~விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஊரடங்குதான்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டத்தைத் தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று(மார்ச் 28), சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், தலைமைச் செயலாளர் சீதாராம் குண்டே, கொரோனா தடுப்புப் பணிக் குழுவின் மருத்துவர்கள் மற்றும் பிற அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததால், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறினார்.

இதையடுத்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 35,726 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 27 லட்சத்தை நெருங்கியது. தொற்று பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஷாப்பிங் மால்கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட வேண்டும். இரவில் பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். அனைத்து பொது இடங்களும் காலை 7 மணி வரை மூடப்பட வேண்டும். உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படலாம்.

மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டத்தை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் மாநிலத் தலைமை செயலகத்திற்கு பொதுமக்கள் வருவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share