20 சதவிகிதம் கொடுத்தால் ஒப்பந்தம்: அமைச்சர் பேட்டி!

Published On:

| By Balaji

அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டும் பணிக்குத் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் லஞ்சம் கேட்டதால் நீதிமன்றம் சென்றுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்ட ஒப்பந்ததாரர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது கடந்த 2011-2016ஆம் ஆண்டு அமைச்சரவையில் தமிழகம் முழுவதும் புதிய எட்டு பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டுக் கடந்த ஒரு வருடமாக வேலையும் நடைபெற்று வருகிறது. மீதியுள்ள வேலையில் டெண்டர் எடுக்கப் போகும்போதுதான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியில் உள்ள பாலிடெக்னிக் ஒப்பந்தக்காரர் வி.ஆர்.வேங்கன், அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.12 கோடி லஞ்சம் கேட்கிறார் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஒரு பாலிடெக்னிக் முழுமையாகக் கட்டுவதற்கு மொத்தம் 32 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு, அதில் ரூ.24 கோடி வழங்கப்பட்டு விட்டது. மீதி உள்ள 8 கோடி ரூபாயை வி.ஆர்.வேங்கன் கேட்டபோது, அதற்கு அமைச்சர் மறுத்துள்ளார். ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் கணவர் நாகராஜுக்கு நெருக்கமான நண்பர்தான் வி.ஆர்.வேங்கன். அவருக்காக அமைச்சரைச் சந்தித்து வேங்கனுக்குச் சிபாரிசு செய்துள்ளார் எம்.எல்.ஏ. கணவர்.

“அதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், நாமக்கல்காரன் 16 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொல்கிறார். உங்களுக்கு வேண்டும் என்றால் 20 சதவிகிதம் கமிஷன் கொடுத்து, எட்டு பாலிடெக்னிக் வேலையும் நீங்களே செய்யுங்கள் என்று ஒப்பந்தகாரர் வேங்கன் பேசும்போது கமிஷன் கேட்டுள்ளார் அமைச்சர். அப்போது, அமைச்சரின் பேச்சுவார்த்தையை ரகசியமாக டேப் செய்து டெண்டரைக் குறைந்த தொகைக்குப் போட்டுள்ளார் வேங்கன். அதைத் தொடர்ந்து, டெண்டரை குறைந்த தொகைக்குப் போட்டாலும் வேலைக் கொடுக்க முடியாது என்று அமைச்சர் பிடிவாதம் செய்த பிறகுதான், அமைச்சர் லஞ்சம் கேட்கிறார்” என்று நீதிமன்றம் சென்றுள்ளதாக சொல்கிறார்கள், மனோரஞ்சிதம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்.

இந்நிலையில், மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு, ஒப்பந்தகாரர் வி.ஆர்.வேங்கனைத் தொடர்பு கொண்டபோது தான் பிசியாக இருப்பதாகவும், அதன்பிறகு பேசுவதாக கூறியவர், நேற்று ஜூலை 29ஆம் தேதி தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அதனால், அதற்கடுத்து, அமைச்சர் கே.பி.அன்பழகனை தொடர்புகொண்டு, மின்னம்பலம்.காம் நிருபர் என அறிமுகம் செய்துகொண்டு, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம். அப்போது, அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் கூறுகையில், “கடந்த ஒரு வருடமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. அப்போதில்லாத பிரச்னை இப்போது ஏன் வருகிறது? நான் லஞ்சம் கேட்பேனா? எனக்கு எதிராக யாரோ செயல்படுகிறார்கள். அவர்கள் யார் என்று ஒரு வாரத்தில் கண்டுபிடித்து விடுவேன்.

லஞ்சம் கேட்டதாக நீதிமன்றத்தில் என் பெயரை சேர்த்தது தவறு. இதை, நான் சட்டரீதியாகச் சந்திப்பேன். என் பெயரை களங்கப்படுத்தும் வகையில், அரசியல் எதிரிகள் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். தற்போது நான் திருவண்ணாமலையில் முதல்வர் கலந்துகொள்ளும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வந்துள்ளேன். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து மீண்டும் மின்னம்பலத்தை தொடர்பு கொள்கிறேன்” என்றார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel