மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷேவின் அறிக்கைக்கு திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே 52 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவர் கடந்த 19ஆம் தேதி அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, புதிய அரசு அமைவதற்கு வழிவிடும் விதமாக பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். காபந்து பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷே இன்று பிற்பகல் பதவியேற்கவுள்ளார்.
இதற்கிடையே கோத்தபய ராஜபக்ஷே வெற்றிபெற்றது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்ட மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷே, “தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை. தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்கான எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்ள வைகோ, தொல்.திருமாவளவன், ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழக தலைவர்களே!
ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/wKtvybkLwv
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 19, 2019
இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், “திடீரென தமிழர்களின்மீது ராஜபக்ஷே குடும்பத்தினருக்குக் கரிசனம் வந்திருப்பது விந்தையாக உள்ளது. இது வெற்றிக்களிப்பில் எக்காளமிடும் அவர்களின் அகந்தையை வெளிப்படுத்துவதாக உள்ளது. எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பது, களப்பணியாற்றுவது எங்களின் பிறவிக்கடன். இதனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் அவரின் அறிக்கை அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால், என்னைக் கூடுதலாகச் சீண்டியிருக்கிறார் என்று தெரிவித்துள்ள திருமாவளவன், “அப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் சிநேகமான கலந்துரையாடலை நான் மேற்கொண்டதாகவும் தற்போது சந்தர்ப்பவாதமாக அவர்களை எதிர்த்துப் பேசுவதாகவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். இது என்மீது திட்டமிட்டுக் களங்கத்தை ஏற்படுத்துவதற்கான சதிமுயற்சியாகும்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, “அவரது தந்தை இராஜபக்சேவை நாங்கள் சந்தித்தபோது, அவர் என்னைச் சுட்டிக்காட்டி, “ இவர் புலிகள் தரப்பை மட்டுமே ஆதரிக்கக் கூடியவர்; எங்கள் தரப்பு கருத்துகளைக் கேட்காமலேயே எங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடுகிறவர்” என்று கூறினார். அத்துடன், உரையாடலின் நிறைவில் எம்மிடமிருந்து விடைபெறும் போது, அவர் திடீரென என் கையைப் பிடித்துக்கொண்டு, “ இவர் பிரபாகரனுக்கு வேண்டியவர். போர்நடக்கும்போது இவர் வன்னியில் இருந்திருந்தால் பிரபாகரனோடு இவரும் மேலுலகம் போயிருப்பார்” என்று என்மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். இப்படித்தான் என்னுடன் அவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. இதனையே நமல்இராஜபக்சே சிநேகமான கலந்துரையாடல் என்கிறார்” என்று இலங்கையில் நடைபெற்றதை விவரித்துள்ளார்.
மேலும், “உண்மையில் ஈழத்தமிழர்கள் மீது அவர்களுக்குத் துளியேனும் கரிசனம் அல்லது இரக்கம் இருந்தால், தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு அறிவுரைக் கூறுவதைவிட, எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தமிழர்களின் தாயகத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பபெறவும் சிங்களக் குடியேற்றம் உள்ளிட்ட சிங்களமயமாதலைக் கைவிடவும் இராஜபக்சே குடும்பம் முன்வரவேண்டும்” என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நமல்இராஜபக்சே அறிக்கை:
வெற்றிக் களிப்பின் எக்காளம்! #NamalRajapakse#SrilankaPresidentElection2019#SriLanka #srilankaelection pic.twitter.com/V38P1pIjX1— Thol.Thirumavalavan (@thirumaofficial) November 20, 2019
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், “உலக சமுதாயத்தினால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இராசபக்சேயின் மகன் தமிழ்நாட்டுத் தலைவர்களை அவதூறு செய்துள்ளார். சிங்கள மக்களிடையே இனவெறியை வளர்த்து, அதனையே அரசியல் பிழைப்பாகக் கொண்டுள்ள இராசபக்சே குடும்பத்தினரிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. சாத்தான் வேதம் ஓதுவதைப் போல அவர் பேசியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வான்வழித்தாக்குதலின் மூலம் வீசி, ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது.
ஈழ நிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? – சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/rsWjq5Hl6o
— சீமான் (@SeemanOfficial) November 20, 2019
கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்டகாலமாகும்இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர் என்பது மட்டுமல்ல, சீனாவில் ஆதிக்கத்திற்கு துணைபோகிறவரும்கூட. அவரது சீன ஆதரவு செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கே பேராபத்தினை விளைவிக்கக்கூடும் என்பதனை உணர்ந்து, இனியாவது இந்தியப் பேரரசு தார்மீகத்தோடு தமிழர்கள் பக்கம் நிற்க முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும் நமல் ராஜபக்ஷேவுக்கு வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
�,”