விஜய்யின் பிகில் படத்துக்கு ரசிகர்கள் தாறுமாறா ரெடி ஆகிட்டு வர்றாங்க. ரிலீஸப்ப என்னென்ன பண்ணப் போறாங்கன்னு கேட்டா, அவங்க வெளியிடுற பட்டியல் 1000 வாலா சரத்தைவிட பெரிசா போகுது. சரி, இவ்வளவு ஆர்வமா ரசிகர்கள் காத்திருக்கும் பிகில் படம், ரிலீஸுக்குத் தயாராகிடுச்சான்னு பார்க்க பிகில் டீம் பக்கம் திரும்புனப்ப கிடைச்சது ஓர் அதிர்ச்சியான செய்தி. அது, ‘தீபாவளிக்கு விஜய் படம் ரிலீஸாகுமான்னு தெரியல’ என்பதுதான். இது சம்பந்தமா முதல்வரைச் சந்திக்கலாம்னு கேட்டப்பவும், அவர் ‘முடியாது’ எனச் சொல்லிட்டார்.
அக்டோபர் 27ஆம் தேதி (தீபாவளி) பிகில் படம் ரிலீஸாகத் திட்டமிடப்பட்டிருக்கு. நியாயப்படி, இந்நேரம் படத்தோட சென்சார் வேலைகள் முடிந்து, டிரெய்லர் ரிலீஸாகியிருக்கணும். ஆனால், இன்னும் டீசர் கூட ரிலீஸ் பண்ணாம இருக்காங்க பிகில் டீம். காரணம், விஜய் அரசாங்கத்தை டச் பண்ணது.
பிகில் படத்தை எந்தக் காரணத்தாலயும் ரிலீஸ் செய்ய விடக் கூடாதுன்னு ஆளுங்கட்சி தரப்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அடிப்படை, இசை வெளியீடு நிகழ்ச்சில விஜய் பேசிய விஷயங்கள்தாம். “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற திருக்குறளைப் போல எவன் எவனை எங்கெங்க உக்கார வைக்கணுமோ, அங்க உக்கார வெச்சா கோல்டு மெடலெல்லாம் தானா வரும்ங்க” என்று விஜய் பதில் சொன்னார். ஆனால், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரம்யா கேட்ட கேள்வியோ ‘சமீப காலமா தமிழ்நாட்டுல இருந்து பலர் சாதனைகளை செய்துக்கிட்டு வர்றாங்க. அவங்க வாழ்க்கைல வெற்றிபெற சில ஆலோசனைகளை கொடுக்க முடியுமா?’ என்பதுதான். விளையாட்டைப் பற்றி இளைஞர்களுக்கு அட்வைஸ் சொல்லச் சொன்னா, “அரசியல்ல புகுந்து விளையாடுங்க; விளையாட்டுல புகுந்து அரசியல் பண்ணாதீங்க” என விஜய் பேசத் தொடங்கிட்டாரே என்ற கோபம்தான் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களை பிகிலுக்கு எதிரா வேலை செய்ய வெச்சிருக்கு. ‘எவனை எங்க உக்கார வைக்கணுமோ’ என ஒருமையில் பேசினதாலயும், அத்தனை அமைச்சர்கள் பேசியும் விஜய் அதற்கு எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காததும் அரசியல்வாதிகள் பலரை மேலும் கோபப்படுத்தியது.
செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்துக்காக சென்ற அமைச்சர் ஜெயக்குமார், சென்னை திரும்பி வந்தபோது “விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். பழுத்த மரம்தான் கல்லடிபடும். அதிமுக பழுத்த மரம். படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்களைத் தாக்குகிறார்” என்று கூறியதன் மூலம் ‘விஜய் நேரடியாக சொல்லாவிட்டாலும், எங்களைத்தான் சொன்னார் என்பது எங்களுக்குத் தெரிந்துவிட்டது’ என்ற கருத்தை பதிவு செய்தார்.
