நாடு முழுவதும் நீரில் அளவு, தரம், விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த 6,000 நீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்களை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
வேளாண்மை தொழிலுக்கு இன்றியமையாததாக விளங்கும் நீர், உலக பயன்பாட்டில் 70 சதவிகிதம் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீரில் உள்ள தாது உப்புகள், உலோகங்கள் போன்றவற்றின் விகிதாசாரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே வேளாண்மைக்குப் பயன்படுத்த முடியும். அதேபோல் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் தேவைகளுக்கு ஏற்ற தூய நிலையில் நீர் உள்ளதா என்பதும் அவசியம். குடிநீர் மற்றும் நீர்நிலைகளின் தரம் குன்றினால் பல்வேறு மோசமான உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும். இதனால் நீரின் தரத்தைப் பரிசோதிப்பது என்பது அவசியம்.
தற்போது இந்தியாவில் 2,000 நீர் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதி 4,000 ஆய்வுக்கூடங்களை வரும் ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அரசு தண்ணீர் சேவையை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்துக்கும் தண்ணீர் தரப் பரிசோதனை உள்கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியிலும் 8.5 கோடி வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,