2எங்கே எமது ஆறுகள்..?

Published On:

| By Balaji

ஆற்றைத் தேடும் அவலம்!

நரேஷ்

“ஆறிருக்கும் பக்கத்துல ஊரு உருவாச்சு..

வரலாறு சொல்லுச்சு..

ஊரு மட்டும் இருக்குதய்யா.. ஆத்த மட்டும் காணல..

போன எடம் தெரியல..”

மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள் என்பதை நினைக்கும்போது மனிதராக என் பிறந்தோம் என்று எண்ணி வருந்த வேண்டியிருக்கிறது. இன்று இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு ஆதாரம் ஆறுகள்தான். ஆறுகள் இல்லையென்றால் மனிதகுல வரலாறு என்பதே நிச்சயமாக இருந்திருக்காது.

ஆனால், எப்போது தொழில்நுட்பத்தால் நீர் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டோமோ அப்போதே அறிவின் உச்சத்தில் நின்றுகொண்டு ஆறுகளைக் கைவிட்டோம். நாம் நன்றி மறந்ததைக்கூட மனதில் கொள்ளாமல் எடுக்கும் இடங்களில் எல்லாம் நீர் நிறைத்து சென்றன அவ்வாறுகள். அந்த ஆறுகள் ஓடினால்தான் நீர் நிறைந்திருக்கும் என்பதையே மறந்துவிட்டோம். ஆறுகளை நாம் கைவிட்டதோடு நின்றுவிட்டோமா என்ன? எந்த ஆறு நமக்கு உயிர் கொடுத்ததோ, அந்த ஆற்றில் நம் மலத்தையும் மூத்திரத்தையும் மனசாட்சியே இல்லாமல் கலந்துவிட்டோம். மனிதர்களை உருவாக்கிய ஆறுகள், இன்றைக்கு மனிதர்களால் படுகொலை செய்யப்படுகிறது. இதை ஏன் படுகொலை என்று சொல்கிறோம் என்றால், ஆறுகளுக்கும் உயிர் இருக்கிறது. அந்த உயிரை உண்டு வளர்ந்த மிச்சங்கள்தான் இந்த மனிதர்கள்!

எங்கு வேண்டுமானாலும் நிலத்தில் போர் போட்டு தண்ணீர் உறிஞ்சலாம் என்ற தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்த பிறகு, காலம் காலமாக நமக்கு உயிர்கொடுத்து வந்த நதிகள் நமக்குத் தேவையில்லாமல் போயின. அந்த நதிகள் உயிருடன் ஓடினால்தான் நிலத்துக்கு அடியில் நீர் சுரக்கும் என்பதையே நாம் மறந்துவிட்டோம். எடுக்கக் கூடாத தண்ணீரை எடுத்து, அதைப் பயன்படுத்தக்கூடாத வகையில் பயன்படுத்தி மீதமாகும் கழிவுகளை ஆறுகளில் கலந்துவிடுகிறோம். அதன் விளைவு, இன்று எல்லா ஊர்களிலும் ஆறுகள் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கின்றன. கூவம் என்ற ஜீவ நதியின் பெயரே தற்போது நாற்றத்தைச் சுமந்து நம் வாய்களில் வலம் வருகிறது. ஒவ்வோர் ஊரின் உயிர் ஆறுகளும் இன்று கூவங்களாகி வருகின்றன.

அத்தியாயம் 1

சீரழியும் சிற்றாறு!

தென்காசி பக்கத்துல இருக்கு குற்றால மலை. பெயரைக் குறிப்பிடும்போதே சில்லென்று காற்றடிக்கும் குற்றால அருவி உருவாகும் மலை. அந்த மலையில் இருந்து 80 கிலோமீட்டர் நீளத்துல, 1,722 சதுர கிமீ பரப்பளவில் 17 அணைக்கட்டுகளுடன் 47,026.02 ஏக்கர் நிலங்களுக்கு பாசனமளிக்கும் உயிர்நதி – சிற்றாறு. இந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன தெரியுமா ?

“இந்த ஆத்துல இருந்துதான் தென்காசி மக்கள் முழுக்க குடிக்கிறக்கு, சமையலுக்குன்னு தண்ணி எடுத்துட்டு போவாங்க. ஆனா, இன்னிக்கு இந்த ஆத்துல குளிக்கக்கூட முடியாது. அவ்வளவும் சாக்கடையாகிட்டு இருக்கு. இந்த நகரத்தோட ஒட்டுமொத்த கழிவும் இந்த ஆத்துலதான் கலந்துவிடப்படுது. மாடு கண்ணுக்கூட இதுல தண்ணி குடிக்க முடியல. இந்த ஆத்தை மட்டும் மீட்டெடுத்துட்டா, ஒட்டுமொத்த தென்காசிக்குத் தண்ணி பிரச்சினையே வராது” என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வேலுமயில்.

சிற்றாறு என்பது வெறும் பெயர்தான். ஆனால், இந்தச் சிற்றாறுக்கே துணையாறுகள் இருக்கின்றன. ஐந்தருவி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, அமுத கன்னியாறு, உப்போடை ஆகிய துணையாறுகள் மூலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசனமும், பல நூறு ஊர்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது இந்த சிற்றாறு. மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், பல்வேறு உயிரினங்களுக்கும் உயிர் ஆதாரமா இருப்பது இந்த நதிகள்தான்.

சிற்றாற்றிலிருந்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வீராணம் வட்டம் என்று பல பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மையான குளங்களுக்குச் சிற்றாறுதான் நீர் வழங்கும் தாய்.

ஆனால், இன்று அந்தச் சிற்றாறே சிறு ஓடைப் போலத்தான் காட்சியளிக்கிறது. இந்தக் கொடூரத்துக்கு என்ன காரணம்?�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share