அதிமுகவின் வைகைச்செல்வன் பேசியபோது “முன்னர் எல்லாம் ஒரு படம் வெளியானால் அது ஓராண்டு வரையெல்லாம் ஓடிய வரலாறு உண்டு. ஆனால், இப்போது வெளியாகும் படங்களை 20 நாட்களுக்கு மேல் ஒட்டுவதே சிரமமாக உள்ளது. எனவே படத்தை ஓட்ட ஒரு பரபரப்பை உருவாக்க நடிகர்கள் இது போல் பேசுகிறார்கள். அதில் முக்கியமானவராக உள்ளார் நடிகர் விஜய். யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கேதான் வைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என அனைத்தும் மக்களின் எண்ணப்படியே ஆட்சி நடக்கிறது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் விஜய் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவருக்கு எந்த தொல்லையும் தரப்படவில்லை. இருப்பினும் தனது படத்தை ஓட வைக்க விஜய் இவ்வாறு பேசுகிறார்” என்று கூறினார்.
விஜய் பரபரப்புக்காக பேசுகிறாரோ இல்லையோ; ஆனால், வைகைச்செல்வன் கூறியதுபோல அதிமுக ஆட்சியில் பிரச்சினை இல்லாமல் விஜய் படம் வந்ததே இல்லை.
சர்கார் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சியிலும் விஜய் பேசினார். “மெர்சல் படத்தில் அரசியல் இருந்தது. ஆனால், சர்கார் படத்தில் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் முருகதாஸ். நாங்கள் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கிறோம். பிடித்தால் படத்துக்கு ஓட்டு போடுங்கள். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்” என விஜய் பேசியது அதிமுகவை சீண்டியது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விஜய்யின் பேச்சுக்கு “நாங்கள் நாட்டை கவனமாக பார்த்துக் கொள்ளும்போது நடிகர்கள் எதற்கு முதல்வராக நினைக்கிறீர்கள்? சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது” என்று பதில் சொன்னார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது, “மக்களை வன்முறைக்குத் தூண்டும் சட்டவிரோத தீவிரவாத செயலை விஜய் செய்கிறார்” என்று விமர்சித்ததோடு அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால, படத்தைத் தடை செய்யவும், விஜய் மேல கேஸ் போடவும் தயாரானாங்க. அதன் பிறகு படத்தில் இருந்த சில காட்சிகளை டெலிட் பண்ணவும், கோமளவள்ளி என்ற பெயரை மியூட் செய்யவும் படக்குழு சம்மதம் சொன்னதால அமைதி திரும்பியது.
மெர்சல் பட ரிலீஸின்போது ‘டிமானிடைசேஷன்’, மருத்துவத் துறை ஊழல் போன்ற விஷயங்களைப் பேசுவதாக பாஜகவினர் செய்த போராட்டங்களை மறக்கவே முடியாது. தயாரிப்பு தரப்பு பாஜக கட்சி தலைவர்களைச் சந்திச்சு விளக்கம் கொடுத்ததும் ஓரளவுக்குப் பிரச்சினை அடங்குச்சு. ஆனால், விஜய் வெளியிட்ட அறிக்கைல ‘ஜோசப் விஜய்’ எனத் தன் பெயரை எழுதியது மெர்சல் படத்துக்கு எதிரா மதப் பிரச்சினையை வெச்சு பேசினவங்களுக்குக் கோபத்தை வரவழைச்சது.
இதெல்லாம் விஜய்க்கு ஒண்ணும் புதுசில்லயே.
விஜய் நடிச்ச தலைவா படத்துக்கு பிரச்சினைகள் வந்தப்ப, இப்ப நடப்பதுபோல எந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் அறிவிப்புகள் வெளியிட்டது கிடையாது. கடைசில கொடநாடு வரைக்கும் சென்று விஜய்யும், அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் வெறும் கையுடன் திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இப்ப நிலைமை மாறிடுச்சு. ஒவ்வொரு படத்தோட இசை வெளியீடு நிகழ்ச்சிலயும் விஜய் பேசுறதும், அதற்கு ஆளுங்கட்சி விமர்சனம் பண்றதும், அதற்குப் பதில் சொல்லாமல் விஜய் சைலண்டா இருந்து அவங்களை மட்டுமே பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது சாதாரண விஷயம் இல்லை.
மெர்சல் படத்துல ஜோசப் விஜய்னு பெயரைப்போட்டு கோல் அடிச்சவரு, சர்கார் படத்துல எதுவும் பேசாம இருந்து ஸ்கோர் பண்ணார். மெர்சல் பிரச்சினைல ‘பொதுவா அரசியல் கட்சிகளை விமர்சித்துப் பேசினால் எல்லா கட்சிகளும் கோபப்படணும். ஆனால், அதிமுக மட்டும் கடந்து குதிக்குது. மத்த கட்சிகள் எங்களுக்கு ஆதரவா இருக்கே’ என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டதும், விஷயத்தை புரிஞ்சிக்கிட்ட ஆளுங்கட்சி, நேரம் வரும் வரை காத்திருப்போம்னு சைலண்ட் மோடுக்கு மாறுச்சி.
தமிழக அமைச்சர்கள் பேசியதற்கு எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காம, விஜய் லண்டன் கிளம்பிப் போனதும், ‘படத்தை சென்சார் பண்ண பிறகு டிரெய்லர் ரிலீஸ் செய்துக்கலாம். இல்லைன்னா, சர்க்கார் படத்துக்கு பிரச்சினை வந்த மாதிரி இதுக்கும் வரலாம்’ என டிரெய்லரை தள்ளி வெச்சதும் இப்ப பிரச்சினையில் வந்து முடிஞ்சிருக்கு.
இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க பல முறையில் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கு. படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம், முதல்வர் எடப்பாடியுடன் ஒரு மீட்டிங்கே ஏற்பாடு பண்ணிடலாம்னு முன்னெடுத்த முயற்சிகள் எல்லாமே வீணானது. கல்பாத்தி அகோரம் மட்டும் வருவதா சொன்னப்பவும், விஜய்யையும் கூட்டிக்கிட்டு வருவதா சொன்னப்பவும் முதல்வர் சைடிலிருந்து எந்த சிக்னலும் இல்லை. ஒவ்வொரு முறை பிரச்சினை நடக்குறதும். அதற்குப் பிறகு பேசி சரி செய்வதும் என் படத்துல நடக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறார் அகோரம். காரணம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் பிகில். தியேட்டர் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ், டிவி ரைட்ஸ், FMS என 200 கோடிக்கும் மேல வியாபாரம் செய்யப்பட்டிருக்கு. பிகில் படத்துக்காக விஜய்க்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டும் 40 கோடிகள். இதனால, படத்துக்கான பிரச்சினைகளை சரி செய்யவேண்டிய கடமை இருக்குறதை உணர்ந்த பின்னரே சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்காங்க. ஆனால், பிகில் டீமின் ரிக்வஸ்டை ரிஜெக்ட் செய்து, பிகிலின் வால்யூமை அதிகரிச்சிருக்காங்க. இப்ப பிகில் டீம் கண் முன்னாடி இருக்குறது மூன்று பிரச்சினைகள்.
**சென்சார் பிரச்சினை**
சென்சாரைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு படத்தையும் சென்சார் செய்ய ஒரே வழிமுறைதான். ஆன்லைனில் பதிவு செய்து, தங்களுடைய படத்துக்கான சென்சார் தேதியை வாங்கி, அந்த நேரத்தில் படத்தை போட்டுக் காட்டி சென்சார் சர்டிஃபிகேட் வாங்கணும். ஆனால், அக்டோபர் 3ஆம் தேதிப்படி, படம் ரிலீஸாக 24 நாட்களே இருக்கு. ஆனால், இப்போது வரைக்கும் விஜய் படத்துக்கு சென்சார் செய்யும் தேதி கொடுக்கப்படல. காலம் கரையுறதப் பார்த்து பிகில் டீம், சென்சார் ஆபீஸ் பக்கம் அணுகும்போதுதான், ‘தீபாவளிக்குள்ள படத்தை சென்சார் பண்ண முடியாது’ என்ற தகவல் கிடைச்சிருக்கு. ஏன் எதற்கென விசாரிச்சா, “பல சென்சார் அதிகாரிகள் லீவ்ல போறாங்க சார். உங்க படத்துக்கு முன்னாடி ரிஜிஸ்டர் பண்ண படங்கள் வெயிட்டிங்ல இருக்கு” எனச் சொல்லப்பட்டிருக்கு.
