ஆண்களுக்கு நிகராக பெண்களும், நாளுக்கு நாள் எல்லா துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசால் இன்று தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. தற்போது திருவொற்றியூரில் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வீரலட்சுமி, மற்றும் அவரது கணவர் இருவரும் கார் ஓட்டுநர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த சேவை மனப்பான்மை கொண்ட வீரலட்சுமிக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
எனவே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்துக் காத்திருந்துள்ளார். மேலும் கடந்த ஒரு மாதமாக சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்ததாகவும், கொரோனா நோயாளிகள் உட்பட பல்வேறு நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, இந்த பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு 118 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளைத் தொடங்கி வைத்தார். இதில், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வீரலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வீரலட்சுமி பணியாற்றவுள்ளார்.
“சமூக அக்கறையுடன் சேவை ஆற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேண்டும் என்று விரும்பினேன். மூன்று ஆண்டுகாலமாக ஒட்டுநராக உள்ளேன். இதனால் எனக்கு எந்த சிரமும் இல்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேண்டும் என்று விண்ணப்பித்துத் தேர்வுக்கு வந்தேன், தற்போது தேர்வாகியுள்ளேன். ஆம்புலன்ஸ் பைலட்டாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. துறை ரீதியாகவும் , குடும்பத்தினரும் எனக்கு முழு ஆதரவு கொடுக்கின்றனர். எனவே ஆர்வமாக பணியில் ஈடுபடவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
வீரலட்சுமியின் வீர செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கயல்விழி என்ற இளம்பெண் தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்து வருகிறார். தற்போது வீரலட்சுமி தமிழகத்தின் இரண்டாவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்ற பெருமையை மட்டும் அல்லாமல் 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
**-கவிபிரியா**�,