மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

யார் நடத்தினாலும் சென்றிருப்போம்: ஸ்டாலின்!

யார் நடத்தினாலும் சென்றிருப்போம்: ஸ்டாலின்!

காவிரி விவகாரத்துக்காக திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அங்கு பேசிய ஸ்டாலின், வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியதாகக் கூறியுள்ளார். திமுக-வின் இக்கூட்டத்தை 16 கட்சிகள் ஆதரித்திருக்கின்றன. திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, தமாகா சார்பில் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர்மொய்தீன், தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் திருப்பூர் அல்தாப், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன், விவசாய தொழிலாளர் கட்சி சார்பில் பொன்.குமார், வல்லரசு பார்வர்டு பிளாக் சார்பில் பி.என்.அம்மாவாசி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கதிரவன், உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் செல்லமுத்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தெகலான் பாகவி, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் பஷீர் அகமது, திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் வியாகத் அலிகான் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், “காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடக அரசு உருவாக்கியுள்ள பிரச்சினைக்காகக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், தலைவர்களையும், விவசாய அமைப்புகளைச் சேர்ந்த அன்பு நண்பர்களையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் பிரச்சினையின் தொடக்கம் முதலே இது நமது விவசாய பெருமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதாலும்; காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்குள்ள நியாயமான, சட்டரீதியிலான உரிமைக்குக் குரல் கொடுத்து நிலை நாட்டிட வேண்டிய பிரச்சினை என்பதாலும்; நடுவர் மன்றம் அமைப்பது ஒன்றே தீர்வுகாண உதவிடும் என்பதால் முதன்முதலில் அதற்கான நகர்வை முன்னெடுத்து சட்டப்படி நடுவர் மன்றம் அமைத்திடவும், நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினைப் பெற்றிடவும், அதைத் தொடர்ந்து இறுதித் தீர்ப்பினைப் பெற்றிடவும், அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகள் - அலுவல் ரீதியான கடிதங்கள் - நீதிமன்ற நடவடிக்கைகள் என அனைத்துத் தளங்களிலும் தயங்காமலும், தவறாமலும் பாடுபட்டவர் தலைவர் கலைஞர் என்பதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பூர்வமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் ஈடுபாடு காட்டி வருகிறது.

தமிழ்நாட்டிற்குரிய நீர்ப் பங்கீட்டினை முறையாகவும் சட்டப்படியும் செய்வதற்குக் கர்நாடக அரசு தவறிவிட்ட காரணத்தினால், கடந்த ஐந்தாண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயம் பொய்த்துப் போய் விட்டது. இந்த ஆண்டு சம்பாவும் கேள்விக் குறியாகி விட்டது. முப்போகம் என்பது ஒரு போகம் மட்டும்தான் என்று சுருங்கி, தற்போது அந்த ஒரு போகத்திற்கும் ஊறு விளைந்து சூனியமாகி விட்டது. விவசாயப் பெருமக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அறவழிப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். அவர்களுடைய போராட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவும், போராட்டங்களில் பங்கேற்கவும் முன்வந்திருக்கின்றன.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தமிழகத்தின் பொதுப் பிரச்சினை என்பதால், ஓரிரு அரசியல் கட்சிகளைத் தவிர, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிப் போராடத் தொடங்கி விட்டன. தற்போதைய போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும், விவசாய அமைப்புகளின் சார்பிலும்; தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் - சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஒருமனதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று, இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்டு அரசியல் அழுத்தம் தர வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்தும்; தமிழக அரசு அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

விவசாய அமைப்புகளின் கூட்டத்தை நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை நேரடியாக நானும், கழகத்தின் முதன்மைச் செயலாளரும் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தியும் கூட, தமிழக அரசு அசைந்து கொடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினையில் விவசாயப் பெருமக்களுக்கு ஆதரவளித்திடும் அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒருமுகமாக ஒரே நோக்கில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முயற்சி எதையும் தமிழக அரசு மேற்கொள்ளாத காரணத்தாலும்; பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் - ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சி என்ற முறையிலும், தற்போது சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய எதிர்க்கட்சி என்ற முறையிலும் - கூட்டிட முன்வர வேண்டும் எனக் கேட்டு வந்தன.