மெர்சல் படத்துக்கும் இதே மாதிரி பிரச்சினை வந்தது. ஆனால், அப்ப சென்சார் டீம் பார்த்து சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய வரிசையில் முதல் இடத்தில் இருந்தது மெர்சல் படம். அப்போது ஏற்பட்ட பிரச்சினைகளை கவனிச்சிட்டு, ‘இவ்வளவு பிரச்சினைகள் வரும்போது அரசு அதிகாரிகள் விடுமுறையில் போவதா?’ என கேள்விகள் பல பக்கங்களிலிருந்தும் கேட்கப்பட்டது. அதனாலயே, பிகிலுக்கு முன்னாடி சென்சாருக்கு ரிலீஸ் பண்ண பல படங்களை சர்டிபிகேட் பண்ணாம வைக்கப்பட்டிருக்கு என்ற தகவல் கிடைத்ததும் பிகில் டீம் அப்செட்.
ஒரு படத்தை சென்சார் பண்ண மினிமம் 10 நாட்களும், மேக்ஸிமம் 45 – 50 நாட்கள் வரைக்கும் ஆகும். பிகில் டீமை கதிகலங்க வைக்க, அந்த 50 நாள் டார்கெட் கையிலெடுக்கப்பட்டிருக்கு. மேற்சொன்னபடி திட்டங்கள் நடந்தா, தீபாவளிக்கு முன்னாடி பிகில் சென்சார் செய்யப்படாது. மெர்சல் படப் பிரச்சினைகளின்போது தமிழக பாஜகவைக் கிண்டல் செய்யும் விதமாக விஜய் செய்தவற்றை டெல்லிக்கு சொல்லியனுப்பி அங்க இருந்து மும்பைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கு.
தமிழ் படங்களை சென்சார் செய்ய ஒரு குழு இருக்கிறதே தவிர, எந்தப் படத்தை சென்சார் செய்ய வேண்டும் என்றாலும் அந்த ஃபைல் எல்லாம் மும்பையிலுள்ள மத்திய தணிக்கை வாரியத்துக்கு அனுப்பப்பட்டே ஆகணும். அப்படி மும்பைக்குச் செல்லும் பிகில் ஃபைலின் மவுத்தைப் பிடுங்கச் சொல்லி மாநில ஆளுங்கட்சியும், மத்திய ஆளுங்கட்சியின் தமிழகப் பிரிவும் வலுவான சிபாரிசு செய்திருக்காங்க. ஒருவேளை ‘விஜய் அரசியலுக்கு வந்தால், அவர் காங்கிரஸில் சேர்வதற்கான வாய்ப்பும் இருக்கு’ என அவருக்கும், ராகுல் காந்திக்குமான நட்பையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் வைத்தே மாநில அரசு கேட்பதை செய்வதற்கான சிக்னல் டெல்லியிலிருந்து கிடைத்திருக்கிறது.
**தியேட்டர் பிரச்சினை**
தியேட்டர் தொடர்பா என்ன பிரச்சினை வரக்கூடும்னு விசாரிச்சா அங்க இன்னொரு கதையை சொல்றாங்க. பிகில் படத்தை காலி செய்யவே, தீபாவளிக்கு முன்னாடி தியேட்டர் டிக்கெட் விற்பனையை ஆன்லைன் மூலமா மாத்திடலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கு. ஆனால், அதன் பிறகு சென்சார்லயே பிகிலுக்கு பிரச்சினை என்பதால், டிக்கெட் விற்பனையை ஆன்லைனுக்கு மாற்றுவதை முற்றிலுமா தவிர்த்தது அரசு. இதனால தியேட்டர் உரிமையாளர்களும் அரசாங்கத்துடன் நெருக்கமா ஆகிட்டதால அவங்க என்ன சொன்னாலும் செய்ய இவங்க ரெடி. தமிழ்நாட்டில் இதை எப்படி செய்யுறதுன்னு, ஆட்சியாளர்கள் ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே காட்டிட்டுப் போயிருக்காங்க.
