2தலைவர்கள் கண்டனம்!

Published On:

| By Balaji

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு நிரந்தரச் சட்டம் அமைக்க வேண்டுமெனக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மட்டுமன்றி பெண்கள், சமுக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு போராட்டம் வலுவாக நடைபெற்றுவந்த நிலையில், அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. ஆனால் களத்திலிருந்த போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை போராட்டக்களத்தை விட்டு நகர மாட்டோமென உறுதியாக இருந்தனர். இந்நிலையில், இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில், போராட்டக்காரர்கள்மீது தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இதைக் கண்டித்து, அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுத்துள்ள கண்டனத்தில் கூறியிருப்பதாவது:

நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட்)

சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் தலைமையில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினர். அதன் பிறகு இப்போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் தான் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது. அதனை நிரந்தரமாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று சென்னையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்)

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்களை வன்முறை மூலம் அப்புறப்படுத்துவதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மக்கள் ஒரே இடத்தில் திரள திட்டமிட்டு உள்நோக்கத்துக்காக அனுமதித்ததே அரசுதான். அவ்வாறு அனுமதித்துவிட்டு அவர்களை தற்போது கலைந்து செல்லும்படி அச்சுறுத்துவது எந்த விதத்தில் நியாயம். அவசரச் சட்டத்தை சட்டமாக்குவது மட்டும் அல்லாமல் அந்தச் சட்டத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தால் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று கோரிதான் இந்தப் போராட்டம் நடந்தது.

மத்திய, மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து சதி செய்து, அவசரச் சட்டம் என்ற நாடகத்தின்மூலம் இந்தக் கூட்டத்தை கலைத்துவிட்டு பின்னர், தங்களது விருப்பம்போல் முடிவு செய்யலாம் என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. ஏனென்றால், உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. அவசரச் சட்டத்தை மாநில அரசே கொண்டு வரலாம் என்று ஒப்புதல் அளித்தாலும், உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்திலும் இந்த அவசரச் சட்டத்தை செல்லாததாக ஆக்க முடியும் என்ற நிலை உள்ளது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் இந்த அவசரச் சட்டத்தின் மூலம் போராட்டக்களத்தில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குற்றச்சாட்டு.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலும் ஒரு நாள் பொறுத்திருந்து சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்திருக்கலாம். வன்முறை, கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு, தடியடி போன்றவற்றால் அப்புறப்படுத்துவது மிகவும் வேதனையைத் தருகிறது. இதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அவர் கூறினார்.

கி. வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)

‘ஏறு தழுவுதல்’ என்ற நமது திராவிடர் தமிழர் – பண்பாட்டுத் திருவிழாவின் ஒரு பகுதியை – திட்டமிட்டே நமது பண்பாட்டு அடையாளச் சின்னங்களை அழித்தொழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இதை (ஜல்லிக்கட்டு) தடைசெய்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மாற்றிட – மறுபார்வை சீராய்வு மனு செய்தல் அவசியம் – தேவை.

இது மிருகவதை அல்ல. மாறாக, அவற்றைப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்யும் ஒரு கோலாகல கொண்டாட்டம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியப்படுத்தும்வகையில் போதிய முயற்சிகளை மத்திய – மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை. இந்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள், கட்சி, அரசியல் சாராதவர் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டுள்ளனர். தடையை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர தேவையற்ற தடியடி நடத்துவது சரியான அணுகுமுறையல்ல.

‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்ற வள்ளுவர் குறளின் அணுகுமுறையை பற்பல தருணங்களில் காவல்துறையினர் பின்பற்றாததினால்தான் இத்தகைய விரும்பத்தகாத மக்கள் விரோத நடவடிக்கைகளை நமது காவல்துறையினர் செய்கின்றனர். ஆட்சியாளர் இதை ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச்னையாகக் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகாது. எனவே, தடியடி போன்றவற்றை உடனடியாக நிறுத்தி, மக்களின் உணர்வுகளுக்கும் தலை வணங்க வேண்டும். அதைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கையில் வெற்றியடைய முயற்சிப்பதுதான் தமிழக அரசுக்கு புத்திசாலித்தனமானதே தவிர, இதன் பின்னால் உள்ள பண்பாட்டுப் பாதுகாப்பு உணர்வின் அடி நீரோட்ட வலிமையைப் புரிந்துகொள்ள வேண்டாமா? என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

விஜயகாந்த் (தேமுதிக)

சென்னை மாநகரம் முழுவதும் கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, போலீசார் தடியடி போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை என்பதையே நிருபிக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக, மாணவர்களும் இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் அறவழியில் போராடியதன் விளைவாக மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இவர்கள் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் தாங்களாகவே மனம் உவந்து ‌போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வலு‌க்கட்டாயமாக யாரையும் அப்புறப்படுத்து‌ம் செயலை அரசு உடனடியாக நிறு‌த்த வேண்டும். இதை முன்கூட்டியே செய்திருந்தால் அவர்கள் கடலு‌க்குள் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது‌. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்த ‌இந்தப் போராட்டம் வெற்றிப் போராட்டமாக நடத்திய மனநிறைவு ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.

ராமதாஸ் (பாமக)

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காகவும், தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு எதிரான தாக்குதலை முறியடிப்பதற்காகவும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு, வரலாற்றில் பதிவான அறவழிப் போராட்டம் வலிகளுடன் முடித்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரி, கடந்த 16ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரிலும் அதைத் தொடர்ந்து மெரினாவிலும் தொடங்கிய அறவழிப் போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றன. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் ஒரேநாளில் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை நடுங்கவைத்ததன் பயனாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைகூடாத அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப் போராட்டம் புதிய வரலாறு படைத்தது. எந்த ஒரு போராட்டமும் வெற்றியுடன் நிறைவடைவதுதான் மகிழ்ச்சியானதாகவும் சிறப்பானதாகவும் அமையும். தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தின் செல்லும்தன்மை குறித்த ஐயம் காரணமாக மாணவர்களும் மக்களும் போராட்டத்தைக் கைவிட மறுத்து தொடர்ந்தனர். மற்றொருபுறம், ஜல்லிக்கட்டு போராட்டத்தை தங்களின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த கும்பல்கள், மாணவர்களின் போராட்டத்தை தங்களுக்கானதாக மாற்ற நினைத்து, அவமானப்பட்டவர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாமல் அதை சீரழிக்க நினைத்தவர்கள் எனப் பலரும் உள்நுழைந்து போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில், மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை மிகவும் பக்குவமாக கையாண்டிருக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனும், போராட்டக் குழுவினருடனும் காவல்துறையினர் பேச்சு நடத்தி, உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துக்கூறி கலைந்து செல்ல வைத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய காவல்துறை தவறிவிட்டது. சென்னை மெரினாவிலிருந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டபோது, 2 மணி நேரம் அவகாசம் தாருங்கள்… அதற்குள் கலைந்து செல்கிறோம் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த 6 நாட்களாக அமைதி காத்த காவல்துறையினர் அடுத்த இரண்டு மணி நேரம் பொறுமையை கடைப்பிடித்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும்.

ஆனால் காவல்துறையினர், தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டனர். மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் போராட்டத்தில் ஊடுருவிய வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். காவல் நிலையத்துக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பிவிட்ட நிலையில் அப்பாவி மாணவர்கள்தான் காவல்துறை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி, மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

சென்னை மெரினா கடற்கரை போன்று, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அலங்காநல்லூரில் காவல்துறை தடியடியில் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறை ஒடுக்குமுறை கடும் கண்டனத்துக்குரியது. காவல்துறை தாக்குதலை கண்டிக்கும்வகையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போதைய சூழலில் கடலில் போராட்டம் நடத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால் மாணவர்கள் வெளியேற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பதற்றத்தைத் தணித்து அமைதியும் இயல்பு வாழ்க்கையும் திரும்புவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel