இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்யமாட்டோம் என அறிவித்துள்ளது. எனினும், கிட்டத்தட்ட 4.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் அந்நிறுவனத்தில், இந்த வருடம் ஊதிய உயர்வு எதுவும் அளிக்கப்படாது.
மற்ற நிறுவனங்கள் புதிய நபர்களை வேலைக்கு எடுப்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், டிசிஎஸ் ஏற்கனவே உறுதியளித்தது போல 40,000 நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பினை வழங்குவோம் என அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் பெருமளவில் லாபம் கிடைத்திருப்பதாக தெரிவித்த டிசிஎஸ் நிறுவனம், கொரோனா தொற்று காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
“நாங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் மதிக்கப்படும். நாங்கள் யாரையும் பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கவில்லை” என்று டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மனித வள துறையின் தலைவர் மிலந்த் கூறுகையில், 40,000 புதிய பணியாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்ததோடு, பொதுவாகக் கல்லூரிகள் ஜூன் மாதம் வரையில் இருக்கும். இதன் பின்பு படிப்படியாக மாணவர்கள் பணியில் வந்து சேர்வார்கள் எனவும் கூறினார். மேலும், “ஊழியர்களுக்கு இந்த முறை சம்பள உயர்வு தர வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்” என்றும் அவர் அடுக்கினார்.
ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், நிறுவனம் ஒட்டுமொத்தமாக 12.1% வெளியேற்பு விகிதத்தை கொண்டுள்ளது, இது மற்ற நிறுவனங்களை விட சிறப்பானதாக உள்ளது எனக் குறிப்பிட்டார். இந்த நேரத்தில் கூட டிசிஎஸ் ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி கணபதி சுப்பிரமணியன் கூறும்போது, “டிசிஎஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் தற்போது 3.55 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் 90 சதவீத ஊழியர்கள் முழு வேலை நேரத்திலும் பணியாற்றி வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.
**எழில்**
தகவல்: லைவ் மிண்ட்
�,