மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

அனைத்துக் கட்சிக் கூட்டம்!தீர்மானமும் கருத்தும்!

அனைத்துக் கட்சிக் கூட்டம்!தீர்மானமும் கருத்தும்!

இன்று நடத்திய அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களுடன் அண்ணா அறிவாலயத்தில் நடத்திய கலந்துரையாடலின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள்,

தீர்மானம் : - 1

தமிழக விவசாயிகள் குறிப்பாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் வறுமையாலும், கடன் தொல்லைகளாலும் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. மேலும் ஏறத்தாழ 24 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீர் பஞ்சத்தால் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் என்றும் - அனைத்துக் கட்சித் தலைவர்களையும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து இப்பிரச்னையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் நர்மதா நதிநீர் மேலாண்மை வாரியம், கிருஷ்ணா-கோதாவரி நதிநீர் மேலாண்மை வாரியம் ஆகிய முன்னுதாரணங்களைப் பின்பற்றி, விருப்புவெறுப்பின்றி, நடுநிலையோடு தீர்வு காண வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : - 2

வேண்டுமென்றே நீதி - நியாயத்துக்கு எதிராகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துகளை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப்போட்டு, பிரச்னையை திசை திருப்பும் மத்திய அரசின் முயற்சியையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் : - 3

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை பொய்த்துப் போய் விட்டது. மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீர் அடுத்த பதினெட்டு நாட்களுக்குக் கூட போதாத நிலை ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு 2000 கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும், அந்த உத்தரவை கர்நாடக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அப்படியே நிறைவேற்றினாலும் அந்தத் தண்ணீர் சம்பா பயிரைக் காப்பாற்ற நிச்சயமாக உதவாது. இந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே குறுவை, சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வழங்காத காரணத்தால், விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களுடைய துன்பங்களை ஓரளவுக்கேனும் குறைத்திடும்வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசையும், மத்திய அரசையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : - 4

காவிரி நீர்ப் பங்கீடு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் காவிரி படுகைப் பகுதிகளில் பார்வையிட்ட நிலையிலும் அந்த குழுவினரின் அறிக்கை தற்போது தமிழகத்தில் நிலவி வரும் உண்மைச் சூழ்நிலையை நடுநிலையோடு வெளிப்படுத்தும்வகையில் இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்: தலைவர்கள் கருத்து!

திமுக அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நிறைவடைந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

அரசியல் ஆதாயமல்ல - ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் தீர்வு காண திமுக சார்பில் இன்று சென்னை அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டம் முடிந்தபிறகு திமுக பொருளாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காவிரி நதிநீர் பங்கீடு குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முன்வரவில்லை என்றால், மீண்டும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும். மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி விவாதிக்க மீண்டும் ஒருமுறை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டலாம் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று நடந்த கூட்டத்துக்கு அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ளாத கட்சிகள்பற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும். கடந்த ஆட்சியில், இதே பிரச்னைக்காக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதுபோது, திமுக தலைவர் கருணாநிதி அதற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி சிவாவை அனுப்பிவைத்தார். எனவே, திமுக எப்போதுமே மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மேலும் இதில் எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. காவிரி பிரச்னைகளில் தீர்வு காண விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது ஊடகங்களும் ஒருங்கிணைய வேண்டும்” என்று கூறினார்.

திருநாவுக்கரசர்

தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் ஒன்றாகக் கூடி காவிரி பிரச்னைபற்றி விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நானும் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி அவர்களும் காங்கிரஸ் விவசாய அணியினுடைய தலைவர் பவன்குமார் அவர்களும் கலந்துகொண்டோம். பெரும்பாலான அரசியல் கட்சிகள் பங்குகொண்ட இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டசபையை உடனடியாகக் கூட்ட வேண்டும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போல, தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் கூட்டி, பிரதமரைச் சந்தித்து காவிரி பிரச்னையில் தீர்வு காண அழுத்தம் தர வேண்டும். இதற்கு மேலும் தமிழக அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், மீண்டும் ஒருமுறை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும். கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், அதற்குமுன்னர் பாஜக ஆட்சி நடைபெற்றபோது இந்த காவிரி பிரச்னை இருந்தது. இது மொழி, அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரச்னை. மாநிலங்களிடையேயான பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நிர்வாகரீதியான சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு அதற்கு தயங்குகிறது. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசும் மத்திய அரசும் மதித்து செயல்பட வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் லாபம்பெரும் நோக்கில் மத்திய அரசு அதையும் கடைப்பிடிக்காமல், கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. எனவே, சட்டரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.

ஜி.கே.வாசன்

"காவிரி நதிநீர் பிரச்னை என்பது அரசியல் பிரச்னை இல்லை. இது, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை என்றரீதியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் தமிழக விவசாயிகளின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்படுகிறது, அவர்களது உரிமைகள் கோரப்படுகிறது. அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முன்னேற்பாடுகளைச் செய்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல, கர்நாடக அரசு நீதிமன்றங்களின் தீர்ப்பை மதித்து, தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். இந்த தீர்மானங்களின் அடிப்படையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்வகையில் தமிழக அரசு நடந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தை அரசியல் நோக்கத்தோடு அணுக வேண்டாம். அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஒருங்கிணைந்து விவசாயிகளுக்காகப் போராட நடத்தப்பட்ட கூட்டம் இது"

பி.ஆர். பாண்டியன்

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 25 அக் 2016