மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்! (பகுதி-6)

ஏ.ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்! (பகுதி-6)

ரஹ்மான் இசையமைக்கும் விதம், மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இரவு நேரத்தில்தான் அதிகமான பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு இரவில் இசையமைக்கும்போது தனி உலகத்தில் இருப்பது போலவே நினைத்துக் கொள்வார். முதலில் இசைக் கலைஞர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டனர். நைட் டூட்டி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தவர்களும் உண்டு. ஆனால், ரஹ்மான் கொடுக்கும் சம்பளம், கேசட்டில் முதன்முதலாக இசைக் கலைஞர்களின் பெயரை ‘புல்லாங்குழல் இசை நவீன், டிரம்ஸ் சிவமணி, கீபோர்டு வாசித்தவர் ஜோஷ்வா ஸ்ரீதர், ஹாரிஸ் ஜெயராஜ், பிரவீன் மணி’ என்று பெயர்களைப் பிரபலப்படுத்திய பின், இந்த அதிருப்திகள் காணாமல் போயின. அவ்வளவு ஏன்? கோரஸ் பாடியவர்களுக்குக்கூட பெயர்களைப் போட்டவர் அவர்தான். பாடல் சிடியில் ‘பேக்கிங் வாக்கல்ஸ்' என்று அவர்கள் அனைவரின் பெயரும் இடம் பெற்றிருக்கும். அவரைப் பார்த்துதான் மற்ற இசையமைப்பாளர்களும் அவ்வாறு பெயர்களைக் குறிப்பிட ஆரம்பித்தனர்.

எந்த ஒலிப்பதிவு ஸ்டூடியோவில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது? எந்த ஸ்டூடியோவில் மிக்ஸ் செய்யப்பட்டது என்பது முதற்கொண்டு கேசட்டைப் பார்க்கும் ரசிகர்கள் அறிந்து கொள்ளுமளவுக்கு வெளிப்படையாக இருந்தார் ரஹ்மான். இப்படி கேசட்டைப் பார்த்தவர்கள், படித்தவர்கள் பின்னால் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும்கூட மாறியுள்ளார்கள். அப்படியான ஒரு இசையமைப்பாளர் சி.சத்யா. ‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலைப் பொழுது’ என இசையமைக்க ஆரம்பித்து இன்று முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர். அவர் ரஹ்மான் பற்றிய தனது அனுபவங்களைக் கூறினார்.

“அவருடைய பாடல்களின் ஒலிப்பதிவின் தரம் பார்த்து வியந்துள்ளேன். முதன்முதலாக அவர் இசையை ‘புது வெள்ளை மழை இங்கே பொழிகிறது’ என்ற பாடலை ஒரு திரையரங்கின் இடைவேளையில் கேட்டேன். அசந்து போனேன். தமிழ்ப் பாடலா, இத்தகைய தரத்துடன் ஒலிப்பது என்று? அப்போது தெரியாது அதை இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்று. தெரிந்தபின் அவர் இசையமைத்த படங்களின் பாடல் கேசட்டுகளை தவிர்க்காமல் வாங்கிக் கேட்பேன். மெட்டு எவ்வாறு அமைய வேண்டும், பின்னணி இசை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இளையராஜா சாரைப் பின்பற்றுகிறேன் என்றால், பாடலின் நவீனத்துவம், ஒலிப்பதிவு தரம், பாடகர்களைப் பயன்படுத்தும்விதம் ஆகியவற்றில் ரஹ்மான் சாரை பின்பற்றுகிறேன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ரசிகர்கள் பாராட்டியபோது இவர்கள் இருவரையும் நினைத்துக்கொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் நான் இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, இசைத்தகடை வெளியிட்டது மறக்க முடியாதது. எனது இசையைப் பாராட்டி ‘இசையில் நிறைய கடுமையான உழைப்பு தெரிகிறது. சத்யா கண்டிப்பாக ப்ராமிஸிங் மியூசிக் டைரக்டர்’ என்றார். அவர் அப்படி வெளிப்படையாகப் பாராட்டிய நிமிடத்தை இன்றுவரை மறக்க இயலவில்லை. நன்றி ரஹ்மான் சார்!” என்று நெகிழ்வாகச் சொல்கிறார் சி.சத்யா.

இப்படி அவருக்கு அடுத்த தலைமுறையாக வந்த இசையமைப்பாளர்களுக்கு என்றும் ஊக்கச்சக்தியாக விளங்கியுள்ளார் ரஹ்மான். யுவன்சங்கர்ராஜா, அனிருத் ஆகிய இளம் இசையமைப்பாளர்களின் இசையைக் கேட்டு பாராட்டியதோடு மட்டுமில்லாமல் அவர்களை தங்கள் இசையில் பாடவும் வைத்துள்ளார்.

ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் தொடர்ந்து புல்லாங்குழல் வாசித்து வருபவர் நவீன்குமார். ‘டூயட்’ படத்தில் ‘அஞ்சலி அஞ்சலி’ என்ற பாட்டுக்கு இவர் வாசித்த புல்லாங்குழல் இசை மிகவும் பிரபலம். ‘ரங்கீலா’ படத்திலும் ‘தன்கா’ பாட்டுக்கு நடுவே ஒரு இனிய புல்லாங்குழலிசையை மீட்டியிருப்பார். “ரஹ்மான் அவர்கள்தான் இசைக்கலைஞர்களின் பெயரை கேசட்டில் போட ஆரம்பித்தார். அதன்பிறகு என் பெயரைப் பார்த்த மும்பை இசையமைப்பாளர்கள் என்னை வாசிக்கக் கூப்பிட ஆரம்பித்தார்கள். இப்போது பெரும்பாலும் மும்பை இசைக்கூடங்களில்தான் வாசித்து வருகிறேன். எனது இந்த வளர்ச்சிக்கு ரஹ்மான் முக்கிய காரணம்” என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

ரஹ்மானிடம் வேலை பார்த்த பெரும்பாலான இசைக்கலைஞர்கள் பின்னால் உலகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர்களாக மாறினார்கள். அவரிடம் கீபோர்டு புரோகிராமராக இருந்தவர்கள் இசையமைப்பாளர்களாக மாறினார்கள். ஜோஷ்வா ஸ்ரீதர், ஹாரிஸ் ஜெயராஜ், பிரவீன் மணி, தாஜ்நூர், அம்ரேஷ் என்று பெரிய பட்டியலே உண்டு. ராம்கோபால் வர்மாவின் ‘சத்யா’, ‘கம்பெனி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தீப் சௌதாவும் ஆரம்பக் காலத்தில் ரஹ்மானிடம் பணியாற்றியவர்தான். ரஹ்மானின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் இந்தியில் இவரைப் பயன்படுத்துவது வழக்கம். இவரது பின்னணி இசையின் பாணி ரஹ்மான் இசையை ஒத்திருக்கும். இதன் காரணமாக இவரை இயக்குநர்கள் தேடி வந்தாலும், இந்தியில் சில தனித்துவமான பாடல்களைக் கொடுத்தவர் சந்தீப் சௌதா.

பொதுவாக, ரஹ்மானிடம் அனுபவம் பெற்றவர்கள் யாருமே சோடை போனதில்லை. இப்போது இந்தியில் இசையமைத்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் அனைவரும் ரஹ்மானின் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். இந்தி இசையில் புதுவித இசையை கொண்டுவந்த ட்ரெண்ட் செட்டராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள். ‘ரங்கீலா’ மூலம் உள்ளே நுழைந்த ரஹ்மான், ‘தில் சே’, ‘தால்’, ‘லகான்’ என தொடர் வெற்றியடைந்த பாடல்களால் வட இந்திய இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்திருந்தார். அவருடைய பெயர் திரையில் வரும்போது வட இந்தியாவில் கை தட்டுவார்கள் என்பார்கள். அதை நேரில் பார்க்கும் அனுபவமும் வாய்த்தது.

மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பியது உங்களுக்கு நினைவிருக்கும். அப்படம் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் ஷாத் அலியால் ‘சாத்தியா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ‘என்றென்றும் புன்னகை’ என்று வரும் பாடல் இந்தியில் ‘ஹம்தம் தம்’ என்று ஆரம்பிக்கும். அந்தக் காட்சியில் இருந்துதான் எழுத்து போட ஆரம்பிப்பார்கள். நான் இப்படம் ரிலீசான சமயம் புனேயில் இருந்தேன். அங்கு ‘சிட்டி பரேட்’ என்ற மல்டி காம்ப்ளக்ஸ் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தாக போட்டு கதை மணிரத்னம் என வரும்போதும் கைதட்டல் கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வரும்போது இளம்பெண்களே விசிலடிக்க ஆரம்பிக்க, திரையரங்கில் கைதட்டல் ஆரம்பித்து அடங்க சில நிமிடங்கள் ஆனது. மணிரத்னமும், ரஹ்மானும் இந்திய திரைப்பட ரசிகர்களிடையில் வாங்கியுள்ள நன்மதிப்புக்கு இந்த கைத்தட்டல்களே சாட்சி!

(இசை இன்னும் வரும்)

- விஜய் மகேந்திரன்

ஏ.ஆர்.ரஹ்மான் - பகுதி 1

ஏ.ஆர்.ரஹ்மான் - பகுதி 2

ஏ.ஆர்.ரஹ்மான் - பகுதி 3

ஏ.ஆர்.ரஹ்மான் - பகுதி 4

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016