பொதுவாக தமிழக அரசோ, சென்னை மாநகராட்சியோ சுகாதார விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு சினிமா நடிகர்களையே சார்ந்திருப்பது இதுவரையிலான வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்பதை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் தூதுவர்களாக சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளையே பயன்படுத்தியிருப்பதுதான் கவனிக்கதக்கதாக இருக்கிறது.
தமிழக உள்ளாட்சித் துறையும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளை சுகாதாரத் தூதுவர்களாக நியமித்து சுகாதாரப் பிரச்சாரத்தில் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.
சென்னையில் மழைக்காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்கவும், மாநகர வீதிகளில் குப்பைகள் தேங்காமல் தடுக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் மாநகராட்சியின் பணிகளில் ஒன்றாக…. ‘என் வீதி என்ன உன் கழிப்பறையா?’, ‘குப்பை’ தொட்டிக்கழகு, கொசுக்களை நசுக்குவோம் போன்ற வாசகங்களுடன் ஆட்டோ மற்றும் டிஜிட்டல் பிரசாரத்தைத் துவக்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி.
’என் வீதி என்ன உன் கழிப்பறையா?’ என்ற வாசகம் பொதுமக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.சினிமா நட்சத்திரங்களை விட இந்த மாணவ நட்சத்திரங்களின் பேச்சும் அணுகுமுறையும் சென்னை மக்களிடையே எதிர்பார்த்ததை விட அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், இந்த சுகாதார தூதுவர்களை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களை சுகாதார தூதர்களாக நியமித்து அவர்கள் தங்களது பள்ளிகளின் அருகாமையில் உள்ள வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் சென்னை மாநகராட்சி கமிஷனர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். விரைவில் அமைச்சர் துவக்கி வைக்க இருக்கிறார் என்கிறார்கள் மாநகராட்சி வட்டாரத்தில்.
சுகாதார தூதுவர்கள் என்ற பெயரில் நடிகர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பொருட்செலவில் விளம்பரங்கள் செய்வதைவிட மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவிகளை பயன்படுத்தியே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது சென்னை மாநகராட்சி.பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தப்படுவதால் அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த செய்தி போய்ச் சேருகிறது பொது மக்களுக்கும் போய்ச் சேருகிறது.
�,”