மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: எல்லையில் பதற்றம்; என்னதான் நடக்கும்? - ப்ரியன்

சிறப்புக் கட்டுரை: எல்லையில் பதற்றம்; என்னதான் நடக்கும்? - ப்ரியன்

கடந்த ஒரு மாத காலமாக இந்திய - சீன எல்லையில் இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் எதிர் எதிராக மோதும் மனநிலையில் அணிவகுத்து நிற்கிறார்கள். எந்த நேரத்தில் இந்த உரசல் யுத்தமாக மாறுமோ என்ற படபடப்பு இப்போது சிறிது அடங்கியிருந்தாலும் இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. இதன் எதிரொலியாகப் புனித ஸ்தலமான கைலாஷ் மானசரோவருக்கு இந்திய பயணிகளின் வருகையைத் தடைசெய்து விட்டது சீன அரசு. நாதுலா கணவாயை மூடிவிட்டது.

ஜெர்மனியில் நடந்த ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜிஜிங்பிங், மோடியைத் தனியாக சந்திப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு புன்சிரிப்புடன் கைகுலுக்கிப் பிரிந்து சென்றார் ஜி. இந்திய - சீன வர்த்தக பேச்சுவார்த்தை முடங்கிவிட்டது. சீன அரசு இந்தியாவுக்கு செல்லும் தனது நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை அளித்திருக்கிறது. ‘தேவையில்லாமல் எங்களை வம்புக்கிழுக்கிறது இந்தியா’ என்று சீனாவும் ‘சாலைப் போடுகிறோம் என்று காரணம் காட்டி நமது எல்லைக்குள் ஊடுருவப் பார்க்கிறது சீனா’ என்று இந்தியாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன.

‘இதுபோன்ற உரசல்கள் அடிக்கடி நடப்பதுதான். ஆனால், உள்நாட்டில் மாட்டிறைச்சி, ஜி.எஸ்.டி., விவசாயிகள் பிரச்னை போன்றவற்றால் மோடியின் செல்வாக்குக் கடுமையாக அடி வாங்கியிருக்கிறது. எனவே, மக்களைத் திசை திருப்பவே ‘எல்லையில் பதற்றம்’ என்ற செய்தி முன்னணிக்கு வந்திருக்கிறது” என்று பாஜக எதிர்ப்பாளர்கள் குரல் ஒலிப்பதையும் அலட்சியப்படுத்த முடியாது. அதேசமயம் இந்திய அரசு மட்டத்தில் உரசலைச் சரிப்படுத்தும் முயற்சி எடுக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இப்போது என்னதான் பிரச்னை?

இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 3,000 கிலோமீட்டருக்கும் மேல். இந்த எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தெளிவில்லாத நிலை இருக்கிறது. 1890ஆம் ஆண்டு சீனாவுக்கும் அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கும் எல்லை தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதன்பின்பு அவ்வப்போது ஏற்படும் மோதல்களைத் தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தைகளில் எல்லை குறித்த சிறு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இதுபோன்ற ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டுகூட போடப்பட்டிருக்கிறது. எல்லை உரசல்களுக்குத் தீர்வு காண இரு நாட்டு சிறப்புப் பிரதிநிதிகளும் அடிக்கடி சந்திக்கிறார்கள். இருந்தும் புதுப்புது பிரச்னைகள் உருவாகி இருநாட்டு உறவுகளும் சிக்கலாகிறது. 2014ஆம் ஆண்டு மட்டும் சீனா 334 முறை ஊடுருவியிருக்கிறது. 2013, 2014ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற உரசல்கள் காரணமாக போர் மேகங்கள் சூழ்ந்து பின்னர் பேச்சுவார்த்தைகளில் உறவு சீரடைந்தது.

சீனா 1950-களிலேயே திபெத்தை கபளீகரம் செய்து விட்டது. எப்படியாவது பூடானை வளைத்துவிட வேண்டும் என்பது அதன் நோக்கம். பூடான் தனது பாதுகாப்புக்கு இந்தியாவையே நம்பியிருக்கிறது. தனிநாடாக இருந்த சிக்கிம் சீனாவுக்குப் பயந்து கொண்டு இந்திரா காலத்திலேயே இந்தியாவுடன் இணைந்து விட்டது. எல்லை பகுதிகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக சாலை மற்றும் பல அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது சீனா. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் வழியாகத் தனது நாட்டை குவண்டர் துறைமுகத்துடன் இணைக்கும் ‘ஸில்க் ரூட்’ என்ற சாலையை அமைக்கிறது சீனா. பாகிஸ்தான், சீன சார்பு நிலை என்பது இந்தியாவைச் சங்கடப்படுத்த அல்லது எச்சரிக்கை செய்வதற்காகவே என்பது தெரிந்த விஷயம். தெற்காசியாவில், குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் இலங்கை உட்பட்ட நாடுகளில் தனது வல்லாண்மையை நிறுவப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சீனா. இப்போது நமது எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றம், சீனாவின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். தற்போது உரசல் ஏற்பட்டிருக்கும் டோக்லம் என்ற இடம் இந்திய – சீன - பூடான் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. மிக குறுகியப் பகுதி. சாலை அமைக்கிறோம் என்ற சாக்கில் இந்திய, பூடான் எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கப் பார்க்கிறது சீனா. அது விரும்புவது போல சாலை அமைக்கப்பட்டால் நாளை பூடானுக்கும் இந்தியாவுக்கும் நிலத்தொடர்பு துண்டிக்கப்பட்டு பூடான் தனிமைப்படுத்தப்படும். பின்னர், சீனா பூடானை ஆக்கிரமிப்பது எளிதாகி விடும். மேலும் நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுடனான தொடர்பு கடினமாகிவிடும். இப்படிப்பட்ட கேந்திரமான இடத்தில் மோதல் நடந்துகொண்டிருக்கிறது. எனவே தனது தவறை உணர்ந்து சீனாவே பின்வாங்கினால்தான் பிரச்னை முடிவுக்கு வருமே தவிர, இந்தியா சமரசமாக போகும் வாய்ப்பே இல்லை.

மற்றபடி பொதுவாகவே பார்க்கப்போனால் இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் உரசல்களை எதிர்காலத்தில் தவிர்க்கவே முடியாது என்பது தான் யதார்த்தம். ‘லடாக் பகுதியில் சீனா 14,000 சதுர கிலோமீட்டரை ஆக்கிரமித்து தன் பிடியில் வைத்திருக்கிறது’ என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. சீனாவோ நமது அருணாசலப்பிரதேசமே அதற்குச் சொந்தமானது என்று சொல்கிறது. இப்படிப்பட்ட சூழலில் உரசல்களின் நடுவேதான் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இரு நாடுகளும் இருக்கின்றன. எதிர்காலத்தில் உலகப்பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பு செய்யக்கூடிய இந்த இரு நாடுகளும் ஒரு முழு அளவு யுத்தத்தை மிக, மிகக் கடைசி வாய்ப்பாகத்தான் வைத்துக்கொள்ளும். போர் நடக்குமானால் உயிர் இழப்புகளைத் தவிர பொருளாதாரத்தில் இரு நாடுகளும் பல வருடங்கள் பின்தங்கி விடும்.

சீனாவுடன் 1962இல் நடந்த போரில் நாம் நிறைய நிலப்பகுதியை இழந்தோம். நேரு சீனாவை நம்பினார். பஞ்சசீலம் பேசிக்கொண்டு நமது முதுகில் குத்தியது சீனா. நாம் ராணுவ ரீதியாக வளர்ச்சியடையாத காலம் அது. அதனால்தான் ‘இது 2017; 1962 அல்ல’ என்று சீனாவை எச்சரித்திருக்கிறார் அருண் ஜெட்லி. ‘ஆமாம்; நீங்கள் மட்டுமா வளர்ந்திருக்கிறீர்கள். நாங்களுமல்லவா வளர்ந்திருக்கிறோம்’ என்று சீன வெளியுறவு அதிகாரி பதிலடி கொடுத்திருக்கிறார். உண்மை தன். இந்திய ராணுவத்தை விட மூன்று மடங்கு அதிகம் பலம் பெற்றது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம். இந்தியா 2017-18இல் மூன்றரை லட்சம் கோடி பணத்தை ராணுவத்துக்கு ஒதுக்கியிருக்கிறது. சீனாவின் ராணுவ பட்ஜெட் மூன்று மடங்கு அதிகம். இந்தியா, பாகிஸ்தான் யுத்தம் நடந்தால் அதில் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் என்பது பொதுவெளியில் உள்ள கருத்து. அதே சமயம் சீனாவுடன் போர் என்றால் இந்தியா வெற்றி பெறும் என்று சொல்வதற்கு சற்று தயங்குவோம். அதற்குக் காரணம் நம்மைவிட சீனா ராணுவ ரீதியாக அதிக பலத்துடன் இருப்பதுதான். ஆனால், இனி நடக்கப்போவது மரபு சார்ந்த போராக இருக்காது. நம்மைவிட அதிக பலம் பெற்றிருந்தாலும், புதுமையான யுக்திகள் மூலம் எதிரியை அடக்க முடியும். குட்டி நாடான இஸ்ரேல் சுற்றியுள்ள பகை நாடுகளைச் சமாளித்து வருவதை உதாரணமாகக் கூறலாம்..

