சர்வதேச விருது பெறும் தமிழகத்தின் மூன்று பழமையான நீர்நிலைகள்!
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நீர் கட்டமைப்புகளை உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளாகத் தேர்வு செய்து விருதுகளை அறிவித்திருக்கிறது சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம்.
சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID – International Commission On Irrigation And Drainage) ஒவ்வோர் ஆண்டும் உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு போன்றவற்றுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது. இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் (INCID – Indian National Committee on Irrigation and Drainage) அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதற்குத் தகுதியான பரிந்துரைகளை அனுப்பி வருகிறது.
அதனடிப்படையில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஆறு நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2021 ஜூலை மாதம் விண்ணப்பித்தது தமிழ்நாடு நீர்வளத் துறை.
அதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்தின் ஆய்வுக்குழு தமிழ்நாடு நீர்வளத் துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு உள்ளிட்ட மூன்று கட்டமைப்புகளுக்கு உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டுக்கு நான்கு விருதுகளை வழங்குகிறது சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு விருதுகளில் மூன்று தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வருகின்ற நவம்பர் மாதம் 7ஆம் தேதி வழங்கப்பட இருக்கின்றன.
**-ராஜ்-**
.