சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ஆணையர்!

Published On:

| By Balaji

சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி இன்று(ஆகஸ்ட் 19) சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜீவ்காந்தி சாலை கூவம் ஆற்றின் கரையோரத்தை பசுமையாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து புகைப்படக் கலைஞர்கள் மரக்கன்றுகளை நட்டனர். அவர்கள் மரக்கன்றுகளை நடுவதை ஆணையர் கேமராவில் படமெடுத்து கவுரவப்படுத்தினார்.

இதில் பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி,” சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு இரண்டு லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பசுமையும்,சுத்தமான காற்றும் குளிர்ச்சியும் கிடைக்கும். கேரளா திருவனந்தபுரம், பெங்களூருவில் அதிகளவு மரங்கள் இருப்பதைப் போன்று சென்னையிலும் அதிக மரங்களை வளர்க்கும் வகையில் காலியாக உள்ள இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் மரங்கள் வளர்க்கப்படும்” என்று கூறினார்.

சென்னை மாநகராட்சியை தூய்மையாகவும், அழகாகவும் மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment