தமிழகத்தில் கொரோனா பரவல் எட்டாயிரத்தைத் தாண்டி சென்றுள்ள நிலையில், 11 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது அதிர்ச்சியளிக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி திருவிழா கடைபிடிக்கப்பட்டது. கொரோனா தீவிரம் காரணமாகவும், தடுப்பூசி திருவிழா என்பதாலும், அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில், வண்ணார்பேட்டை நகர்ப்புற சுகாதார நிலையத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மையத்தில் நேற்று காலை 30 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்து கொண்டு மக்கள் காத்திருந்தனர். ஆனால், 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். அவர்களும் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால் மற்றவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று ஊழியர்கள் கூறிவிட்டனர்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நேற்று 46 பேருக்கு தடுப்பூசி போட்டதும் தடுப்பூசி மருந்து தீர்ந்து விட்டது.
தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் உள்ள அரசு மருத்துவமனையில்200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. காலை 8 மணிக்கு வந்து காத்திருந்த 50 பேருக்கு மட்டுமே ஊசி போடப்பட்டது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசி போட நேற்று 40க்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். ஆனால், தடுப்பூசி போதிய இருப்பு இல்லை, எனவே திங்கட்கிழமைக்கு மேல் வாருங்கள் எனக்கூறி திருப்பி அனுப்பினர்.
அதுபோன்று கோவையில் 12,850 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இதனை பயன்படுத்தி அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதனால் அரசிடம் கூடுதல் தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம், நீலகிரி,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 3,864 அரசு தடுப்பூசி மையங்களிலும், 931 தனியார் தடுப்பூசி மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பூசியும், 7,82,130 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கி உள்ளது.
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேசமயம் போதியளவு தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி போடும் மையங்கள் மூடப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள அம்மாநிலத்தில் உள்ள ஹாஃப்கைன் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குஜராத், ராஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால், நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரே படுக்கையை ஒன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்படுத்தி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவன மருத்துவமனை படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு அளித்து உதவவும், கொரோனா சிகிச்சைக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படவும் மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,