இந்திய ரயில்வே வரும் 10ஆம் தேதி முதல், முன்பு இருந்ததை போல, இரண்டாவது முன்பதிவு பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்குக்கு முந்தைய அதாவது கடந்த மார்ச் 22 ஆம் தேதிக்கு முன்பு, ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு முதல் முன்பதிவு பட்டியல் தயார் செய்யப்படும். இதனை அடுத்து இரண்டாவது பட்டியல் தயார் செய்யும் வரை காலியான இடங்கள் ஆன்லைன் மூலமாகவோ, பயணச்சீட்டு மையங்கள் வாயிலாகவோ நிரப்பப்படும்.
இரண்டாவது பட்டியல் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களிலிருந்து அரைமணி நேரத்திற்குள் தயாரிக்கப்படும். பயணிகள் ஏற்கனவே முன்பதிவு செய்த சீட்டுகளை இந்த காலத்திற்குள் ரத்து செய்து கொள்ளலாம்.
எனினும் இந்த கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இரண்டாம் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
மண்டல ரயில்வேக்களின் கோரிக்கையை ஏற்றும், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் முன்பைப் போலவே ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் முன்னதாக இரண்டாவது முன்பதிவு பட்டியல் தயார் செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் இரண்டாவது முன்பதிவு பட்டியல் வெளியிடப்படுமுன், ஆன்லைனிலும், பயணச்சீட்டு மையங்களிலும் பயணச்சீட்டை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ரயில்வேயின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
**-வேந்தன்**�,