மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 அக் 2016

சிறப்புக் கட்டுரை: ஜியோ இலவசம் நீட்டிக்கப்படுமா?

சிறப்புக் கட்டுரை: ஜியோ இலவசம் நீட்டிக்கப்படுமா?

ஜியோ சேவையை, கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அறிமுகம் செய்துவைத்தார் முகேஷ் அம்பானி. பின்னர், விநாயகர் சதுர்த்தி முதல் அதாவது, செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்களை அருகில் உள்ள ரிலையன்ஸ் கடைகளிலும், இதர மொபைல் போன்கள் விற்பனை மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக அறிமுகச் சலுகையாக வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரை அனைத்து சேவையும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிமுக விழாவில் இதுகுறித்துப் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வாய்ஸ் கால், 4ஜி இன்டர்நெட் என அனைத்து சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, தொலைதொடர்பு நிறுவனங்கள் ’ட்ராய்’ ஆணையத்திடம் புகார் அளித்தன. அந்தப் புகாரில், "இந்திய டெலிகாம் துறையின் சட்டதிட்டங்களின்படி எந்த ஒரு நிறுவனமும் அறிமுகச் சலுகையாக இலவசத் திட்டங்களை 90 நாட்களுக்கு அதிகமாக அளிக்கக்கூடாது” என்று குற்றஞ்சாட்டின.

இதையடுத்து ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு ட்ராய் அனுப்பிய கடிதத்தில், "திருத்தப்பட்ட ஜியோ இலவச சேவையையடுத்து ஜியோவின் அனைத்து இலவச சேவைகளும் வரும் டிசம்பர் 3ஆம் தேதியுடன் (90 நாட்களுக்குள்) நிறைவுபெறவுள்ளது. இதனால் ஜியோவின் இலவச சேவை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது" என்று தெரிவித்தது.

இதையடுத்து, ஜியோ அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "ஜியோவின் திருத்தப்பட்ட இலவச சேவை திட்டத்துக்கு ட்ராய் ஒப்புதல் வழங்கியதையடுத்து வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை ஜியோவின் வெல்கம் ஆஃபர் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். தற்போது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அனைத்து சேவையும் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தது. திருத்தப்பட்ட இந்தத் திட்டத்தை ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தது. இதனால் ஜியோவின் முடிவு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு போதிய இணைப்புகள் வழங்க மறுப்பதாக ஜியோ பலமுறை ட்ராய் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. தொலைதொடர்பு விதிகளின்படி, ஒரு நெட்வொர்க்கின் 1,000 அழைப்புகளில் ஐந்து அழைப்புகள் வரை மட்டுமே கோளாறு ஏற்பட்டு துண்டிக்கப்படுவது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தங்கள் நெட்வொர்க்கின் 100 அழைப்புகளில் 96 அழைப்புகள் துண்டிக்கப்படுவதாக ஜியோ புகாரளித்தது. இந்தப் புகாரை மறுத்த பிற தொலைதொடர்பு நிறுவனங்கள், ஜியோ தனது சேவையில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ட்ராய் ஆணையத்திடம் புகாரளித்தன.

இந்தப் புகார்களை விசாரித்த ட்ராய் ஆணையம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஜியோவுக்கு போதியளவிலான இன்டெர் கனெக்‌ஷன் இணைப்புகள் வழங்காத வட்டங்களில் தலா ரூ.50 கோடி அபராதம் விதிக்கலாம் என்றும், 21 தொலைதொடர்பு வட்டங்களில் சேவை அளிக்கும் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களும், 19 தொலைதொடர்பு வட்டங்களில் சேவையளிக்கும் ஐடியா நிறுவனத்துக்கும் தலா ஒரு தொலைதொடர்பு வட்டத்துக்கு ரூ.50 கோடி என மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்கலாம் என்று தொலைதொடர்புத் துறையிடம் ட்ராய் ஆணையம் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முடிவுகளையடுத்து ஜியோவுக்கு சாதகமாகவும், எதிராகவும் இரண்டு முடிவுகளை ட்ராய் எடுத்துள்ளது என்பது நமக்குத் தெரியவந்துள்ளது. ஜியோவின் புகாரை ட்ராய் ஏற்றதால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவுக்கு போதியளவிலான இணைப்புகள் வழங்காதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ட்ராயின் இந்த முடிவால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரிகிறது. இதற்கு முக்கியக் காரணம், தனது இலவச சேவையை மேலும் நீட்டிக்க ஜியோ முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, ஜியோவின் இலவச சேவையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நிறுவனங்களுக்கு ஜியோ தனது இலவச சேவையை நீட்டிக்கும் முடிவை எடுத்தால் அதிகளவில் இழப்புகளையும் பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும்.

சென்ற வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவுக்கு போதியளவிலான இணைப்புகளை வழங்காததால் வாடிக்கையாளர்கள் ஜியோவின் சேவையை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்தப் போக்கு மேலும் நீடித்தால் ஜியோவின் இலவச சேவையை அடுத்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்படலாம் என்று அறிவித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இந்த அறிவிப்பால் ஜியோவின் இலவசம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுகுறித்து, பல்வேறு ஆய்வாளர்கள் தங்களது கருத்துகளைக் கூறியுள்ளனர். ஜியோ தனது இலவச சேவையை மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்குமா என்பது குறித்து பிரபல நிதி நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் குழுமத்தின் ஆய்வாளர்கள் கூறுகையில், "ஜியோ அறிமுக விழாவில் பேசிய முகேஷ் அம்பானி, ”தாங்கள் குறைந்த காலகட்டத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கவர இலக்குவைத்துள்ளோம்” என்றார். எனவே, இந்த இலக்கை அடைவதற்காக ஜியோ தனது இலவச சேவையை அடுத்தாண்டின் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கலாம்" என்று தெரிவித்தது.

அதேபோல, பிரபல ஆய்வு நிறுவனமான ’சிட்டி ரிசர்ச்’ நிறுவனத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவுக்கு போதியளவிலான இணைப்புகளை வழங்காமல் இருந்தால் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இலவச சேவையை நீட்டிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை வழங்குவதில் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் அறிவித்துள்ளது. அவர்களின் இந்த அறிவிப்பு ஜியோவின் சேவையை நீட்டிக்கும் ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுஷ்மான் தாகூர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "போதிய இணைப்புகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் எங்களது சேவையை முழுமையாகப் பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் முன்னதாக வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. இதனால் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு எங்களது சேவை முழுமையாகச் சென்றடையும்வரை அவர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது முறையாகாது" என்றார்.

ஜியோவின் இலவச சேவையின் காலக்கெடு குறைவாக உள்ளது என்ற கவலையோடு இருந்த ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸின் இந்த அறிவிப்புகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதிலிருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோவின் இலவச சேவை வழங்கப்படும் என்ற செய்தி புத்துணர்ச்சி அளிக்கும் ஒன்றாகும். இணைப்புகளில் உள்ள கோளாறுகளை நீக்கி மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசத்தை நீடித்து வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை ஜியோ வழங்கினால் குறைந்த காலகட்டத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கைப்பற்றும் இலக்கை ஜியோ எளிதில் அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 25 அக் 2016