2நானா இடத்தில் ராணா

Published On:

| By Balaji

நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் அவர் நடிக்கவிருந்த திரைப்படத்திலிருந்து விலகினார். தற்போது அவருக்கு பதில் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்கவிருக்கிறார்.

தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவர் நானா படேகர். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்தன. இந்த புகாரை அடுத்து பாலிவுட்டில் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை மீ டூ ஹேஷ் டேக் மூலம் வெளிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக அது தமிழ் திரையுலகிலும் பிரதிபலித்தது.

மேலும் இந்தப் பாலியல் புகாரை மறுத்த நானா படேகர் தனுஸ்ரீ தத்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவும் நானா படேகர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குநர் சஜித்கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குநர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட அக்‌ஷய் குமார், அந்த படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்தார்.

இதுபற்றி அக்‌ஷய் குமார் கூறும்போது, “ஊடகத்தில் வந்துள்ள பாலியல் செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் தயாரிப்பாளர்களிடம், படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்துவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து “என் மீது கூறப்பட்டுள்ள புகார் காரணமாக என் குடும்பத்தினர், என் தயாரிப்பாளர், நான் இயக்கும் ஹவுஸ்புல் 4 படக்குழுவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திலிருந்து விலகி கொள்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தையும் மறுக்கிறேன்” என்று இயக்குநர் சஜித் கான் தெரிவித்திருந்தார். இவரைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர் நானா படேகரும் படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் நானா படேகர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காமெடி படமான இதில் அவர், கஜல் பாடகராக நடிக்கிறார். ரித்தேஷ் தேஷ்முக், பாபி தியோல், கிரித்தி சனான், பூனா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் மும்பையில் துவங்குகிறது.

இது குறித்து அகதமாத் மிரருக்கு ராணா அளித்துள்ள பேட்டியில், “தெலுங்கு தவிர மற்ற மொழியில் நடிப்பது பெரிய அனுபவம். அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த படத்தில் நடிப்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அக்‌ஷய் குமாருடன் ஏற்கனவே பேபி என்ற இந்தி படத்தில் நடித்திருந்தேன். இப்போது அவருடன் மீண்டும் நடிக்கிறேன்” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share