மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 பிப் 2017

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை : ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை : ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் திட்டமிட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேற்று நேரில் சந்தித்தபின், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜனாதிபதியை சந்தித்து தமிழக சட்டப்பேரவையில் நடந்த அத்துமீறல் குறித்து புகார் மனு கொடுத்தோம். அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி கூறினார்.காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினோம். தற்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றும் அவர் கூறினார். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் , "தமிழகத்தில் உள்ள பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட நெடுவாசல் கிராமத்தில், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுப்பதற்கு எதிராக நடைபெற்று வரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் குறித்து தங்களுடைய மேலான கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த இயற்கை வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் மற்றும் அப்பகுதிகளில் வசித்து வரும் பல லட்சக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று தமிழக மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும், இந்த திட்டத்தாலும், அதற்காக தோண்டப்படும் ஆழம் மிகுந்த கிணறுகளாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும் என்ற அச்சத்தினை அவர்கள் தங்களின் போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நான் நம்புகிறேன். வளர்ச்சித் திட்டங்கள் பல தலைமுறைகளுக்கு உதவக்கூடிய வகையில் தீட்டப்படுகின்றன என்றாலும், நீண்ட கால வாழ்வு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்கள் தங்களை சுற்றியுள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கும் உரிமையை போற்றுவதாக இருக்க வேண்டும். இந்தநிலையில், மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இத்திட்டம் தொடரப்படுமேயானால், இந்த தலைமுறையின் உரிமைகள் மட்டுமல்ல- எதிர்கால தலைமுறையினரின் உரிமைகளும் பறிக்கப்படுவதோடு, அது இயற்கை நீதிக்குப் புறம்பானதாக அமைந்து விடும் என்று அஞ்சுகிறேன்.

எனவே, நெடுவாசலில் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்துக்கு முற்றிலும் விரோதமானது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன். ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்கள் என்பதையும், அந்த எஜமானர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவு இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன். இந்த திட்டம் ஒவ்வொரு முனையிலும் பல லட்சக்கணக்கான பொதுமக்களால் எதிர்க்கப்படும் நிலையில் , தமிழக மக்கள் மற்றும் விசாயிகளின் நலன் கருதி, நெடுவாசல் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

சனி 25 பிப் 2017