புதிய வரிக் குறைப்பு: வேலையை காப்பாற்றும், உருவாக்காது!

Published On:

| By Balaji

மத்திய அரசின் சமீபத்திய பெரு நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை புதுப்பிக்கும் என்ற பரவலான நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீமாகக் குறைந்தது. இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்து வருகிறது. செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி, செஸ் மற்றும் கூடுதல் வரி உள்ளிட்டவற்றை 22 சதவீதமாகக் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

உலகளாவிய தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதாகவும் மோடி சபதம் செய்த இந்த வரிக் குறைப்பு, முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களில் பலர், பொருளாதாரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மோடியின் அரசாங்கம் காது கொடுத்து கேட்கவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

தற்போதைய வரி விகிதக் குறைப்பு, ஆசிய போட்டியாளர்களுக்கு ஏற்ப இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியங்களை முதலீட்டாளர்களுக்கு உருவாக்கியிருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஆனால் முதலீடு செய்வதற்கான பொருளாதார பற்றாக்குறையை அரசாங்கத்தின் இந்த திட்டம் சரி செய்யாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட உதவும் முதல் மூன்று காரணிகளாக இருக்கும் ரியல் எஸ்டேட், வேளாண் துறை, உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகியவை கடுமையான பாதிப்பை அடைந்துள்ளளன.

வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு, இதே மாதத்தில் 6.27 சதவீதமாக இருந்தது என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு தொழில் நிறுவனங்களை விரைவாக விரிவாக்கம் செய்ய, புதிதாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இந்த நடிவடிக்கையின் மூலம் தூண்டியிருக்கிறது. ஆனால் நிறுவனங்களின் பல கட்ட வணிகங்களுக்கும், சீரமைப்பிற்கும், நிலையாக கொண்டு செல்வதற்கும் நிதி தேவைப்படுகின்றது. மேலும், கார்கள் முதல் பிஸ்கட் வரை அனைத்து தொழில்களும் அடிபட்டுள்ளதால் தற்போது எந்த நிறுவனமும் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை.

சர்வதேச ஆய்வுகள் மையத்தின் இந்திய நிபுணர் ரிச்சர்ட் ரோஸ்ஸோ இது குறித்து கூறும் போது, இந்த வரிக் குறைப்பு, நிறுவனங்களுக்கு அதன் செயல்பாடுகளை பராமரிக்க இன்னும் கொஞ்சம் நிதி வழங்கும் என்று நம்புகிறோம். இப்போதைக்கு இது இருக்கும் வேலையை தக்க வைக்குமே தவிர, புதிதாக வேலையை உருவாக்காது” என்று கூறியுள்ளார்.

ஜியோஜித் நிதிச் சேவைகளின் தலைமை முதலீட்டு நிபுணர் வி.கே. விஜயகுமார், புதிய வரிக்குறைப்பை முதலீட்டாளர்களுக்கான உளவியல் தூண்டுதல் என்றே வர்ணிக்கிறார். அவர் கூறும்போது,“இந்த புதிய வரிக்குறைப்பு, நிதி ஊக்கத்தை விட, உளவியல் தூண்டுதலாகத் தான் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share