இதுபோன்ற விஷயங்கள் ஒருபக்கம் இருக்க, பொருளாதார அடிப்படையில் இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலை உள்ளதால் போர் மூளுவதற்கான வாய்ப்பேயில்லை என்ற கருத்தும் உண்டு. அதுவும் உண்மைதான். இரு நாடுகளிலும் உள்ள மக்கள்தொகை காரணமாகப் பிரமாண்டமான நுகர்வோர் சந்தைகளாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவைவிட உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கும் சீனாவுக்கு இந்தியா பெரிய சந்தையாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதிக உற்பத்தியால் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடியைச் சந்தித்தது சீனா. எனவே இந்தியச் சந்தை சீனாவுக்கு அவசியத் தேவை. இரு நாடுகளுக்கிடையே தற்போது 7,000 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகம் நடக்கிறது. (ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 65 ரூபாய்) இதில் 5,000 கோடி டாலர் மதிப்புக்குச் சீன பொருள்கள் இந்தியாவில் இறக்குமதியாகின்றன. இந்த இறக்குமதியில் கம்ப்யூட்டர், செல்போன் உட்பட 20,000 வீட்டு உபயோக பொருள்கள் இடம்பெற்றிருக்கின்றன. போர் நடந்தால் இந்த வர்த்தகத்தைச் சீனா இழக்க நேரிடும். இதன் காரணமாக சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் மோடிக்கு வேண்டிய அதானி குழுமம் உட்பட பல தொழிலதிபர்களோடு சீனத் தொழிலதிபர்கள் இரு நாடுகளிலும் புதிய தொழில்களைத் தொடங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். எனவே, இந்தச் சூழலில் சீனாவும் போரை தவிர்க்கவே செய்யும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், அதற்காக எல்லை உரசல்களை முற்றிலும் அது தவிர்க்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. எனவே கரடுமுரடான பாதையில்தான் இரு நாட்டு உறவுப் பயணங்களும் அமையும்.

பல பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் மக்களைத் திசை திருப்பி மோடியின் செல்வாக்கை மீட்டெடுக்கவே ‘எல்லையில் பதற்றம்’ என்று கிளப்பி விடப்படுகிறது என்ற விமர்சனம் சரிதானோ என எண்ணும் வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் போராட்டங்கள் அடங்கிப் போய்விட்டன. ஜி.எஸ்.டி-க்கு எழுந்த எதிர்ப்பு ஆளுங்கட்சிக்கு ஆதரவான கார்ப்பரேட் மீடியாக்களால் அடக்கி வாசிக்கப்படுகிறது. இதற்கிடையில் ராகுல் காந்தி சீன தூதரைச் சந்தித்ததுகூட சர்ச்சையாகிவிட்டது. வெளிநாட்டுத் தூதர்கள் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பது புதிதல்ல. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முதலில் தேவையில்லாமல் சந்திப்பை மறைத்து சர்ச்சையாக்கி விட்டார். அதே சமயம் ‘எல்லைப் பதற்றத்துக்கு’ மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். அரசு வெளிப்படையாக இல்லாத நிலையில் கார்ப்பரேட் மீடியாக்கள் பரபரப்பை கிளப்பி, மக்களைத் திசை திருப்பி, பாஜக-வின் தேவையை நிறைவேற்றிவிட்டதோ என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராகப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் இன்னமும் புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமல் காலம் கடத்துகிறார் மோடி. ‘எல்லையில் உரசல்’ என்ற நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இவ்வளவுதானா?

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017