவாக இருக்கும் இயல்புடையது. ஆனால் இரவு நேரங்களில் நெருங்கினால் மிகவும் ஆக்ரோஷத்துடன் கடிக்கும் இயல்புடையது கட்டு விரியன். நாகத்தைப் போலவே பொந்துகள், புற்றுகளில் மறைந்து வாழும் இவை பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பாம்புகளின் குட்டிகளும், சிறிய பாம்புகளும்தான் இவற்றின் பிரதான உணவு. எலி, தவளை, பல்லி போன்றவற்றையும் உண்ணும். நாகத்தைப் போலவே இதன் விஷமும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது (Neurotoxic Venom). ஆனால், இதன் விஷம் நாகத்தை விட மிகவும் ஆபத்தானதாக ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

இரவு நேரங்களில் நடமாடும் இந்தப் பாம்புகளின் கடி பெரிதும் வலி இல்லாததாகவும், கொசுக்கடி அல்லது எறும்புக்கடி போல்தான் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இரவில் வயல் காவலுக்கும், இயற்கை உபாதைகளுக்கும் செல்பவர்கள் இந்தப் பாம்புகளால் கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஒருவேளை அப்படி கடிக்கப்பட்டாலும், பாம்புக்கடி வாங்கியதே தெரியாமல் பெரும்பாலானோர் சென்று உறங்கிவிடுவதால் உறக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாயைத் திறந்து கத்த முடியாமலும், உடலை பெரிதாக அசைக்க முடியாமலும் மக்கள் இறந்து விடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். நமது கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் தூங்குபவர்களை இந்தப் பாம்புகள் கடித்துவிட்டால், பாம்புக் கடித்ததே தெரியாமல் தூக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும்பாலானோர் இறந்துவிடுவர் என்றும் சொல்லப்படுகிறது. கட்டு விரியன் பாம்புக் கடித்தால் எந்த அறிகுறியோ, கடித்த இடத்தில வீக்கமோ இருக்காதாம். கிராமங்களில் வீடுகளின் வெளியில் படுத்திருந்து பேய் அடித்து இறந்துபோனவர்களாக சொல்லப்படும் பல மரணங்களுக்குப் பின்னால் கட்டு விரியன் பாம்புக்கடி காரணமாக இருக்கலாம்.

இதன் காணொளி இணைப்பு

கண்ணாடி விரியன் - (Russell's Viper)

இந்தியாவின் நான்கு பிரதான விஷப்பாம்புகளிலேயே மிகவும் ஆபத்தானதாக ஆய்வாளர்கள் சொல்வது இந்த கண்ணாடி விரியன் பாம்பைத் தான். அடர்ந்த காடுகள், நீர்நிலைகள், மழைப்பொழிவு அதிகமுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் பெரும்பாலும் இவை வாழ்வதில்லை. வறண்ட நிலப்பகுதிகள், புல்வெளிகள், கடற்கரைப் பகுதிகள், மணற்பாங்கான இடங்கள், முட்புதர்க் காடுகள் போன்ற இடங்களில்தான் இவை பெரிதும் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழும் கிராமப்புறங்களிலும், நெருக்கடி மிகுந்த நகர்ப்புறங்களிலும் இவை காணப்படுகின்றன. எலிகளும், தவளைகளும்தான் இவற்றின் பிரதான உணவு. கண்ணாடி விரியன் பாம்புகள் முட்டையிடாமல் குட்டி போடும் பாம்பினங்கள். பெரும்பாலான மக்களால் மலைப்பாம்புக் குட்டி என்று தவறாக கருதப்படுகிறது இந்தக் கண்ணாடி விரியன். பார்ப்பதற்கு சிறிய மலைப்பாம்பு போல் இருப்பதால், அவை விஷமற்றவை என்றெண்ணி கையால் தொட நினைப்பவர்கள் அதிகம். ஆனால், இது பெரும் விஷப்பாம்பு. கண்ணாடி விரியனின் விஷம் மனித உடலில் பாயும் ரத்தத்தைத் தாக்கும் இயல்புடையது (Haemotoxic Venom).

கண்ணாடி விரியன் பாம்புக் கடித்தால் பற்கள், மூக்கு, சிறுநீர் போன்றவற்றில் ரத்தம் வெளியாகும். பாம்புக்கடித்த இடத்தில் வலிமிகுந்த வீக்கங்களும், தோலில் நிற மாற்றமும் நிகழும். இந்தப் பாம்புக்கடிப்பட்டு காப்பாற்றப்பட்டவர்களுக்கு நாளடைவில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்கும் நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. மிகவும் ஆபத்தான விஷம்கொண்ட இந்தக் கண்ணாடி விரியன் பாம்பு, அருகில் நெருங்கினால் அதிக சத்தத்துடன் ‘ஹிஸ்ஸ்ஸ்’ என்ற ஒலியெழுப்பி பயமுறுத்தும். கடிக்கும்பொழுது இமைப்பொழுதில் மிக வேகமாக பாய்ந்து கடிக்கும் இயல்புடைய இப்பாம்புகளிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது. இதன் காணொளி இணைப்பு

சுருட்டை விரியன் - (Saw-scaled Viper)

இந்த நான்கு விஷப்பாம்புகளிலேயே மிகவும் சிறியது இந்த சுருட்டை விரியன் பாம்புதான். தலையிலிருந்து வால் வரை இரண்டடிக்குள் இருக்கும் இது கண்ணாடி விரியனைப் போலவே மிகவும் ஆபத்தான விஷப்பாம்பு. பாம்பின் தோல் மீதுள்ள நிற அமைப்பு பார்ப்பதற்கு வெட்டும் ரம்பம் போல இருப்பதால் இவை ஆங்கிலத்தில் Saw-scaled viper எனப்படுகின்றன. மிகவும் வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும் இந்த வகைப் பாம்புகள், வெயில் அதிகமிருக்கும் பகல் நேரங்களில் பாறைகளுக்கடியிலும், மணலுக்கடியிலும் சென்று மறைந்துகொள்ளும் இயல்புடையவை. வறண்ட பாலைவனங்கள், காய்ந்த நிலப்பகுதிகள் போன்ற இடங்களில் வாழும் சுருட்டை விரியன் பாம்புகள் மற்ற பாம்புகளைப் போலல்லாமல் நகரும்பொழுது பக்கவாட்டில் மிக வேகமாக நகரும் இயல்புடையவை. கண்ணாடி விரியனைப் போலவே இதுவும் குட்டி போடும் பாம்பினம். இதன் காணொளி இணைப்பு

இந்த நான்கு விஷப் பாம்புகளுடன் இந்தியாவின் மற்றுமொரு மிக முக்கிய விஷப்பாம்பான ராஜநாகத்தைப் பற்றியும், விஷப்பாம்புக் கடிக்கு கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்து பற்றியும் அடுத்த கட்டுரைப் பகுதியில் காண்போம்.

கட்டுரையாளர் குறிப்பு: சக்தி - சுற்றுச்சூழலியலாளர்

புகைப்படங்கள் நன்றி: திரு.கல்யாண் வர்மா, திரு.ராதா ரங்கராஜன், தி பொள்ளாச்சி பேப்பிரஸ் மற்றும் கூகுள் இமேஜ்.

நீலக்குறிஞ்சி 1: கழிவுநீர்த் தொட்டிகளாக உருமாறும் நீர்நிலைகள்

நீலக்குறிஞ்சி 2 - குள்ளநரி - நம்மருகில் வாழும் ஓர் அழகிய வனவிலங்கு

நீலக்குறிஞ்சி 3: சிங்கவால் குரங்குகளின் கொலைக்களமாகும் மேகமலை சரணாலயம்

நீலக்குறிஞ்சி 4: கார்பெட் தேசியப் பூங்கா - புலிகளின் சொர்க்கத்துக்குப் பேராபத்து

நீலக்குறிஞ்சி 5: கருஞ்சிறுத்தை - அடர்காடுகளில் மறைந்திருக்கும் ஓர் அதிசயம்

நீலக்குறிஞ்சி 6: பேராபத்தில் அண்டார்டிகா - காரணம் ஒரு சிறு பூச்சியினம்

நீலக்குறிஞ்சி 7: வரையாடு - கள்ள வேட்டையால் அழியும் தமிழ்நாட்டின் மாநில விலங்கு

நீலக்குறிஞ்சி 8: பாம்புகள் - நாகப்பாம்பின் மாணிக்க ரகசியம்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017