மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: அழியும் நிலையில் குசம்பப்பூக்கள்! - ஹிரென் குமார்

சிறப்புக் கட்டுரை: அழியும் நிலையில் குசம்பப்பூக்கள்! - ஹிரென் குமார்

மகாராஷ்டிர மாநிலத்தின் பாராமதி பந்தாரே கிராமத்திலுள்ள விஜய் ஜக்தாப் என்ற விவசாயி கடந்த ஆண்டில் குசம்பப்பூ விவசாயத்தைக் கைவிட்டுள்ளார். அவர் தனக்குச் சொந்தமான ஒரு ஹெக்டேர் நிலத்தில் இப்பூக்களைப் பயிரிட்டு வந்தார். “என்னதான் அறுவடை சிறப்பாக இருந்தாலும் இப்பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. குவிண்டாலுக்கு ரூ.2,500 என்பது எவ்வாறு போதுமானதாக இருக்கும்?” என்று நம்மிடையே கேள்வியெழுப்புகிறார் 51 வயதான விஜய் ஜக்தப். இப்பூக்களைப் பறிப்பதற்கான கூலியும் மிக அதிகமாக உள்ளது என்றும் அவர் கவலையுறுகிறார்.

இந்தக் குசம்பப்பூக்கள் கொழுப்புக்கு எதிரான மிகச்சிறந்த மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் எண்ணெய் கொழுப்பைக் கரைக்க உதவும். ஆனால், தொலைக்காட்சிகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாகப் பிற எண்ணெய் வகைகளை வாங்க ஊக்குவிக்கப்படுவதால் இந்தக் குசம்பப்பூ எண்ணெய்க்கு மவுசு குறைந்துவிட்டது. இவை இதயத்திற்கு நன்மை பயக்கும் என்பதையும் மக்கள் மறந்துவிட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் 13 தாவர எண்ணெய்களில் குசம்பப்பூ எண்ணெய்யானது மிகச்சிறந்த சமையல் எண்ணெய்யாக அடையாளம் காணப்பட்டது.

வீழ்ச்சியடையும் சாகுபடி :

ஒருபுறம் இந்தியா உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. மறுபுறம் இந்த குசம்பப்பூ சாகுபடி அழிந்து வருகிறது. அதற்கு உள்நாட்டில் தேவை குறைந்ததும், இவ்விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததுமே காரணம்.

ஒருகாலத்தில் குசம்பப்பூ சாகுபடியில் முன்னிலையில் இருந்த பிடார் பகுதியானது இப்போது அடையாளமற்றுக் கிடக்கிறது. இந்த நகரத்தை நோக்கிய தேசிய நெடுஞ்சாலை 65 வழித்தடத்தில் உள்ளது மர்குண்டா கிராமம். அங்கு 61 வயதான வீர ரெட்டி என்ற விவசாயி 15 ஏக்கர் நிலத்தைக் கொண்டுள்ளார். “நான் பல வருடங்களாகவே குசம்பப்பூவை பயிரிட்டு வருகிறேன். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இதை வாங்க இப்போது எவரும் முன்வருவதில்லை. இப்பூக்களை நான் விளைவித்தால் இங்கிருந்து 30 கிலோ மீட்டர்களுக்கு லாரியில் ஏற்றிச் சென்று பிடாரில் இவற்றை எண்ணெய்யாக்க வேண்டும். ஆனால், இதற்குப் பதிலாக கரும்பையோ அல்லது சோளத்தையோ விளைவித்தால் எனக்கு உரிய விலை கிடைக்கும். செலவும் குறைவாக இருக்கும்” என்று நொந்துகொள்கிறார் வீர ரெட்டி.

55 வயதான ராம்குமார் பிரஜாபதி என்ற மற்றொரு விவசாயி தனது நிலையை நம்மிடம் விவரிக்கிறார். ஹரியானாவைச் சேர்ந்த இவர் 18 வருடங்களுக்கு முன்பு பிழைப்புக்காக குஜராத்தின் குட்ச் பகுதிக்கு இடம்பெயர்ந்து, சொந்தமாக 90 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். “நான் எட்டு ஏக்கருக்கு குசம்பப்பூ பயிரிட்டேன். ஆனால் ஏக்கருக்கு 8000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இப்போது நிலத்தடி நீரும் கீழ்மட்டத்துக்குச் சென்றுவிட்டது. எனவே குசம்பப்பூவைப் பயிரிடுவதை நிறுத்திவிட்டு, குறைந்த நீரில், குறைந்த செலவில் அதிக வருவாய் தரும் வேறு ஏதேனும் பயிருக்கு மாறலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

பண்டைய காலப் பயிர் :

எண்ணெய் வித்துகள் தயாரிக்கப் பயன்படும் பயிர்களிலேயே இந்த குசம்பப்பூ மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் இவற்றைப் பயிரிடுவது தொன்றுதொட்ட பழக்கமாகவே இருந்து வந்தது. இப்பயிர்கள் கடும் வறட்சியையும் கடந்து ஆந்திராவின் மிகமுக்கியப் பயிராகத் திகழ்ந்தது. இப்பூக்கள் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுவது மட்டுமல்லாமல் முட்களைக் கொண்டுள்ள இவற்றின் இலைகள் விலங்குகளை அடைத்து வைக்கும் தட்டிகள் தயாரிக்கவும் பெருமளவில் உபயோகிக்கப்பட்டன. ஆந்திராவிலேயே செவெல்லா மற்றும் பரிகி ஆகிய இரண்டு பகுதிகளும் குசம்பப்பூ சாகுபடிக்கு மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரியாக மாறிவிட்டது.

சிவகுமாரும் அவரது குடும்பத்தினரும் குர்னகுடா கிராமத்தில் கடந்த முப்பது வருடங்களாகவே குசம்பப்பூவைப் பயிரிட்டு வருகின்றனர். வித்தியாசம் யாதெனில் அப்போது 10 ஏக்கருக்குப் பயிரிட்டார்கள்; இப்போது வெறும் 2 ஏக்கர் மட்டுமே. “எங்களது கிராமத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் வெறும் 10 சதவிகித விவசாயிகள் மட்டுமே இந்தக் குசம்பப்பூவைப் பயிரிடுகிறோம். நாங்கள் எப்போதும் செப்டம்பர் மாதத்தில் விதைப்பைத் தொடங்கி ஜனவரி மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். ஆனால் மழை பொய்த்துவிட்டாலும், நீர்ப்பாசன வசதி இல்லாமல் போனாலும், எங்களது நிலைமை மோசமாகிவிடும்; உற்பத்திச் செலவைக் கூட ஈட்ட இயலாது. இதன் மூலம் எங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு வெறும் 3000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது” என்று தனது மனதிலுள்ளதை நம்மிடம் பகிர்கிறார்.

குறைந்த வருவாயால் அழிந்த பயிர் :

உரிய வருவாய் கிடைக்காத காரணத்தால் குசம்பப்பூ பயிரிட்டு வந்த விவசாயிகள் அனைவரும் மாற்றுப் பயிர்களுக்கு மாறிவிட்டனர். மேலும், இப்பூக்களிலிருந்து எண்ணெய்யைப் பிரித்தெடுக்கும் ஆலைகளும் மூடப்பட்டுவிட்டன. அதாவது குறைந்த கவனிப்பில், குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் ஒரு பயிர் நாளடைவில் தடம்தெரியாமல் போய்விட்டது. இப்போது, இந்தியாவில் எண்ணெய் வித்துப்பயிர்கள் பயிரிடும் பரப்பில் இந்த குசம்பப்பூ ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த குசம்பப்பூவில் ஆந்திரா, மகாராஷ்டிரா கர்நாடகா, குஜராத் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 94 சதவிகிதம் பயிரிடப்படுகிறது.

அழிவுப்பாதை :

மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 1996-97களில் 7,12,500 ஹெக்டேர் அளவுக்கு இந்த குசம்பப்பூக்கள் பயிரிடப்பட்டன. அது பின்னர், 2014-15ல் 1,74,940 ஹெக்டேராகக் குறைந்துள்ளது. பரப்பு குறைந்ததைப் போலவே உற்பத்தி அளவும் 4,50,000 மெட்ரிக் டன்னிலிருந்து 90,120 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிட்டது. அதாவது, 1991ஆம் ஆண்டிலிருந்து குசம்பப்பூ பயிரிடல் 64 சதவிகிதவிகிதமும், உற்பத்தி அளவு 41 சதவிகிதம் குறைந்துள்ளது. உலகளவில் குசம்பப்பூ உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்ற போதிலும் 29 சதவிகித அளவு உற்பத்தியை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா (17%), அர்ஜெண்டினா (13%) மற்றும் கஜகிஸ்தான் (12%) ஆகிய நாடுகள் உள்ளன.

இப்பூக்களின் உற்பத்தி சரிவு குறித்து இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் விஷ்ணுவர்தன் ரெட்டி கூறுகையில், “இந்த குசம்பப்பூக்களின் அழிவுக்குக் காரணம், மக்கள் இவற்றை விடுத்து கொண்டைக் கடலை பயிருக்கு மாறிவருவதே. இதில் அதிக மகசூலும் அதிக வருவாயும் கிடைக்கிறது. அதேநேரம், குசம்பப்பூவைப் பரிப்பதற்கு அதிக கூலியும் தரவேண்டியுள்ளது” என்று கூறுகிறார்.

ஆர்வம் தேவை :

”வறட்சியிலும் குறைந்த ஈரப்பதத்திலும் வளரக் கூடிய இந்த குசம்பப்பூவைப் பயிரிடுவதற்கு விவசாயிகள் மீண்டும் முன்வர வேளாண் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் தாவர வளர்ப்பியலாளரான கடகிமத் எடுத்துரைக்கிறார். இந்த ஆராய்ச்சி மையத்தில் நான்கு வகையான முள்ளில்லாத குசம்பப்பூ வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம், தர்வாடு மற்றும் பீஜப்பூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த முள்ளில்லா குசம்பப்பூ பயிரை விளைவித்து வருகின்றனர்.

