iதமிழகம்: கொரோனாவை வென்ற 97 வயது முதியவர்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 50, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடலில் comorbid எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்தது.

ஆனால், தமிழகத்தில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 97 வயது முதியவர் கொரோனாவை வென்று குணமடைந்தது மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த அந்த முதியவரின் பெயர், கிருஷ்ணமூர்த்தி (97). ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மே 30ஆம் தேதி முதியவர், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்ததாக, மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர் சிகிச்சைகளும், புரதச் சத்துடைய உணவு வகைகளும் அளிக்கப்பட்டன. அதன் பயனாக அவருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு குறைந்து, செயற்கை சுவாசமும் நீக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

“மெதுவாக அவரது உடல்நலம் குணமடைந்தது. 5 முதல் 6 நாட்களில் அவர் எங்களுடன் நடந்துகொண்டே பேசத் தொடங்கினார்” என்று காவிரி மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதியவர் குணமடைந்து வீடு திரும்பிய போது எங்கள் அனைவருக்கும் ஒரு வித நல்ல உணர்வு ஏற்பட்டது என்று குறிப்பிட்ட அவர், ”கோவிட் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. எதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாம் அனைவராலும் போரை வென்று ஆரோக்கியமாக வாழ முடியும்” என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமான மிக வயதான நபர் கிருஷ்ணமூர்த்தி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share