திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் மே மாத தரிசன டிக்கெட்டுகள் இன்னும் வெளியிடப்படாததால் அடுத்த மாதத்துக்குப் பிறகு சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறுமா என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. திருப்பதியில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 12ஆம் தேதி முதல் இலவச தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் தினமும் 30,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட் வெளியிடப்பட்டன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் மாதம்தோறும் வெளியிடப்படுகிறது. தற்போது இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிவரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வார இறுதி விடுமுறை நாட்களான ஏப்ரல் 24, 25, 26ஆம் தேதிகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை. வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
இதனால் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மே மாதத்துக்குப் பிறகு சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறுமா, தரிசன டிக்கெட் நிறுத்தியதற்கான காரணம் என்ன என்று பக்தர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பக்தர்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை (ஏப்ரல் 20) திருமலை – திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும். பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று திருமலை – திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆனால், தினமும் 15,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.�,