2 பக்கெட் தண்ணீர்தான் பயன்படுத்துகிறேன்: முதல்வர்

public

குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “ஒரு நாளைக்கு இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே உபயோகிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் சில வாரங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 21) தண்ணீர் பிரச்சினையை சமாளிப்பது தொடர்பாகவும், சீராக குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “மழை பொழிவு குறைவானதன் காரணமாக ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்ட நிலையில் உள்ளன. ஆனாலும் கூட பல வழிகளை கையாண்டு மக்களுக்கு குடிநீர் வழங்கிவருகிறோம். குவாரிகளிலுள்ள தண்ணீரை பெற்றும் வழங்கிவருகிறோம். ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு தினந்தோறும் 10 எம்.எல்.டி தண்ணீர் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு, அதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் தினமும் 9,800 லாரிகள் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றன. வருடம்தோறும் ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு 12 டி.எம்.சி தண்ணீர் வரும். ஆனால், இந்த வருடம் 2 டி.எம்.சி மட்டுமே வந்துள்ளது. அவர்களிடமும் போதுமான தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் முதல்வர் பட்டியலிட்டார்.

“தமிழகத்திற்கு ஒருமுறை மட்டும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாகக் கூறிய கேரள முதல்வருக்கு நன்றி. தினந்தோறும் தர முடியுமா எனக் கேட்டு அவருக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்ட முதல்வர், குடிமராமத்து பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

உங்களுடைய இல்லத்திற்கு 2 லாரி தண்ணீர் செல்கிறது என்று செய்தி வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு, “அது தவறான தகவல். யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. என்னுடைய வீட்டில் கடந்த இரு மாதங்களாக நான் மட்டுமே இருக்கிறேன். அப்படியென்றால் இரு லாரி தண்ணீரையும் நான் மட்டுமே செலவழிக்கிறேனா? நான் ஒருநாளைக்கு இரண்டு பக்கெட் தண்ணீர்தான் உபயோகிப்பேன். நான்கு லிட்டர் தண்ணீர்தான் குடிப்பேன். முதல்வர், அமைச்சர்களின் வீடுகளில் அதிகாரிகள் மற்றும் பல ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பலரும் வந்து தங்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் உணவு தயார் செய்யப்படுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் வந்து சந்திக்கிறார்கள். நீங்கள் என் வீட்டுக்கு வந்து நான் தண்ணீரோ அல்லது டீயோ தரவில்லை என்று வெளியில் சொல்லிவிடக் கூடாது அல்லவா? அதனால்தான் சற்று கூடுதலாக தண்ணீர் வருகிறது” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, மெட்ரோ குடிநீரை ஆன்லைனில் புக் செய்தால் வருவதற்கு 25 நாட்கள் ஆகிறது என்ற குற்றம்சாட்டுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “ஆன்லைனில் புக் செய்பவர்கள் ஒரே அடுக்குமாடி குடியிருப்புக்கு 10 லாரிகளை புக் செய்கிறார்கள். அவர்களுக்கு எப்படி கொடுக்க முடியும். பொதுமக்கள் அன்றாடம் தண்ணீருக்காக அல்லல்படும் நிலையில், அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆன்லைனில் புக் செய்பவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தண்ணீர் கிடைத்துவிடுகிறது. ஏழை மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டியதுதான் முதல் பிரச்சினை. அதற்காகத்தான் அரசு செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/06/20/76)**

**[ஏலத்திற்கு வந்த விஜயகாந்தின் சொத்துக்கள்!](https://minnambalam.com/k/2019/06/21/48)**

**[பிரசாந்த் கிஷோர் பட்ஜெட்: கமலுக்குக் கட்டுப்படி ஆகுமா?](https://minnambalam.com/k/2019/06/21/28)**

**[போயஸ் கார்டன்: சசிகலாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்!](https://minnambalam.com/k/2019/06/20/18)**

**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0