^கனிமொழிக்கு உதயநிதி வைக்கும் செக்!

Published On:

| By Balaji

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக அண்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்குள் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். பொறுப்பேற்ற அன்றே உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவேன் என்று அறிவித்த உதயநிதி ஸ்டாலின், அதில் தீவிரமாகியிருக்கிறார்.

இந்த நிலையில் இளைஞரணி என்றாலே ஆண்கள் என்பதுதான் அடையாளமாக இருக்கிறது. எனவே இளம்பெண்களையும் இளைஞரணிக்குள் கொண்டுவரவேண்டும் என்றும், அதற்காக இளைஞரணித் துணைச் செயலாளர்களில் பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று உதயநிதிக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. இதன் நீட்சியாக அதிமுகவைப் போல திமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை அமைக்கலாம் என்ற யோசனையும் உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் திமுக இளைஞரணிக்கு உட்பட்ட அமைப்பாக இளம்பெண்களுக்கு என தனி பிரிவு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது என்கிறார்கள் இளைஞரணி வட்டாரத்தில். இந்த செய்தி உலவியதன் எதிரொலியாக, ‘திமுகவில் ஏற்கனவே மகளிரணி இருக்கும்போது இளைஞரணிக்குள் இளம்பெண்கள் அணி என ஏன் தனியாக அமைக்கவேண்டும்?” என்ற கேள்வியும் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

நம்மிடம் பேசிய இளைஞரணி நிர்வாகிகள் , “உதயநிதியை கட்சிக்குள் கொண்டுவந்தபோதே இது கனிமொழிக்கு பின்னடைவு என்று கூற ஆரம்பித்தனர் சிலர். அதற்கேற்ற மாதிரியே உதயநிதி உள்ளே வந்ததும் அவரே மாநிலம் முழுதும் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்றார். கனிமொழிக்கான மாநிலம் முழுதுமான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

இப்போது இளைஞரணிக்குள் இளம்பெண்கள் அணி என உருவாக்கப்படும் பட்சத்தில் மகளிரணியின் செயல்பாடுகள் மேலும் குறையக் கூடிய சூழல் உருவாக்கப்படலாம். மகளிரணியில் ஏற்கனவே பல இளம்பெண்கள் இருக்கும் நிலையில், அவர்கள் அப்படியே இளைஞரணிக்கு மாற்றப்படுவார்களா என்ற கேள்வி எழுகிறது. இளம்பெண்களுக்கு என தனி அணி உருவானால், மகளிரணி என்பது வயதான பெண்களுக்கானது என்ற ஒரு சூழல் உண்டாகும்.

இப்படி ஒரு அணி உருவாக்கப்படுவது பற்றி கனிமொழியிடம் ஏற்கனவே ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். கனிமொழியும் தலைவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தனது மகளிரணிச் செயல்பாட்டில் இன்னும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்” என்கிறார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share