‘படத்தை வெளியிட்டால் பிரச்சினை ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்’ என அறிவித்து, ‘படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கிறோம்’ என ஒரே ஓர் அரசாணை போட்டால் படத்தை எந்தவிதத்திலும் ரிலீஸ் செய்ய முடியாது. இந்த மாதிரி தடை செய்யப்பட்டது கமலுடைய விஸ்வரூபம் மட்டுமில்லை. முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தையும் தடை செய்திருப்பதை மறக்க முடியாது. சரி, படத்துக்கு அப்படி என்னதான் பிரச்சினை ஏற்படும் என விசாரித்தால், அவங்க கையிலெடுக்குறது விஜய் கையிலிருந்த கத்தியையும், அவர் காலில் இருந்த மரத்தையும்.
**மற்ற பிரச்சினை**
கறி வெட்டப் பயன்படுத்தும் மரத்துக்கு மேல, விஜய் கால் வெச்சிருக்க மாதிரி போஸ்டர் வெளியானபோதே ‘இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம்’ போராட்டம் பண்ணாங்க. அப்ப ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் நடக்காததால கவர்மென்ட்டும் பெருசா கண்டுக்கல. ஆனால், அந்தப் பிரச்சினை இப்ப வேற ரூட்ல போகுது.
இறைச்சி விற்பனையாளர்கள் என தனியா பிரிக்காமல் மீன் விற்பவர்கள், இறைச்சி விற்பவர்கள், மாட்டுக்கறி வியாபாரம் செய்பவர்கள் என பல தரப்பையும் பிகில் பக்கம் திருப்பிவிட தயாராக இருக்காங்க. முக்கியமாக ‘புள்ளிங்கோ’ எனப் படத்தில் குறிப்பிடுவதையே சாதிப் பிரச்சினையா திரிச்சு நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருது.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, விஜய்யை எப்போதுமே கிறிஸ்டியன் மதத்தைச் சேர்ந்தவர்னு குறிப்பிடுறதை வழக்கமாக கொண்டவர். அதனாலேயே, இத்தனை வருஷம் இல்லாம, விஜய் கேரக்டருக்கு மைக்கேல் என்ற கிறிஸ்டியன் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாகவும் அவரை கிண்டல் செய்யத் தொடங்கிட்டாங்க. இத்தனை இயக்குநர்களுக்கு இல்லாத தைரியம் அட்லீக்கு வந்ததற்கான காரணம், அவரும் ஒரு கிறிஸ்துவர் என்பதால் இந்த விஷயத்தையே பெரிதாக்கி டெல்லிகிட்ட இருந்து லைக் வாங்கிடலாம்னு தீவிரமா இருக்காங்க.
ஃபுட்பால் மேட்சைப் பொறுத்தவரைக்கும் 11 பேர் கோல் அடிக்கவிடாம தடுப்பாங்க. அதேபோல, பிகில் பிரச்சினையில் விஜய் முன்னாடியும் பல பிரச்சினைகள் வரிசையா நிக்குது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தப்ப வெளியிட்ட வீடியோ மூலமா, தற்போதைய அரசாங்கத்துடன் விஜய்க்கு தொடங்கிய சச்சரவு, பிகில் படத்தின் மூலமாகவும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. மத்திய அரசும், மாநில அரசும் கைகோர்த்துக்கிட்டு விஜய் படத்தைத் தடை செய்வதிலும் தீவிரமா இறங்கியிருக்குறதால, இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு, வெற்றியடைந்து விஜய் பிகிலை ஊதிக்கொண்டே வருகிறாரா எனப் பார்க்கலாம்.�,”