ஆச்சரியமூட்டும் விதமாக, குறைந்த மழைபொழிவு கொண்ட மகாராஷ்டிராவின் பீடு, ஒஸ்மனாபத், பர்பானி, லேச்சர், ஹின்கோலி, ஜல்கான் மற்றும் அகமதுநகர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் இந்தக் குசம்பப்பூவைப் பயிரிடுகின்றனர். இதில் குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவான விலை கிடைத்தாலும் கூட அவர்கள் அறுவடைக்காக தொழில்நுட்பவியலாளர்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர, பருத்தி, சோளம், கால்நடைத் தீவனம், சூரியகாந்தி, பச்சைப் பயிறு உள்ளிட்ட பயிர்களையும் இவ்விவசாயிகள் பயிரிடுகின்றனர். இப்பயிர்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.9,000 வரையில் கிடைக்கிறது. ஆனால், குசம்பப்பூவுக்கு ரூ.3,000 மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குசம்பப்பூ வளர்ப்பில் ஈடுபடும் மகாத்மா புலே வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷாஜி காகாசாஹேப் ஷிண்டே கூறுகையில், “எளிமையாக வளருவதாலும், குறைந்த நீர் பாசனம் போதும் என்பதாலும், குறைந்த செலவில் தாவர எண்ணெய் கிடைப்பதாலும் மரதவாடா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் இன்னமும் குசம்பப்பூவைப் பயிரிட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதிக்கு மிக அருகிலேயே எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் வசதியும், அறுவடைக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாலும் இவ்விவசாயிகள் இவற்றைப் பெரிதும் நம்பியுள்ளனர்” என்று விவரிக்கிறார்.

பல்நோக்குப் பயன்பாடு :

உலகின் பல்வேறு நாடுகளில் குசம்பப்பூவானது சமையல் எண்ணெய்க்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சீனாவில் இவற்றை மருந்துப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்துகின்றனர். இது இருதய நோய்க்கான சிறந்த நிவாரணியாக உள்ளது.

மதிப்பு கூட்டப்பட்ட குசம்பப்பூவின் விதை, எண்ணெய் மற்றும் இதழ்கள் மருத்துத் துறையில் மிகுந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. இவை நரம்பு மண்டலத்தைச் செயல்படுத்துதல், இதய அரித்மியாவின் சிகிச்சை, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், மாதவிடாய் காலத்தை ஒழுங்கமைத்தல், தசைநார் கீல்வாதம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றில் நிவாரணம் வழங்குதல் போன்றவற்றுக்கு இவை பெரிதும் பயனுள்ளதாக உள்ளன.

”இந்த குசம்பப்பூக்களை வளர்க்கும் விவசாயிகளுக்கு இரு வகையான பயன்கள் கிடைக்கின்றன. ஒன்று, எண்ணெய் தயாரிப்பு; மற்றொன்று, இவற்றின் சிறு பூக்கள் உணவுக்காகவும் ஜவுளிகளுக்கான சாயம் தயாரிப்பிலும் பயன்படுகின்றன” என்றுப் பல்தான் பகுதியைச் சேர்ந்த நிம்கார் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் (NARI) தலைவரான நந்தினி நிம்கார் எடுத்துரைக்கிறார். இந்த ஆராய்ச்சி மையமானது இதுவரையில் எட்டு வகையான குசம்பப்பூக்களை மேம்படுத்தியுள்ளது. குறிப்பிடும்படியாக இந்த மையம் உருவாக்கிய NARI 96 வகை குசம்பப்பூவில் எண்ணெய் அளவு 31 சதவிகிதமாகவும், NARI 57 வகை குசம்பப்பூவில் எண்ணெய் அளவு 37 சதவிகிதமாகவும் உள்ளது.

இதுகுறித்து நந்தினி நிம்கார் மேலும் கூறுகையில், “இந்தப் பூக்களிலிருந்து கிடைக்கும் வருவாயானது கிலோவுக்கு 800 ரூபாயாகவும், ஏக்கருக்கு 1,20,000 ரூபாயாகவும் உள்ளது. அதேபோல, விதை வாயிலாகக் கிடைக்கும் வருவாயானது கிலோவுக்கு 30 ரூபாயாகவும், ஏக்கருக்கு 60,000 ரூபாயாகவும் உள்ளது. இப்பூக்களை வளர்த்தால் குறைந்த அளவில் மட்டுமே வருவாய் கிடைக்கும் என்பதாலேயே விவசாயிகள் இவற்றைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால், இதிலுள்ள மருத்துவப் பயன்களையும் கருத்தில் கொண்டு இவற்றைப் பெருமளவில் வளர்க்க அரசானது உரியக் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலம் இவற்றின் அழிவைத் தடுக்க இயலும்” என்றார்.

நன்றி: ஸ்க்ரோல்

தமிழில்: செந்தில் குமரன்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017