தனுஷின் அநேகன் படத்தின் மூலம் கவனம்பெற்ற நடிகை அமைரா தஸ்தூர், தற்போது சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷின் அநேகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றவர் அமைரா. ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குத் தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘காதலைத் தேடி நித்யா நந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹாரர் பாணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அமைரா. இதுகுறித்து மும்பை மிரருக்கு அளித்துள்ள பேட்டியில், “சைக்காலிஜிக்கல் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்கு முன் இது போன்ற படங்கள் நடித்ததில்லை. ரொம்ப கஷ்டமான ஜானர்.
இயக்குநர் ஆதிக், எனது கதாபாத்திரத்தை விளக்கமாக விளக்கினார். அதைத் தொடர்ந்து இது சம்பந்தமாக புத்தகங்கள், மருத்துவக் குறிப்புக்கள், இயக்குநர் ஹிட்ச் காக்கின் படங்களைப் பார்த்தேன். ஆனால், தொழில் நிமித்தமாக எனது கதாபாத்திரத்தைச் சொல்ல முடியாது. இருந்தாலும் செக்ஸியான, அறிவுபூர்வமான கதாபாத்திரம். கொச்சி மற்றும் வெளிநாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறும் கலையம்சமான விஷயங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த அனுபவம் பற்றி கூறும் போது, “இதில் சவால் என்னவென்றால், பிரபுதேவாவின் கதாபாத்திரத்துக்கு ஈடுகொடுத்து நடித்தது. அவருடன் நடனமாடும்போது பதற்றமடைந்தேன். அவர் நடனமாடும்போது மொத்த படக்குழுவும், அவரது ஒவ்வொரு அசைவையும் ரசித்து கைதட்டுவார்கள். பிறவி கலைஞன் அவர். ஆறு முறை அவருடன் நடனமாடும்போது எனது அசைவுகளை மறந்துவிட்டேன். அவரின் எனர்ஜிக்கு ஈடு கொடுத்து ஆடுவது அசாத்தியமான அனுபவம். அவரின் கெட்அப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் என்னிடம் வந்து பேசும் போதுதான் அடையாளம் கண்டேன்” என்று கூறியுள்ளார்.�,”