கர்நாடக மாநிலத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படும் அரசியல் கட்சிகளும் கூட, கர்நாடக அரசுடன் கைகோர்த்து ஓரணியில் திரண்டு, பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டதையும், அந்தக் கூட்டங்களில் முன்னாள் பிரதமர், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் உச்சமன்ற நீதிபதி, மத்திய அரசின் இன்றைய அமைச்சர்கள் கலந்து கொண்டதையும், ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும், அனைவரும் ஒன்றிணைந்து பிரதமரையும் மற்ற மத்திய அமைச்சர்களையும் சந்திப்பதையும் கண்ணுற்ற பிறகும் கூட, தமிழக அரசு ஜனநாயக ரீதியான கலந்துரையாடலை மேற்கொள்ளஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிடத் தொடர்ந்து தயக்கம் காட்டியதால்; இனியும் தாமதித்தால் தமிழகத்தின் ஒற்றுமையைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்படுவதைத் தவிர்த்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதென முடிவெடுத்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப் பட்டன. அப்படிக் கூட்டப்படும் கூட்டம் தி.மு.க. நடத்தும் கூட்டமல்ல; தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்டிட நடத்தப்படும் கூட்டம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டிட, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடின்றி, கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றிட வேண்டும் என்று பகிரங்கமாக, மெத்தப் பணிவோடு, நான் அழைப்பு விடுத்தேன்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, விவசாயிகளின் நலனுக்காகவும், உரிமைகள் பாதுகாப்புக்காகவும் தமிழக அரசு அல்ல, அ.தி.மு.க. அரசு அல்ல, வேறு எந்தக் கட்சி கூட்ட முன்வந்திருந்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிட முன்றேன்னக் கழகம் நிச்சயம் கலந்து கொண்டிருந்திருக்கும். வேறு யாரும் முன்வராத காரணத்தால், வரலாற்றுப் பிழை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை - அதன் மூலமாகக் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திட வேண்டிய கட்டாயத்தை - கடமையாகக் கருதி நாங்களே மேற்கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய இந்த முயற்சி - இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றிகரமாக நடந்து விடக்கூடாது என்று ஊடகத் துறையிலே ஒரு சிலரும், வேறு துறையிலே உள்ள ஒரு சிலரும் ஆசையும் ஆர்வமும் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குக் காவிரிப் பிரச்சினையை விட - விவசாயப் பெருமக்களின் உயிராதாரத்தை விட - தி.மு.கழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சிதான் மிகுதியாகும் என்பதை அனைவரும் அறிவர். ‘வாழ்க வசவாளர்கள்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதைப் போல, காவிரிப் பிரச்சினையிலும் காழ்ப்புணர்ச்சி காட்டுவோர்க்கு, கழகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கவும், உச்ச நீதிமன்றத்தின் கட்டளைகளை மறுதலிக்கவும், நீதி - நியாயம் - சட்ட நெறிமுறைகளைப் புறக்கணிக்கவும், கருத்து வேறுபாடு - கட்சி மாறுபாடு மறந்து அனைத்துக் கட்சிகளும் கர்நாடகத்திலே ஒரே நோக்கில் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நடக்கவும், உச்ச நீதிமனறத்தின் கட்டளைகளை ஏற்கவும், நீதி - நியாயம் - சட்ட நெறிமுறைகளின்படி நடக்கவும், ஒற்றுமையோடு ஒன்றிணைவதில் ஒரு சிலருக்கு மனக்கசப்பு. எதிர்மறையான எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள அங்கே அனைவரும் ஒன்று சேருகிறார்கள். ஆக்கபூர்வமான நோக்கத்தை நிறைவேற்ற இங்கே சிலர் யோசிக்கிறார்கள் என்றால், அவர்களைச் சரித்திரம் அடையாளம் காட்டும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016