^2 குழந்தைகள் கொலை: தாய் வாக்குமூலம்!

Published On:

| By Balaji

இரண்டு குழந்தைகளை விஷம் வைத்துக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட அபிராமி, தனது செயலுக்குக் கள்ளக்காதல் காரணம் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி பெயர் அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள்.

இந்த நிலையில், நேற்றிரவு (செப்டம்பர் 01) நாகர்கோவிலில் அபிராமி கைதானார். உடனடியாக, அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல விவரங்கள் தெரிய வந்துள்ளன.

**கணவர் சந்தேகம்**

அந்தப் பகுதியில் உள்ள அனைவருடனும் அபிராமி சிரித்துப் பழகியது விஜய்க்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் பெரியபனிச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவார் அபிராமி.

சில மாதங்களுக்கு முன்பு விஜய், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டார். அப்போது, அந்த கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், அது கள்ளக்காதலாக மாறியது.

**புதிய வாழ்க்கை**

சில வாரங்களுக்கு முன்னர், தனது குழந்தைகளை விட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் அபிராமி. பின்னர், அவரது பெற்றோர் அபிராமிக்கு அறிவுரைகள் கூறினர். மீண்டும் கணவர், குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தினர். இதனை அவர் ஏற்கவில்லை. இதன்பிறகே, இரண்டு குழந்தைகளும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

**அபிராமி வாக்குமூலம்**

நாகர்கோவிலில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அபிராமி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சென்னைக்கு இன்று காலை அழைத்துவரப்பட்டார். குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடி புகுந்த பின்னர், அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்குக் குடும்பத்தோடு சென்று வந்தோம். அப்போது தான், அங்கு பில் போடும் பணியிலிருந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர், அடிக்கடி பிரியாணி வாங்கச் சென்றேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. இதனால், குடும்பத்தை விட்டு விலகி விட நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார்.

10 நாட்களுக்கு முன்னர் கணவருடன் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினேன். சுந்தரத்தின் வீட்டில் சென்று தங்கினேன். இதனால், எனக்கும் விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஜய்யோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும், சுந்தரத்துடனான 2 மாதப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை. அப்போது தான் கணவர், குழந்தைகளைக் கொன்றுவிட்டு, நாம் எந்தப் பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார் சுந்தரம். நானும் அதற்கு ஒத்துக்கொண்டேன்.

ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்தே, கணவர் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ய திட்டமிட்டேன். அன்றிரவு 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகள் கலந்த பாலைக் கொடுத்தேன்.

ஆனால், மறுநாள் (ஆகஸ்ட் 31) காலையில் கணவர் விஜய்யும், மகன் அஜய்யும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் இரண்டு பேரும் பிழைத்துக் கொண்டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என நினைக்கிறேன். நேற்று முன்தினம் காலையில், வேலைக்குச் செல்வதற்கு முன்னதாக கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்கச் சென்றார் விஜய். அதற்கு நான் அனுமதிக்கவில்லை. அவள் அசந்து தூங்குவதாகச் சொன்னேன். அவள் விழித்துக்கொள்வாள் என்று நான் சொன்னதை நம்பி, வேலைக்கு சென்ற விஜய் அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை.

மறுநாள், மீண்டும் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலைக் கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர், கழுத்தை நெரித்துக் கொன்றேன். வெளியூருக்குத் தப்பிச் செல்ல, என்னிடம் பணம் இல்லை. இதனால் தாலி செயினை அடகு வைத்து பணத்தைத் தயார் செய்தேன்; நாகர்கோவில் சென்றேன்’’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், சுந்தரம் 2ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. அவருக்குக் குழந்தைகள் இல்லை.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share