மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

நிகழ்களம்: தியாகராய நகர் - சாலையோர வியாபாரிகள்!

நிகழ்களம்: தியாகராய நகர் - சாலையோர வியாபாரிகள்!

தியாகராய நகர்... திராவிடர் இயக்கத்தின் முன்னோடியும், நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவருமான சர்.பி.டி.தியாகராயரின் நினைவாகத்தான் இப்பெயர் அந்தப் பகுதிக்கு சூட்டப்பட்டது. இன்று சென்னையின் மிகப்பெரிய, மிக முக்கிய வணிகப்பகுதியாக அமைந்திருப்பது தியாகராய நகர். இந்தப் பகுதியில் கிடைக்காத பொருள்களே இல்லை. அதேபோல, ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க சென்னையின் மிகப் பிரபலமான பகுதி தியாகராய நகர்தான். மிகப்பெரிய மாளிகைகள் முதல் சாலையோரக் கடைகள் வரை எப்போதுமே ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னையின் முக்கிய அங்கமாய் திகழ்கிறது இந்த தியாகராய நகர். பல கோடிகளில் வர்த்தகம் புரளும் தியாகராய நகரில் பெரிய நிறுவனங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்குள்ள சிறிய சாலையோரக் கடைகளின் நிலை என்ன, அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்று அறியும் நோக்கில் தியாகராய நகரில் உள்ள சிறு கடைகள் சிலவற்றில் பேசினோம். அவர்கள் கூறியதைக் காண்போம்.

தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கடை வீதிக்கு செல்லும் வழியில் சிறுசிறு பழக்கடைக்கள், துணிக்கடைகள் என சாலையோரத்தில் உள்ள சிறு கடைகள் நம்மை வரிசையாக கடை வீதிக்குள் வரவேற்கின்றன. நான்கைந்து கடைகளை கடந்ததும் குழந்தைகளுக்கான சிறிய துணிக்கடை கண்ணில்பட்டது. கடையில் வாடிக்கையாளர் யாரும் இல்லை, கடைக்காரர் மட்டுமே இருந்தார். முதலில் அவரிடம் பேசனோம். அவர் பேசும்போது "என் பேர் செந்தில்குமார். நான் குழந்தைங்க துணி வியாபாரம் பண்றேன். என்னோட சொந்த ஊர் சென்னைதான். குடியிருக்கறதும் இங்க பக்கத்துலதான். சொந்த வீடுலாம் இல்லை. வாடகை வீடுதான். நான் இவ்ளோ நாளா டிரைவரா இருந்தேன். அந்த வேலை வேண்டாம்னா முடிவு பண்ணி இப்பதான், ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்த துணிக்கடை வச்சேன். அதுல வர்ற வருமானத்தை விட இது குறைவா தான் வந்துட்டு இருக்கு. இருந்தாலும் இது என்னோட சொந்த தொழில். ஒருமுறை 4,000 ரூபாய்ல இருந்து 5,000 ரூபாய் வரைக்கும் சரக்கு எடுத்திட்டு வருவோம். ஒருமுறை எடுத்திட்டு வந்தா, வியாபாரம் ஆனா 3 நாள், 4 நாள் வரைக்கும் வரும். வாரத்துல சனி, ஞாயிறு மட்டும் எப்பவுமே அதிகமா சேல்ஸ் ஆவும். ஞாயிறு ஒருநாள் மட்டும் 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரைக்கும்கூட சேல்ஸ் ஆவும். மத்த நாள்ல அவ்ளோவா இருக்காது. மத்த நாள்ல 700 ரூபாய், 800 ரூபாய்தான் ஆகும். இங்கே கடை போடறதுக்கு, முன்னாடி இங்கே கடை வெச்சிருந்தவங்களுக்கு 200 ரூபாய் வாடகை தரணும். இது எல்லாம்போக தோராயமா பார்த்தா ஒரு நாளைக்கு 400 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரைக்கும் கிடைக்குது. போகப்போக தான் தொழிலை விரிவுபடுத்தணும்" என்று பேசி முடித்தார்.

அடுத்ததாக நாம் சந்தித்து பேசியது சத்யா பஜார் வாசலில் சிறிய நாவல் பழக்கடை வைத்திருக்கும் நிர்மலா என்ற பெண். நண்பகல் பன்னிரண்டு மணி இருக்கும். பத்து ரூபாய்க்கு நாவல் பழம் வாங்கிக்கொண்டு, அருகிலேயே அமர்ந்துகொண்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். அவர் கூறும்போது “காலைல இருந்து நீதாம்பா மொத கஸ்டமர். நான் இதே தி.நகர்லதான் இருபது வருஷமா கடை வெச்சிருக்கேன். அந்ததந்த சீசனுக்கு என்ன வருதோ அதை விப்பேன், இப்ப நவாப்பழம் சீசன், அதான் நவாப்பழம் விக்கறேன். எங்க வீட்ல, நான் ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு, மருமவன் மொத்தம் அஞ்சு பேர் இருக்கோம். நாங்க தி.நகர்லயேதான் ஒரு வாடகை வீட்ல குடியிருக்கோம். பொண்ணு அந்த சைடு டெய்லர் கடை வெச்சிருக்கு. கடை பேரு ஆகாஸ் டெய்லர்ஸ். சின்ன பையனும் இங்கேயே பெல்ட் கடை வெச்சிருக்கான். காலைல 4 மணிக்கே எழுந்து கோயம்பேடு மார்க்கெட் போயி பழம் வாங்கிட்டு வந்து வெச்சிட்டு வீட்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு 10 மணிக்கு மேல வியாபாரத்துக்கு வருவேன். எல்லா நாளும் ஒரே மாதிரியேலாம் வியாபாரம் ஆகாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி ஆகும். தோராயமா ஒரு நாளைக்கு 20 கிலோவிலருந்து 30 கிலோ வரைக்கும் விக்கும். சனி, ஞாயிறுல மட்டும் இதை விட அதிகமா விக்கும். ஒரு சில நாள்ல நட்டத்துக்குகூட வியாபாரம் ஆவும். ஒரு மாசத்துக்கு தோராயமா 10,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். மூத்த மவனுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆக்சிடண்ட் ஆயிருச்சு. அவனைக் காப்பாத்த மட்டும் 20 லட்ச ரூபாய்க்கு மேல செலவு பண்ணிட்டோம். ஆனா, இன்னமும் அவனால எழுந்து வீட்டை விட்டுக்கூட வெளிய வர முடியாது. அப்படியே படுக்க வெச்சுதான் பார்த்துக்கிட்டு இருக்கோம். அவனுக்கு ஒரு கல்யாணம்கூட பண்ண முடியாம ஆயிருச்சு. அவனுக்கு இன்னும் ஒரு நாளைக்கு 400 ரூபா செலவாகுது. அவனைக் காப்பாத்த நெறைய கடன வாங்கிட்டு ரொம்ப கஷ்டப்படறோம். ஆனா, அவன் இன்னும் முழுசா சரி ஆகல. கடையையும் கொஞ்ச பெருசா கடை வைக்கக்கூட முடியாம போயிருச்சு” என்ற சோகத்தோடு கூறினார்.

இறுதியாக, கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சமோசா மற்றும் சீம்பால் விற்பனை செய்துகொண்டிருந்த அருண் என்பவரிடம் பேசினோம். “நான் 18 வருசமா இந்தக் கடையை வெச்சிருக்கேன். சீம்பால் பாத்திங்கனா ஆந்திரால இருந்து வாங்கி வந்து விக்கறோம். ரயில்ல இங்க வந்துரும். ஒரு நாளைக்கு தோராயமா ஒரு கிலோ வரைக்கும் சேல்ஸ் ஆகும். சண்டே டைம்ல ரெண்டு கிலோ வரைக்கும் சேல்ஸ் ஆகும். இதுல பெரிய வருமானம்லா இல்லை. 10 கிலோ வித்தா 2,000 ரூபாய் கிடைக்கும். அதே மாதிரி சமோசா இங்கே பக்கத்துல ஒரு கம்பெனில வாங்கி வந்து விக்கிறோம். ஒரு நாளைக்கு 1,000 சமோசா வரைக்கும் விக்கும், சனி ஞாயிறுன்னா 2,000 சமோசா கூட விக்கும். ஒரு நாளைக்கு தோரயமா 2,000 ரூபாயிலேருந்து 4,000 ரூபாய் வரைக்கும் முதலீடு பண்ணுவோம். இங்கே முன்னாடி கடை வெச்சு இருந்தவங்களுக்கு வாடகை 200 ரூபாய் கொடுக்கணும். எல்லாம் போக ஒரு மாசத்துக்கு 15,000 கைல நிக்கும். அப்பா ஹோட்டல மாஸ்டரா இருக்காங்க. எங்களுக்கு சொந்த வீடுகூட இல்ல. எங்க ரெண்டு பேரோட வருமானத்துலதான் குடும்பத்தை நடத்திட்டு இருக்கோம்” என்றார்.

இதுவரையில் இவர்களுக்கு சென்னை மாநகராட்சி காவல்துறை எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை என்றும் மூவருமே கூறினர். அவர்கள் பேசியதிலிருந்து மூவரின் மாத வருவாயும் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரைதான் உள்ளது. பொதுவாக அங்குள்ள எல்லா சாலையோரக் கடையின் வருவாயும் இதே மதிப்பீட்டில்தான் உள்ளது. சொந்த வீடு இல்லை என்பதை மூவருமே பதிவு செய்துள்ளனர். சாலையோரக் கடைகளுக்குக்கூட, யாரோ முன்னால் கடை வைத்திருந்தார்களாம். அவர்களுக்கு இவர்கள் வாடகை அளிக்கிறோம் என்று கூறுகிறார்கள். சென்னை போன்ற மாநகரத்தில் சாலையோரக் கடைகளுக்குக்கூட வாடகை செலுத்தி, வீட்டு வாடகை செலுத்தி மீதமுள்ள தொகையில் குடும்ப வாழ்வை நடத்திவரும் இவர்களுக்கும், 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு என்ற மோடியின் கனவுத் திட்டத்தில் வீடு கிடைக்கும் நம்புவோமாக!

- ர.பிரகாசு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017